மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களை, ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் ?

மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களை, ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என, இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து, இந்த சங்கத்தின் தலைவர், பங்கஜ் மொகிந்ரூ கூறியதாவது:நாடு முடக்கப்பட்டிருக்கும் நிலையில், ‘மொபைல் போன், லேப்டாப், கம்ப்யூட்டர்’ ஆகியவற்றை, ‘ஆன்லைன்’ மூலம் விற்பனை செய்யவும், பழுது நீக்கி தரவும் அரசு அனுமதிக்க வேண்டும். வீட்டிலிருந்து பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது உள்ளிட்டவற்றுக்கு, இவற்றின் தேவை மிகவும் அத்தியாவசியமாகும்.

நாடு முடக்கப்பட்டிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சில்லரை விற்பனை ஸ்டோர்களை திறக்க விரும்பவில்லை.ஆனால், ஆன்லைன் மூலமாக, போன்களை விற்பனை செய்ய அனுமதிக்க கோருகிறோம். தொற்று நோய்க்கு ஆளானவர்களை, மொபைல் போன் மூலமாக அரசு கண்காணித்து வருகிறது. இந்நிலையில், அவர்கள் போனில் பழுது ஏற்பட்டால், புதிய போனை வாங்கவோ அல்லது பழுதை நீக்கவோ தேவையான வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

எனவே, ஆன்லைன் மூலம், மொபைல் போன் விற்பனைக்கும், வினியோகத்துக்கும் அனுமதி வழங்க வேண்டும். மேலும் போனை பழுது நீக்கவும், பராமரிக்கவும் தேவையான கடைகளை திறக்கவும் அனுமதிக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், மொபைல் போன் அத்தியாவசிய பொருட்களின் வரிசையில் சேர்க்க வேண்டிய ஒன்றாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.