பேடிஎம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது. இதுபற்றி அந்த நிறுவனத்தின் நிறுவனர் விஜயசேகர் ஷர்மா, சமூக வலைத்தள பக்கங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.தயவுசெய்து எந்த ஒரு எஸ்எம்எஸ் அல்லது இமெயில் மெசேஜாவது உங்களது வாடிக்கையாளர் தகவல்களை கேட்டு வந்திருந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம். இவையெல்லாம் மோசடி மெசேஜ்கள், பேடிஎம் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும் என்று கூறிக்கொண்டு உங்களது முழு விபரங்களையும் கேட்டு மெசேஜ் வரலாம். இதை நம்ப வேண்டாம். இது தவிர குலுக்கல் முறையில் உங்களுக்கு பரிசு கிடைக்கிறது என்றும் மோசடியாளர்கள் எஸ்எம்எஸ் அல்லது ஈமெயில் மூலமாக தகவல் அனுப்புகிறார்கள். இதையும் நம்பவேண்டாம். பேடிஎம் எப்போதுமே இதுபோன்ற தகவல்களை கேட்பதில்லை. எந்த ஒரு அப்ளிகேசனையும் டவுன்லோட் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவதும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பேடிஎம் இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிடுவதற்கு காரணம் சமீபத்தில் அதிகரித்துள்ள மோசடிகள்தான் என்று கூறப்படுகிறது.
மோசடியாளர்கள் எவ்வாறு மோசடி செய்கிறார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படி ஏமாந்ததில், சிலர் கூறியது இதுதான்: எங்களுக்கு பேடிஎம் தரப்பிலிருந்து எஸ்எம்எஸ் வருவது போல ஒரு தகவல் வந்தது. அதில் செல்போன் அல்லது டெஸ்க்டாப் அப்ளிகேஷன் சில பெயர்கள் குறிப்பிடப்பட்டு, அவற்றை டவுன்லோட் செய்து, அதில் வாடிக்கையாளர்களின் முழு விபரங்களும் தெரிவிக்கப்பட வேண்டும், அல்லது பேடிஎம் கணக்கு முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு வந்த மெசேஜ்களை நம்பி அந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து அதில் படிவங்களை நிரப்பினோம். அதன் பிறகுதான் தெரிந்தது அந்த அப்ளிகேஷன் வழியாக நமது செல்போனில் உள்ள தகவல்களை டீம் வியூவர் போன்ற வசதியை பயன்படுத்தி, மோசடியாளர்கள் பார்க்க முடியும் என்பது. இவ்வாறு நமது பாஸ்வேர்ட், மொபைல் வாலட், வங்கி கணக்கு உள்ளிட்ட பல தகவல்களையும் நமது செல்போனில் இருந்து திருடி கொண்டு பணத்தை கொள்ளையடிப்பது தான் இவர்கள் வேலையாக இருந்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே, இவ்வாறு ஏமாற்றமடைந்த வாடிக்கையாளர்கள் அதுகுறித்த தகவல்களை பேடிஎம் நிறுவனம் மற்றும் காவல்துறையினரிடம் தெரிவிக்கும்படி அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.