அனிமேஷன் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி எதிர்பார்ப்பு உண்டு. அனிமேஷன் படங்கள் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, அது பெரியவர்களிடம் இருக்கும் குழந்தைத்தன்மையை வெளியில் கொண்டு வரும் சக்தி வாய்ந்தது. மொழிகள் மற்றும் எல்லைகள் தாண்டி ரசிகர்கள் மத்தியில் அனிமேஷன் படங்களுக்கு அளவுக்கடந்த அன்பு உள்ளது. சமீபகாலமாக இந்திய சினிமாவில் வெளியாகும் அனிமேஷன் படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுகள் பெறுவதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. இருந்தாலும் அனிமேஷன் படங்களின் உண்மையான வெற்றியே அனைத்து தரப்பினரையும் கவர்ந்து எண்டர்டெயின் செய்வதிலேயே இருக்கிறது. இனிகா புரொடக்சன்ஸ் தங்கள் முதல் அனிமேஷன் தயாரிப்பான ‘கிகி & கொகொ’ திரைப்படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது.
குழந்தைகளின் கல்வி மற்றும் எண்டர்டெயின்மெண்ட்டில் புதிய கண்ணோட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்தியாவின் முதல் அனிமேஷன் திரைப்படமான ‘கிகி & கொகொ’வை அறிமுக இயக்குநர் பி. நாராயணன் இயக்குகிறார். கிகி என்ற அன்பான செல்லப்பிராணிக்கும் கொகொ என்ற இளம் பெண்ணுக்கும் இடையிலான அழகான கதையை இந்தப் படம் சொல்கிறது. அவர்களின் பயணம் அன்பு, வாழ்க்கை பாடங்கள் என தலைமுறைகள் தாண்டி பார்வையாளர்கள் மனதைத் தொடும் மேஜிக்கல் தருணங்களைக் கொண்டிருக்கிறது.
இயக்குநர் பி. நாராயணன் பகிர்ந்து கொண்டதாவது, “வேறு எதையும் விட குழந்தைகளுக்கு கல்வி தொடர்பான படங்கள்தான் இன்றைய தேவை. அந்த வகையில், ‘கிகி & கொகொ’ படத்தில் நட்பு, அன்பு, குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு இடையிலான உறவு பற்றி பேசியிருக்கிறோம். பார்வையாளர்களுக்கு இந்தப் படத்தை திரையிட்டு காட்ட ஆர்வமுடன் இருக்கிறோம்” என்றார்.
இனிகா புரொடக்சன்ஸ் டீம் பகிர்ந்து கொண்டதாவது, “‘கிகி & கொகொ’ வெறும் படம் மட்டுமல்ல! அதையும் தாண்டியது. நட்பு, அன்பு, கதை சொல்லல் மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்வது ஆகியவற்றின் கொண்டாட்டமாக இந்தப் படம் இருக்கும். திறந்த மனதுடன் இந்த மேஜிக்கல் பயணத்தைப் பார்க்க அனைவரையும் வரவேற்கிறோம்”.
திரையரங்குகளுக்கு அப்பாற்பட்ட அனுபவமாக ‘கிகி & கொகொ’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு அமையும். குழந்தைகளுக்கான கல்வி நோக்கத்துடன் எடுக்கப்பட்ட இந்தப் படம் குடும்ப பார்வையாளர்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும்!