ஹரா-விமர்சனம் !

வெள்ளி விழா நாயகன் என கொண்டாடப்பட்ட மோகன் 1999ம் ஆண்டு ‘அன்புள்ள காதலிக்கு’ படத்தை இயக்கி நடித்திருந்தார். அந்த படத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த மோகன் 2008ம் ஆண்டு ‘சுட்டப் பழம்’ படத்தில் நடித்திருந்தார். இதற்கு மேல் மோகன் நடிக்காமலே இருக்கலாம் என கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதன் பின்னர் சினிமாவை விட்டு பல வருடங்கள் ஒதுங்கியிருந்த மோகன் தற்போது மீண்டும் நடிகராக மாறியுள்ளார்.   தளபதி விஜய்யின் கோட் படத்தில் மோகன் தான் வில்லன் எனக் கூறப்படுகிறது. ஆனால், முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார் என்பது உறுதியாக தெரிகிறது. கோட் படத்துக்கு முன்பாக அவர் ஹீரோவாக நடித்துள்ள ஹரா திரைப்படம்  வெளியாகியிருக்கிறது.மோகன், அனுமோள், சாருஹாசன் இசை: ரசாந்த் அர்வின் இயக்கம்: விஜய் ஸ்ரீ  ஆக்‌ஷன் நாயகனாக மோகன் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், அவருக்கு இந்த படம் வெற்றிப் படமாக அமையுமா? அல்லது எப்படி இருக்கப் போகுது என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.கோயம்புத்தூரில் மனைவி மற்றும் மகளுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் ராம் (மோகன்). திடீரென ஒருநாள் மகள் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக
தகவல் வரவே, குடும்பம் நிலைகுலைகிறது. இதன்பிறகு இப்ராஹீம் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு தனது மகளின் தற்கொலைக்கு காரணம் யார் என்ற விசாரணையில் இறங்குகிறார்.. மருத்துவத் துறையில் நடைபெறும் ஊழல் குறித்து என்னை அறிந்தால், காக்கிச் சட்டை, பைரவா உள்ளிட்ட சில படங்களில் கூறப்பட்டுள்ள நிலையில், அந்த வகையறா படம் தான் இந்த ஹரா. ஆக்‌ஷனில் அதகளப்படுத்தும் . நடிகர் மோகன் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை தனது உடல் மொழியாலும் தனது வசனங்களாலும் ரசிகர்களை முடிந்தவரை கட்டிப் போடுகிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது வயதுக்கு ஏற்ப சண்டைக் காட்சிகளை சண்டை இயக்குநர் உருவாக்கி உள்ளார். மோகனின் மனைவியாக அனுமோள் சில காட்சிகளில் வந்து செல்கிறார். வில்லனாக சுரேஷ் மேனன் நடித்துள்ளார். யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மகளாக நடித்த அனித்ரா நாயர், வனிதா விஜயகுமார், மைம் கோபி என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். மோகனின் நடிப்பு இந்த படத்துக்கு பெரிய பலமாக உள்ளது. பல வருடங்கள் ஆனாலும் தனக்கு தெரிந்த நடிப்பை அவர் அவ்வளவு எளிதில் மறந்து விடவில்லை என்பதை அனைத்து இடங்களிலும் நிரூபித்துள்ளார். ரசாந்த் இசை மற்றும் பிரகாஷ் முனுசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
இன்னொருபுறம் ஹீரோவால் ஒருகாலத்தில் பாதிக்கப்பட்டு வேலை, குடும்பத்தை இழந்த முன்னாள் போலீஸ்காரர் ஒருவர் தலைமையிலான ஆட்கள் இவரை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கின்றனர். தனது மகளின் மரணத்துக்கான காரணம் குறித்த தேடலின்போது ஹீரோ செய்யும் சில வேலைகள் போலீஸின் கவனம் இவரை நோக்கி திரும்புகின்றன. மோகனைத் தவிர்த்து மற்றவர்களுக்கான கதாபாத்திர வடிவமைப்பு இயக்குநர் விஜய் ஸ்ரீ சரியாக எழுதவும் இல்லை உருவாக்கவும் இல்லை என்று தான் தோன்றுகிறது. சாருஹாசனை வைத்து வேலு நாயக்கராக காட்டிய இடமெல்லாம் படத்திற்கு கை கொடுக்கவில்லை. கல்லூரி பெண்களை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துவது, அதனால், மாணவிகள் தவறான முடிவை எடுப்பது போன்ற விஷயங்களை பல படங்களில் பார்த்து விட்ட நிலையில், கதை மற்றும் திரைக்கதையில் எந்தவொரு புதுமையும் தெரியவில்லை. பாடல்களும் சுமார் ரகம் தான். படத்தில் ஆறுதலான ஒரே விஷயம் மோகன் மட்டுமே. எந்தவித அலட்டலும் இல்லாமல் நிதானமான நடிப்பை வழங்கி தன்னால் முடிந்த அளவுக்கு படத்தை காப்பாற்ற முயல்கிறார். எமோஷனல் காட்சிகளிலும் அவருடைய மெனக்கெடல் தெரிகிறது. ஆனால், இவை எதுவும் படத்தின் மோசமான திரைக்கதை மற்றும் மேக்கிங் முன்னால் எடுபடவில்லை. படத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க நடிப்பை கொடுத்திருப்பவர் அனுமோள். சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார். இவர்கள் இருவர் தவிர மற்ற யாருடைய நடிப்பும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க முடிவு செய்த மோகன் நல்ல திரைக்கதையும், நேர்த்தியான காட்சியமைப்புகளும் கொண்ட ஒரு கதையை தேர்வு செய்திருந்தால் தமிழ் சினிமாவின் சில்வர் ஜூபிளி ஸ்டாருக்கு ஓர் உண்மையான கம்பேக் கிடைத்திருக்கும்.
மொத்தத்தில் ஹரா படம் மோகன் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் பரிசாக இருக்கலாம்.