மருந்து, மருத்துவச் சாதனங்களுக்கு பற்றாக்குறை ? இந்திய மருந்துகள் துறை எச்சரிக்கை ?

மருந்து, மருத்துவச் சாதனங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுவரும் பல்வேறு பிரச்சினைகளினால் எதிர்வரும் வாரங்களில் நாடு முழுவதும் பற்றாக்குறைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய மருந்துகள் துறை மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருந்து உற்பத்தி என்பது வெறும் மருந்துகள் துறையோடு நின்றுவிடுவதில்லை. லாக் டவுன் காலத்தில் முடங்கியுள்ள பல்வேறு துறைகள் சார்ந்தது. தற்போதைய லாக் டவுன் சூழ்நிலையிலேயே மருந்து உற்பத்தியை மீண்டும் தொடங்க தேவையான உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய மருந்துகள் துறை வலியுறுத்தியுள்ளது.உலகமே கரோனா வைரஸ் என்னும் மோசமான ஆட்கொல்லி கிருமியால் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்தியாவிலும் அதன் ஊடுருவல் நாட்டின் இயல்புத்தன்மையையே முடக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. இதனால் மருந்துகள் மட்டுமே உச்சபட்சத் தீர்வு என்ற நிலையில் இந்தியாவின் மருந்து உற்பத்தி உலக சந்தையிலும் பெரும் தேவையாக உள்ளது. அதே நேரம் இந்திய மக்களுக்கும் இன்றைய நிலையில் தவிர்க்கமுடியாத ஒன்றாக உள்ளது.

ஆனால், லாக் டவுன் காரணமாக மருந்து உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருந்து மற்றும் மருத்துவ சாதனங்களுக்கு விரைவில் பற்றாக்குறை ஏற்படும் என்ற எச்சரிக்கையை முன்கூட்டியே இந்திய மருந்துகள் துறை மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.பல்வேறு தொழில்துறை அமைப்புகளின் கருத்துப்படி, மருந்து மற்றும் மருத்துவச் சாதன உற்பத்தியாளர்கள், லாக் டவுனின்போது சராசரியாக 20% -30% திறன் என்ற அளவில் மட்டுமே செயல்பட்டு வருகின்றனர் என்று மருந்துத் துறை செயலாளர் பி.டி. வாகேலா ஏப்ரல் 9-ம் தேதி உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டினார்,

மார்ச் 24ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த மூன்று வார தேசிய ஊரடங்கின்படி மருந்துகள், தடுப்பூசிகள், முகக்கவசங்கள் மற்றும் அவற்றின் துணைப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள உற்பத்திப் பிரிவுகளுக்கு ஊரடங்கிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.பல மாநிலங்கள் ஏற்கெனவே போக்குவரத்து மற்றும் உற்பத்திக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா மற்றும் பிரதமரின் முதன்மைச் செயலாளர், மார்ச் 22 அன்று நடந்த மறுஆய்வுக் கூட்டத்தில், இதுபோன்ற உற்பத்திப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளை வலியுறுத்தியிருந்தனர்.

இதுகுறித்து இந்திய மருந்துகள் துறை மத்திய சுகாதாரத் துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

‘விரைவில் லாக் டவுனுக்கு முந்தைய நிலையில் இருந்த உற்பத்தி நிலையை எட்டவில்லை என்றால், இது வரும் வாரங்களில் மருந்துகள் மற்றும் மருத்துவச் சாதனங்களின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.
உலகளாவிய சந்தைகள் இந்தியாவுக்குச் சிறந்த விலையை வழங்குகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இதனால்தான் இந்தியாவின் மருந்துகளின் உற்பத்தியில் பாதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் இப்போதுள்ள கடும் நெருக்கடியான சூழ்நிலையில் ஏற்றுமதி என்பது உள்நாட்டுச் சந்தையில் கடும் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். சரியான நடவடிகைகள் மூலம் சரியான திட்டங்களுடன் தவிர்க்க முடியக்கூடிய இந்த மோசமான சூழ்நிலையைத் தடுக்கவேண்டும்.அப்போதிருந்து, மத்திய உள்துறைச் செயலாளர் அனைத்து மாநில அரசுகளுக்கும், அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தி வந்தார்.

