கொங்கு மண்டலத்தின் வெற்றி கவுண்டர்களின் வர்க்க அரசியலின் வெற்றி!

கொங்கு மண்டலத்தில் எடப்பாடியாரின் வெற்றிக்கு என்ன காரணம் ?
கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதியில 9 ல அதிமுக ஜெயிச்சிருக்கு. கோவைத் தெற்கில மட்டும் பிஜேபி வானதி ஜெயிச்சாங்க. திருப்பூர் மாவட்டத்தில (8 – இல் 5 வெற்றி), ஈரோடு மாவட்டத்தில (8 -இல் 5 வெற்றி), சேலம் மாவட்டத்தில (11 -இல் 10 வெற்றி) என 29 தொகுதியில அ.தி.மு.க அணி கொடி நாட்டியிருக்குது. ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலைமையில் தி.மு.க அணி 158 இடங்களை கைப்பற்றியிருக்கும் அலைக்கு நேர் எதிரான அலை இது.

இந்த கொங்கு மண்டல அலைங்கிறது கவுண்டர் சாதி அலையாகப் பார்க்கப்படுது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர் தான். இதில் ஒரு முரண்பாடு இருக்குது. என்னன்னா எடப்பாடியார் கவுண்டர் தலைமையின் வெற்றியாக மட்டும் இதை கணக்கில் கொண்டால் தி.மு.க மட்டும் சாதிக்கு அப்பாற்பட்டா வேட்பாளர்களை நிறுத்துச்சு ? இல்லையே! அதுவும் பெரும்பாலான வாக்காளர்களின் சாதி சார்ந்த வேட்பாளரைத்தான் களத்தில் இறக்குச்சு. அந்த வகையில கொங்கு மண்டலத்தில் பெரும்பாலான தொகுதிகளிலும் தி.மு.க கவுண்டர் சாதியினரைத்தான் வேட்பாளர்களாக நிறுத்துனாங்க..

ஆனாலும் எடப்பாடியார் தலைமையிலான கவுண்டர் மற்றும் கூட்டணியை தி.மு.க தரப்பிலான கவுண்டர் மற்றும் கூட்டணி வெற்றிபெற முடியலை. இத்தனைக்கும் எடப்பாடி பழனிச்சாமி கவுண்டரால் கவுண்டர் சமூகம் எதிர்கொண்ட உயிர்வாழும் சிக்கல் கொடுமையானது. “எட்டுவழிச் சாலை, கெயில் குழாய் பதிப்பு, உயர் அழுத்த மின்கோபுரம், எல்லாரையும் பாதிக்கிற ஜி. எஸ். டி வரியால் கொங்கு முதலாளிகளின் உயிரும் தூக்கில் தொங்குச்சி எல்லாரையும் போல் நீட் தேர்வு கொங்கு மக்களின் டாக்டர் கனவை பலிகொடுத்தது…” என நீளமானத.பட்டியல சொல்லிகிட்டே போகலாம்.

இவ்வளவுக்குப் பிறகும் ஏன் கொங்கு மக்கள் தி.மு.க கவுண்டர்களை நம்பாமல் எடப்பாடியார் தலைமையை ஏற்றுக்கொண்டது?

இதற்கு எளிதான ஒரு காரணத்தை சொல்லுவாங்க ! தேர்தலுக்கு தேர்தல் கொங்கு மக்கள் ஒவ்வொருவரும் சுயமாக சிந்திக்கிறார்கள் என்கிற மாயையில் இருந்து நாம் விடுபடணும். மாறாக மக்கள் வர்க்க சக்திகளால் அணி திரட்டப்படுகிறார்கள் என்கிற உண்மையின் அடிப்படையில் நிலைமையை பரிசீலிக்க வேண்டும்.

எல்லா சாதிகளில் நடப்பதைப் போலவே  கவுண்டர் சாதியிலும் மக்களை அணிதிரட்டும் ஆற்றல் அச்சாதியில் உள்ள ஆளும்வர்க்கத்துக்கே உரியது. கவுண்டர்களில் உள்ள ஆளும்வர்க்கம்தான் அணிசேர்க்கைக்கு பணத்தை வாரியிறைக்கிறது. அதுதான் தனது நலனுக்கு ஆதரவான கருத்தாளர்களை களத்தில் இறக்கிவிடுகிறது. செய்திகளை உருவாக்கி உலவவிடுகிறது. ஊடகங்கள் மற்றும் அனைத்து துறைகளிலும் லாபியை கட்டமைக்கிறது.ஒரு நல்ல உதாரணம் சொல்லணும்னா ஒவ்வொரு தேர்தல்யேயும் கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்கணுங்கிறத அவர்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் செல்கிற தேவாலயங்களின் பாதிரிமார்கள் தான் சொல்வாங்க. அதே மாதிரி இஸ்லாமியர்கள் யாருக்கு வாக்களிக்கணுங்கிறத அவங்க ஜமாத் தான் முடிவு பண்ணும்.ஆனா நம்ம நாட்டுல பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்கள் யாருக்கு வாக்களிக்கணுங்கிறச் சொல்றதுக்கு வலுவான இந்து மதத் தலைவர்கள் யாரும் இல்லை என்பதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

