மினிமம் பேலன்ஸ் விதிகள் ரத்து? மறுபரிசீலனை செய்கிறது ரிசர்வ் வங்கி ?

மினிமம் பேலன்ஸ் விதிகள் ரத்து? மறுபரிசீலனை செய்கிறது ரிசர்வ் வங்கி
ஹைலைட்ஸ 3 ஆண்டுகளில் மினிமம் பேலன்ஸ் குறைவுக்கான அபராதமாக 10 ஆயிரம் கோடி வசூல்.மினிமம் பேலன்ஸ் விதிகளைத் தொடர்வதா என ரிசர்வ் வங்கி மறுபரிசீலனை.

வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பேணுவது குறித்த கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்வதாக ரிசர்வ் வங்கிதெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை வியாழக்கிழமை வெளியானது. இதில், வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை (மினிமம் பேலன்ஸ்) பேணுவதன் அவசியத்தையும் அதன் பேரில் அபராதம் வசூலிப்பது குறித்தும் மறுபரிசீலனை செய்வதாகக் கூறியிருக்கிறது. மினிமம் பேலன்ஸ் எவ்வளவு இருக்க வேண்டும்? அதற்குக் குறைந்தால் வசூலிக்கப்படும் அபராதம் எவ்வளவு? போன்ற விவரங்களை வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. தனியார் மற்றும் அயல்நாட்டு வங்கிகள் 600 ரூபாய் வரை அபராதம் பெறுகின்றன.
அதுவும் மெட்ரோ நகரங்கள், நகரங்கள், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் என கணக்கு வைத்திருக்கும் வங்கியின் இருப்பிடத்தைப் பொருத்தும், குறைந்தபட்ச இருப்புத்தொகை மற்றும் அபாரதம் மாறுகிறது.
தற்போதைய விதிமுறைகளின்படி, வங்கிகள் மினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குதாரர்களுக்கு எஸ்எம்எஸ், ஈமெயில் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். மினிமம் பேலன்ஸ் இருக்கும்படிச் செய்ய அவர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் அளிக்க வேண்டும். மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத் தொகை அளவில் மாற்றம் செய்யப்பட்டாலும் முறையாக தெரியப்படுத்த வேண்டும்.

ஜூன் 10ஆம் தேதி ஆர்பிஐ வெளியிட்ட வங்கிகளில் அடிப்படை சேமிப்புக் கணக்கு டெபாசிட் தொடர்பான விதிமுறைகளில், மாதம்தோறும் குறைந்தபட்சம் நான்கு முறை பணம் எடுக்கு அனுமதிப்பது, ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு வழங்குவது, மற்றும் எந்த வரம்பும் இல்லாமல் பணத்தை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய அனுமதிப்பது போன்றவை கட்டயாமாக்கப்பட்டுள்ளன. பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் அவசியம். இல்லை ஜன்தன் கணக்குகளுக்கு மட்டும் குறைந்தபட்ச இருப்புத்தொகையிலிருந்து விலக்கு தரப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், மினிமம் பேலன்ஸ் இல்லை என்ற காரணத்துக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளனர் என்று மக்களவையில் அரசு தெரிவித்துள்ளது. 18 பொதுத்துறை வங்கிகள் 6,155 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில், நான்கு பெரிய தனியார் வங்கிகள் 3,567 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளன. வங்கிகளில் நேரில் சென்று தனிநபர் விவரங்களை தருவதற்குப் பதிலாக, வீடியோ கான்பரன்சிங் முறையை அனுமதிக்கவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு வங்கிகள் ஆதார் விவரங்களை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, ஆன்லைனில் வங்கிக் கணக்கு தொடங்குவது அதிகமாகியிருக்கிறது.