வருமான வரியில் இப்போதைக்கு மாற்றம் இல்லை..!

சமீபத்தில் நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடையும் விதத்தில், வருமான வரி விகிதங்களில் சில மாற்றங்கள் வரலாம் என சில செய்திகள் பரவிக் கொண்டிருந்தது. அந்த எதிர்பார்ப்புகள் எதுவும் இப்போதைக்கு நடக்காது என விஷயம் தெரிந்த சில அதிகாரிகள் சொல்லி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.அதற்கு காரணமாக கடந்த காலங்களில் நடந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு, ஏற்றுமதி வியாபாரங்களுக்கு கொடுத்த சில வரி குறைப்புகள் போன்ற காரணத்தால், அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்கிறார்கள்.

அதோடு கடந்த சில மாதங்களாக சரக்கு மற்றும் சேவை வரி கூட நிர்ணயித்த இலக்கில் வசூலிக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே மேற்கொண்டு வருமான வரியையும் குறைக்கும் திட்டம், அரசுக்கு இல்லை என அந்த விவரம் தெரிந்த அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்களாம்.

அதோடு தனி நபர்களுக்கு, ஏற்கனவே போதுமான அளவுக்கு வருமான வரிச் சலுகைகள் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். அதாவது இந்த 2018-19 நிதி ஆண்டில் 5 லட்சம் ரூபாய்க்குள் சம்பளம் வாங்குபவர்கள், ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டியது இல்லை எனச் சொல்லப்பட்டு இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.அதோடு 1.5 லட்சம் ரூபாய்க்கு, வருமான வரிச்சட்டம் 80சி-ன் கீழ் முதலீடு மற்றும் இன்சூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்து வருமானத்தை கழித்துக் கொள்ளலாம். அதோடு வீட்டுக் கடனுக்குச் செலுத்தும் வட்டியை மட்டும் வருமான வரிச் சட்டப் பிரிவு 24-ன் கீழ் காண்பித்து சுமார் 2 லட்சம் ரூபாய் வரை வரிக் கழிவு பெறுவது என பல வசதிகள் நடுத்தர மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள் அதிகாரிகள்.அதோடு ஏழை பணக்காரன், அதிகம் சம்பாதிப்பவர், நடுத்தர சம்பளதாரர் என எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் நிலையான கழிவுகள் (Standard Deduction) என்கிற பெயரில் 50,000 ரூபாயை எல்லோரும் தங்கள் வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ளும் விதத்தில் கொண்டு வந்து இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்களாம்.