இப்ப கொங்கு மண்டலத்துக்கு வருவோம். எதையெல்லாம் செய்து எடப்பாடியார் தலைமையை தக்கவைச்சது?

தமிழ்நாட்டு ஆளும்வர்க்கங்களில், மூலதன உடைமையாளர்கள்ல கவுண்டர் சமூகம்தான் முன்னிலையானது. ஆடை ஏற்றுமதி, ஆலைத் தொழில், இயந்திர உற்பத்தி, ப்ராய்லர் கோழி – முட்டை வணிகம், ரியல் எஸ்டேட், கல்வி வணிகம், பணப்பயிர் வேளாண்மை…” ன்னு இதனோட பங்கு
அளவில்லாதது, செல்வாக்குடையதும் கூட.!

முதலாளித்துவ சமூகத்தில் மூலதன செல்வாக்குடையவர்கள்தான் அதிகாரத்திலும் முக்கியப் பங்காற்றி யிருக்காங்க பங்காற்றுவாங்க. ஆனால் தமிழ்நாட்டில் இது கொஞ்சம் தாறுமாறா இருக்குது. இடைநிலை சாதியரான கவுண்டர்கள் அ.தி.மு.க எனும் இடைநிலை சாதிகளுக்கான கட்சியை தங்களுக்கான  கட்சியாக நினைத்துக்கொண்டாலும் அ.தி.மு.க-வில் முக்குலத்தோருக்கே முதன்மையிடம் வழங்கப்பட்டது. இதற்கு காரணம், முக்குலத்தோர் சமூகத்திலும் மூலதன உடைமையாளர்கள் இருப்பது மட்டுமல்ல, கூடுதலாக வாக்கு வங்கியில் அவர்கள் அதிகப்படியானவர்களாக இருந்ததால் தான்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருந்த வரைக்கும் தென் மண்டலத்தில். உள்ள முக்குலத்தோருக்கு மரியாதை கொடுத்து வைத்திருந்தார்.அதுக்கு இன்னொரு காரணமும் உண்டு.அவருடன் இருந்த சசிகலா முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் கூடுதல் மரியாதை கிடைத்தது.அப்போ எல்லாருமே அதிமுகவ அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகம்னு சொன்னாங்க !

ஆக அ.தி.மு.க-வில் முக்குலத்து உடமையாளர்களுக்கும் கவுண்டர் உடமையாளர்களுக்கும் இடையில் முதல்நிலை அதிகாரத்துக்கானப் போட்டி நடந்துகொண்டே இருக்கும். இதில் இயல்பாக எப்போதும் முக்குலத்தோரின் ஆதிக்கமே இருந்து வந்த நிலையில் எதேச்சையாக எடப்பாடியார் மூலம் முதல்நிலை அதிகாரம் கவுண்டர்கள் பக்கம் வந்தது. ஆரம்பத்தில் அதை எடப்பாடியார் தனது தனிப்பட்ட நலனுக்கானதாக நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் உடைமை வர்க்க கவுண்டர்கள் அதை தங்களுக்கானதாக மாற்றும் வேலையில் இறங்கினாங்க .

எடப்பாடியார் முதல்வரானதும் மத்தியிலிருக்கும் பி.ஜே.பி அரசு தனக்கான முழு அடிமையாக அவரை வைத்து ஆட்டிப் பார்க்க நினைத்தது. ஆனால் உடைமை கவுண்டர்கள் அவருக்கு அரணாக நின்று பலம் சேர்த்தது. எடப்பாடியாரை முழு அடிமையாக நடத்த வேண்டாம் என்று உணர்த்துவதற்காக மத்திய அதிகாரத்திலிருக்கும் பி.ஜே.பிக்கு சில அதிர்ச்சியும் கொடுத்தது.

