சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்ய லஞ்சம் வாங்கிய விவகாரம், கொரோனா காலத்தில் உபகரணங்களை கொள்முதல் செய்ததுல முறைகேடுன்னு அதையும் தாண்டி இபபோ வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிச்ச வழக்குன்னு வசமாக சிக்கியிருக்காரு முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.  சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை மிக இழிவாக விமர்சனம் செய்தாருங்கிறதுக்காகவே விஜயபாஸ்கருக்கு 2013-ல் அமைச்சர் பதவியை கொடுத்தவர் ஜெயலலிதா. 2011-ல் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே குவாரி தொழில், கல்வி நிறுவனங்கள் என சகலத்திலும் கால் பதித்துவிட்டார் விஜயபாஸ்கர்.  2016 சட்டசபை தேர்தலில் அதிமுக ஜெயிச்சதும் சுகாதாரத்துறை அமைச்சரானார் விஜயபாஸ்கர். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 75 நாட்களும் அங்கேயே முகாமிட்டு சர்வ வல்லமை பொருந்திய சக்தியாக, சசிகலா தரப்பின் ஆகப் பெரும் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் விஜயபாஸ்கர். சசிகலா தரப்பில் செல்வாக்கு தாம் உட்பட மூத்த அமைச்சர்கள் யாரும் ஜெயலலிதாவை பார்த்துவிடக் கூடாது என விஜயபாஸ்கரும் அவரது ஆதரவாளர்களும் தடுத்தனர் என தர்மயுத்தம் நடத்திய காலத்தில் பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். சசிகலாவே கட்சி, ஆட்சி பொறுப்பேற்க வேண்டும் என குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் விஜயபாஸ்கர். அதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா பொறுப்பு அவரிடமே ஒப்படைக்கப்பட்டது. அதுவே வில்லங்கமாகவும் விஸ்வரூபம் எடுத்தது.

விஜயபாஸ்கரின் மலைக்க வைக்கும் சொத்துகள்… லஞ்ச ஒழிப்புத்துறையின் FIR பட்டியல்! தமிழகத்தில் குட்கா போதைப் பொருள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் சட்டவிரோதமாக குட்கா விற்பனை தொடர்ந்து நடந்துகிட்டுத்தான் இருந்தது. 2016-ல் எம்.டி.எம். குட்கா தயாரிப்பாளர் மாதராவ் வீடு, குடோன்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலருக்கும் லஞ்சம் கொடுத்ததற்கான டைரி சிக்கியது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவும் வழக்கு தொடர்ந்தது. அப்போ வருமான வரித்துறை தாக்கல் செய்த பிரமாண பத்திரம் நாட்டையே அதிர வைத்தது. அதில், ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் சோதனையிட்ட போது குட்கா விற்பனைக்கு சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தொடர்பாக ஜெயலலிதாவுக்கு முன்னாள் டிஜிபி அசோக்குமார் எழுதிய கடிதம் சிக்கியது. சசிகலாவின் அறையில் இந்த கடிதம் கிடைத்தது என வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. இதன்பின்னர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினாங்க. இந்த சோதனையின் போது அடுத்த பூதமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான பணப்பட்டுவாடா ஆவணங்களும் சிக்கியது. இதேபோல் பல முக்கிய ஆவணங்களை விஜயபாஸ்கரின் சென்னை வீட்டில் இருந்து ரெய்டு நடந்து கொண்டிருந்த போதே அவரது உதவியாளர்கள் எடுத்துக் கொண்டு சுவர் ஏறி தப்பி குதித்த சம்பவங்களும் நடந்தது.

சட்டசபை தேர்தலின் போது விஜயபாஸ்கர் மீதான குட்கா விற்பனைக்கு லஞ்சம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகிய விவகாரங்கள் திமுகவின் பிரசாரங்களில் முக்கிய இடம் பிடித்திருந்தது. சட்டசபை தேர்தலில் திமுக வென்று ஆட்சியை கைப்பற்றிய பின்னர், கொரோனா காலத்தில் சுகாதாரத்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கியிருக்கிறார் விஜயபாஸ்கர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான மொத்தம் 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது . வருமானத்துக்கு அதிகமாக ரூ27.22 கோடி சொத்துகள் குவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்ட மன்றத் தொகுதி உறுப்பினர் மற்றும் தமிழக அரசின் முன்னாள் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தான் பொது ஊழியராகப் பணிபுரிந்த 01.04.2016 முதல் 31.03.2021 வரையிலான காலகட்டத்தில் தனது பெயரிலும், தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.27.22.56,736/- அளவில் சொத்து சேர்த்துள்ளதாகக் கிடைக்கப்பெற்ற நம்பத் தகுந்த தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது.

புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு குற்ற எண். 04/2021 சட்டப்பிரிவுகள் 13(2) உ/இ 13(1)(e) ஊழல் தடுப்புச்சட்டம் 1988 மற்றும் 109 இ.த.ச மற்றும் சட்டப்பிரிவுகள் 13(2) r/w 13(1)(b), 12 திருத்தியமைக்கப்பட்ட ஊழல் தடுப்புச்சட்டம் 2018இன் படி 17.10.2021 அன்று சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 18.10.2021 .சி.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் நிர்வகிக்கும் அறக்கட்டளை மூலமாக நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களிலும் சேர்த்து மொத்தம் 50 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

புதுக்கோட்டை-32, திருச்சி-4, மதுரை-1, கோயம்புத்தூர்-2, காஞ்சிபுரம்-1, செங்கல்பட்டு-2 மற்றும் சென்னை-8 இடங்கள்லயும் இந்த சோதனை நடந்தது. இந்தச்சோதனையில் பணம் ரூ.23,85,700/-, தங்க நகைகள் 4870 கிராம் (4.87 கிலோ), 136 கனரக வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கண்டறியப்பட்டு, வழக்கிற்குத் தொடர்புடைய பணம் ரூ.23,82,700/-, 19 ஹார்டு டிஸ்குகள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்குது வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி அமைந்ததும் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி என பல அமைச்சர்கள் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு பதிவு செய்யப்பட்டு சோதனைகள் நடைபெற்றன. அப்போது எல்லாம் எப்போது சி.விஜயபாஸ்கர் சிக்குவார் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது. தற்போது விஜயபாஸ்கர் மற்றும் அவரது சொத்து குவிப்புக்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் என அத்தனை பேரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் சிக்கி இருக்கின்றனர்.