அவர் பலமுறை இதைக் குறிப்பிட்டாலும் பலமுறை தவறவிட்ட விஷயங்களில் முக்கியமாக மருந்து சார்ந்த பிற துறை சம்பந்தப்பட்டவை என்பதில் அடிப்படையில் இன்னும்கூட மாற்றமடையவில்லை. எனவேதான் மருந்துத் துறை இந்தப் பிரச்சினையை புதிதாக எழுப்ப வேண்டிள்ளது.எதிர்வரும் நாட்களில் நம் நாட்டில் மருந்துக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இப்போதுள்ள பின்தங்கிய மிகவும் மந்தமான உற்பத்திநிலைதான் காரணமாக இருக்கும்.பல மருந்தகப் பிரிவுகளில் முட்டுக்கட்டைகள் ஏற்பட்டுள்ளன. தொழிலாளர், போக்குவரத்து மற்றும் கூரியர் சேவைகள் கிடைக்காதது என்பன உள்ளிட்ட பல மிகப்பெரிய பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும் உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறையினரால் அத்தியாவசியமாக கருதப்படாத பல துணைத் தொழில்கள் மூடப்பட்டுள்ளன என்பதை சுகாதாரத் துறை அமைச்சகம் கருத்தில் கொள்ள வேண்டும்.பொதுப் போக்குவரத்து வாய்ப்புகள் இல்லாததால் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்கள் தலைகீழாக இடம்பெயர்ந்துள்ளனர். குடும்ப மற்றும் உள்ளூர் சமூக அழுத்தங்களுடன் இணைந்து காவல்துறை நடவடிக்கை குறித்த பயமும் சேர்ந்துகொண்டுள்ளது. இதெல்லாம்தான் தொழிற்சாலைகளை இயல்பான திறனைக் காட்டிலும் குறைவாக இயக்குவதற்கான காரணிகள் ஆகும்.

மருந்துத் துறையை தங்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களைத் தங்கள் சொந்த இடங்களிலிருந்து திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும். மெட்ரோ நகரங்களிலும், அடுக்கு 1 மற்றும் அடுக்கு 2 நகரங்களிலும் கூரியர் சேவைகளை முழுமையாக செயல்படச் செய்யுமாறு வலியுறுத்துகிறோம். கூரியர் சேவைகள் மருந்துகள் மற்றும் மருத்துவச் சாதனங்களின் இயக்கத்தை உறுதி செய்வதில் முக்கியமானவை.லாக் டவுன் காரணமாக பல ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை நெடுஞ்சாலைகள் அல்லது தாபாக்களில் விட்டுவிட்டு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் தங்கள் வாகனங்களை அடைய அனுமதிக்காவிட்டால், அந்த வாகனங்கள் சிக்கித் தவிக்கும். இதனால் அவை மருந்து உற்பத்திக்கான அத்தியாவசிய துணைத் தொழில்கள் அனைத்தையும் முடக்கும்.மருந்து உற்பத்திற்கான துணைத் தொழில்களின் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

மருந்தக அலகுகள் முழுமையாக இயங்குவதற்கான தேவையை பூர்த்தி செய்ய மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் உணர்வோடு செயல்பட வழிவகை செய்யப்பட வேண்டும். மருத்துவத் துணைத் தொழில்களுக்கு உதவும் வணிக உரிமங்களைக் கொண்ட ஓட்டுநர்கள் ஒரு லாக் டவுன் பாஸ் வாகனத்துடன் அல்லது அது இல்லாமல் செல்ல அனுமதிக்க வேண்டும்’’.

இவ்வாறு மருந்துகள் துறை மத்திய சுகாதாரத் துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.