அவ்வகையில் கொடுத்த அதிர்ச்சிகளில் ஒன்று தான், “அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகள் பாலியல் வன்கொடுமை” சார்ந்தது. அதில் சம்பந்தப்பட்ட பெண் பேராசிரியரை கைது செய்வதை உடனடியாக செய்யாமல் நேரத்தையும் காலத்தையும் இழுத்தடித்ததன் மூலம் ஊடகங்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி, அந்த சம்பந்தப்பட்டதாக சொல்லப்படும் கவர்னரை சந்திக்கு இழுத்துவிட்டது. கவர்னரை பலிகொடுப்பது என்பது மத்திய அரசை நெருக்கடிக்கு ஆளாக்குவதாகும்.அதைச் செய்தும் காட்டினார்கள்.

இன்னொரு சம்பவம் என்னான்னா, “ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு” தனக்குத் தெரியாமல் நடந்தது என்று முதலமைச்சரான எடப்பாடியார் ஒதுங்கி கொண்டது.துப்பாக்கிச் சூட்டைப் பத்தி பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டாங்க.அப்பாவியா சிரிச்சுகிட்டே ஏங்க நானே டீவி பார்த்துதான் தெரிஞ்சிகிட்டேன்னு சொன்னாரு.அவர் அப்படிச் சொன்னதை ஊடகத்திலேருந்து எதிர்க்கட்சிகள் பொதுமக்கள் வரைக்கும் கடுமையான விமர்சனங்களை வைச்சாங்க.ஆனா அது தான் யதார்த்தமான உண்மையும் கூட. முதலமைச்சருக்கே தெரியாதுன்னா அவரைவிட சக்திவாய்ந்த மத்திய அரசுதான் இதை செய்தது என்று பொருள்படுத்தும் நடவடிக்கைன்னு அப்புறமாத்தான் எல்லாருக்குமே தெரியவந்திச்சு..

இதுபோல மத்திய அதிகார பி.ஜே.பியை நெருக்கடிக்குள்ளாக்கும் வேலைகள்ல கவுண்டர் சமூகம் சார்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான, பின்னர் கவர்னராக இருந்த ஒருவர் பின்னணியில் இருந்தார் என்பது பரவலான கருத்து. 2019 தேர்தல் நெருங்கிவந்த வேளையில் நடந்த இதுமாதிரியான சலசலப்புகள் பி.ஜே.பிக்கு பெரிய நெருக்கடியாக இருந்ததில சந்தேகமில்லை.

அதனாலத்தான் பி.ஜே.பி கொஞ்சம் இறங்கி வந்துது. எடப்பாடியாரை கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியத்துவமுடையவராக இருக்க உதவி செய்தது.

இவையனைத்துக்கும் பின்புலமாக இருந்தது கவுண்டர் சமூக ஆளும் வர்க்கம்தான். இந்த ஆளும் வர்க்கத்துக்கு ஜி.எஸ்.டியை காட்டிலும், நீட் தேர்வைக் காட்டிலும், உயரழுத்த மின்கோபுர ஆபத்தைக் காட்டிலும், கெயில் குழாய் பாதிப்பைக் காட்டிலும், எட்டுவழிச் சாலை துன்பத்தைக் காட்டிலும் முதல் நிலைங்கிறது அதிகாரம் தான் முக்கியமானதாக இருந்தது இன்னமும் இருக்குது.

அதிகாரம் கையிலிருந்தால் அனைத்தையும் சாதிக்கலாம் என்கிற ஆளும்வர்க்கத்தின் அடிப்படை குணம்தான் முதல்நிலை அதிகாரத்தை பெற்றுதந்த எடப்பாடியாரை ஆதிரிக்க வைத்தது. தி.மு.க-வும் கவுண்டர்களைத் தான் வேட்பாளர்களாக நிறுத்துனாங்க. ஆனாலும் அவங்களுக்கு இரண்டாம், மூன்றாம் இடம்தான் கிடைக்கும்ங்கிறதுனால புறக்கணிக்க வைத்தது. கொங்கு மண்டலம் எடப்பாடியார் மூலமான கொங்கு உடைமையாளர்களின் கோட்டையாக நீடிக்குது.

இது வெறும் சாதி அரசியல் வெற்றியல்ல. சாதிதான் முதன்மையென்றால் கொங்கு மக்களின் வாழ்வைப் பறிக்கும் எட்டுவழிச் சாலை, உயரழுத்த மின்கோபுரம், கெயில் குழாய் பதிப்பு, ஜி.எஸ்டி, நீட் என எல்லா கொடுமைகளுக்கு எதிராகவும் தி.மு.க கவுண்டர் வேட்பாளர்களைத்தான் ஆதரித்திருப்பார்கள். ஆனால் இது வர்க்க அரசியலாக இருக்கிறதுனாலத்தான் முதல்நிலை அதிகாரத்துக்காக எடப்பாடியார் அணியை பாதுகாத்து வெற்றிபெற வைத்துள்ளது.

.