தமிழக மின்வாரியம் வளர்ச்சிப்பாதையில், பயணித்து வருகிறது. கடந்த முன்று ஆண்டுகளில், பல்வேறு திட்டங்களால், 2,788 மெகாவாட் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழக மின்வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் என, மறு சீரமைக்கப்பட்டு, நுகர்வோருக்கு மின் சேவை வழங்கி வருகிறது. மாநிலத்தில், மொத்தம், மூன்று கோடியே மூன்று லட்சம் மின் நுகர்வோர் உள்ளனர். மாநில மின் தேவையை பூர்த்தி செய்ய, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், 18 ஆயிரத்து 500 மெகாவாட் மின் நிறுவு திறனை பெற்றுள்ளது.
இது தவிர, மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களான காற்றாலை, சூரிய சக்தி, தாவரக்கழிவு மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் வாயிலாக, 13 ஆயிரத்து 395 மெகாவாட் மின் நிறுவுத் திறன் பெற்றுள்ளது. இந்த மின் பகிர்மான கட்டமைப்பு, 1,770 துணை மின்நிலையங்கள், 3.23 லட்சம் பகிர்மான மின்மாற்றிகள், 34 ஆயிரத்து 969 சுற்று கி.மீ., அதி உயர் அழுத்த மின்பாதை (இ.எச்.டி.,), 1.81 லட்சம் கி.மீ., உயர் அழுத்த மின்பாதைகள் (எச்.டி.,). 6.34 லட்சம் கி.மீ., தாழ்வழுத்த மின்பாதைகளை (எல்.டி.,) கொண்டுள்ளது. மின் தேவைக்கும், மின் உற்பத்திக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்க, புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், தற்போது மின்மிகை மாநிலமாக திகழ்கிறது.
இது குறித்து மின் வாரிய துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 2011ம் ஆண்டு முதல் தமிழக மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்ட மின்உற்பத்தி நிறுவுதிறன், 15 ஆயிரத்து 410 மெகாவாட் ஆக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில், 2,788 மெகாவாட் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் சராசரி மின்தேவை, 15 ஆயிரம் முதல் 15 ஆயிரத்து 500 மெகாவாட் ஆக உள்ளது.எனினும், அதிகபட்ச மின்தேவையான, 16 ஆயிரத்து 151 மெகாவாட்டை, கடந்த ஆண்டு ஏப்., 3ம் தேதி பூர்த்தி செய்தது. தினமும் சராசரி மின்நுகர்வு 30 லட்சம் யூனிட் ஆக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், மொத்த மின்நுகர்வு, 890 லட்சம் யூனிட் அதிகரித்துள்ளது. அதேபோல், மின்நுகர்வோர் எண்ணிக்கையும், 2.79 கோடியில் இருந்து, 3.03 கோடியாக அதிகரித்துள்ளது.கடந்த, 2016 -17ல், 70 துணைமின் நிலையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2018 – -19ல், 400 கிலோ வாட் திறனில், 105 துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டன. 2019- – –20ம் ஆண்டு, 119 துணை மின்நிலையங்கள் உருவாக்கப்பட்டன.
கடந்த மூன்று ஆண்டுகளில், முக்கிய சாதனை யாக அரியலுார் — திருவளம், 765 கிலோ வாட் மின் தொடரமைப்பு, ஆயிரத்து 30 கோடி ரூபாய் செலவில் சொந்தமாக நிறுவப்பட்டுள்ளது. வடசென்னையில், 3,911 கோடி ருபாய் மதிப்பில் 765 கிலோவாட் திறனிலும், மணலியில், 600 கோடி ரூபாய் செலவில், 400 கிலோ வாட் திறனிலும், வளிம காப்பு துணை மின்நிலையங்கள் (காஸ் இன்சுலேட்டர்) நிறுவப்பட்டன. கோவை செல்வபுரத்தில், முதல் முறையாக 230 கிலோவாட் டிஜிட்டல் துணை மின்நிலையம், 65 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டு வருகிறது.
கடந்த, மூன்று ஆண்டுகளில், 25.34 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. 2017 ஜூன் 12ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஒரு நாள் திட்டத்தில் மட்டும், ஏழு லட்சத்து 21 ஆயிரத்து 706 இணைப்புகள் வழங்கப்பட்டன. 2017 ஜூலை 15ல் அமலான, ‘ஏழு நாட்களுக்குள் இணைப்பு’ திட்டத்தில், 88 ஆயிரத்து 703 தொழில் நிறுவனங்களுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் எங்கும் இல்லாத அளவுக்கு மரபுசாரா எரிசக்தியை ஒருங்கிணைத்து, பல்வேறு ஆதாரங்களை உள்ளடக்கியதாக, தமிழக மின்துறை செயல்படுகிறது. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்