எல்.ஐ.சி-க்கு தலைவலி தரும் நிறுவனங்கள்! சிக்கலில் எல்.ஐ.சி ?

வங்கிசாரா நிதி நிறுவனங்களின் நிதி நெருக்கடிகள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக இந்திய நிதிச் சந்தைகளில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஐ.எல்.எஃப்.எஸ் நிறுவனத்தில் தொடங்கிய இந்த நிதி நெருக்கடிப்புயல் டி.ஹெச்.எஃப்.எல் மற்றும் ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் போன்ற இதர நிறுவனங்களையும் புரட்டிப் போட்டுள்ளது.

முக்கியமாக, நம் நாட்டில் இயங்கிவரும் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களில் தலையாய நிறுவனம் எல்.ஐ.சி-தான். கிட்டத்தட்ட ரூ.30 லட்சம் கோடி அளவிலான முதலீட்டு போர்ட்ஃபோலியோவை கொண்ட எல்.ஐ.சி-யும்கூட இந்த நிதி நெருக்கடியிலிருந்து தப்பவில்லை. காரணம், மேலே குறிப்பிட்ட நிறுவனங்களில் எல்.ஐ.சி அதிக பங்கு மூலதனத்தைக் கொண்டிருப்பதுதான். மேலும், எல்.ஐ.சி நிறுவனம்தான் பங்கு மற்றும் கடன் பத்திரச் சந்தைகளில் இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமாகத் திகழ்கிறது.

நிதிச் சந்தைகளிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பது நமது நிதிச் சந்தைகளுக்கு ஒரு புதிய, இதுவரை கண்டிராத ஓர் அனுபவமாக உள்ளதால், இந்தச் சிக்கல்களிலிருந்து விடுபட சிறிது காலம் பிடிக்கும்.

மேலும், அந்நிய முதலீட்டு நிறுவனங்களான எஃப்.ஐ.ஐ-க்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காத்து, நமது சந்தைகளுக்கு ஓர் அரணாக இருப்பது எல்.ஐ.சி-தான். இப்போது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நல்ல நிலைக்கு வளர்ந்துவிட்டாலும், கடந்த பல வருடங்களாக உள்நாட்டு நிறுவனங்களில் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமாகத் திகழ்வது எல்.ஐ.சி மட்டும்தான். இப்படி அதிமுக்கியம் வாய்ந்த எல்.ஐ.சி நிறுவனம், பலதரப்பட்ட தனிநபர் முதலீட்டாளர்களிடம் இன்ஷூரன்ஸ் திட்டங்களின் மூலமாக பெரும் பணத்தை நிதிச் சந்தைகளில் பல்வேறு வழிகளில் அதாவது, பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரச் சந்தைமூலமாக வெவ்வேறு கால அடிப்படையில் முதலீடு செய்து வருவதும் வழக்கம்.

பொதுவாக எல்.ஐ.சி-யின் முதலீடுகள், நீண்ட கால அடிப்படையில் இருக்கும் விதமாக முதலீடு செய்வதுதான் வழக்கம். அந்த வகையில் எல்.ஐ.சி, நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிதி நிறுவனங்களில் செய்த முதலீடுகளின் மதிப்பு ரூ.21,500 கோடி அளவிற்குக் குறைந்துள்ளது. ஐ.டி.பி.ஐ பேங்கின் பங்கு மூலதனத்தில் 51 சதவிகிதத்தை எல்.ஐ.சி கொண்டுள்ளது. இந்த வங்கியின் பங்கு விலை வெகுவாகக் குறைந்து, எல்.ஐ.சி-யைச் சிக்கலில் சிக்கவைத்துள்ளது.

சந்தையின் பல ஏற்ற இறக்கங்களையும், நெருக்கடிகளையும் சந்தித்துள்ள எல்.ஐ.சி, பொதுவாகவே முதலீடுகளைத் திறம்பட நிர்வகித்து முதலீட்டாளர்களுக்கு வருமானத்தை வழங்கி வந்துள்ளது. ஆனாலும், தற்போதைய சூழலில், எல்லா முதலீட்டு நிறுவனங்களுக்கும் ஒரு சவாலான காலகட்டம் என்பதால், எல்.ஐ.சி-க்கு ஏற்பட்டுள்ள சிக்கலானது, தனி நிறுவனம் சார்ந்த சிக்கல் என்று கருதமுடியாது. மேலும் இதுபோன்ற சூழல் அதாவது, கடன் பத்திரச் சந்தையிலும், நிதிச் சந்தைகளிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பது நமது நிதிச் சந்தைகளுக்கு ஒரு புதிய, இதுவரை கண்டிராத ஓர் அனுபவமாக உள்ளதால், இந்தச் சிக்கல்களிலிருந்து விடுபட சிறிது காலம் பிடிக்கும்.

எல்.ஐ.சி நிறுவனத்தின் முதலீடுகள் உள்ள நிறுவனங்களில் சிக்கல்கள் ஏற்படும்பட்சத்தில், அந்த சிக்கல்களைத் துரிதமாக முடிவுக்கு கொண்டுவர எல்.ஐ.சியின் பங்களிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனாலும், பல லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக எல்.ஐ.சி நிறுவனம் திகழ்வதால், அவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு இதுபோன்ற சூழலைத் தவிர்க்கும் விதமாகவும், மேலும் அந்த நிறுவனத்தின் முதலீட்டு கொள்கைகளை பலப்படுத்தும் விதமாகவும் அந்த நிறுவனமும், அரசாங்கமும் முயற்சி எடுக்குமேயானால் அது முதலீட்டாளர்களுக்கும், நிதி சந்தைகளுக்கும் வலுவானதாக அமையும். மிக பெரிய நிறுவனங்கள் வீழ்ச்சி அடையாது என்ற பொதுவான நிதி சந்தைகளின் கருத்து எல்.ஐ.சிக்கும் பொருந்தும் என்றாலும், இனிவரும் காலத்தில் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்கும் விதமான முதலீட்டு உத்திகளை எல்.ஐ.சி கடைப்பிடிக்கும் என்று நாம் நம்புவோமாக!