நில உச்சவரம்பு சட்டப்படி 16ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்க கூடாது ? கூடுதல் நிலம் அரசால் கையகப்படுத்தப்படும். ?

நில விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும் போது, நில உச்சவரம்பு சட்டப்படி, கூடுதல் விபரங்களை பெற வேண்டும்’ என, சார் பதிவாளர்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். இது, சார் பதிவாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், நில உச்ச வரம்பு சட்டம், 1961ல் அமலுக்கு வந்தது. இதன்படி, தனி நபர்கள், 16 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்க கூடாது. இந்த அளவுக்கு மேல் நிலம் வைத்து இருந்தால், கூடுதல் நிலம் அரசால் கையகப்படுத்தப்படும். இவ்வாறு பெறப்படும் மிகை நிலங்கள், அந்தந்த பகுதியில், நிலம் இல்லாத ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்; அரசு துறைகளின் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும்.

திட்டத்தை செயல்படுத்த, நில உச்சவரம்பு தாசில்தார்கள் இருந்தனர். சில ஆண்டுகளாக, நில உச்சவரம்பு தாசில்தார்கள், முறையாக நியமிக்கப்படாததால், மிகை நிலங்களை கையகப்படுத்துவது முடங்கி உள்ளது.இந்நிலையில், தற்போது நில உச்சவரம்பு சட்ட விதிகளை தீவிரமாக அமல்படுத்த, கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சொத்து பரிமாற்றங்களின் போது, சம்பந்தப்பட்டவரின் பெயரில் உள்ள, அனைத்து நில விபரங்களையும், கட்டாயம் பெற வேண்டும் என, சார் பதிவாளர்களுக்கு கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இது குறித்து, சார் பதிவாளர்கள் கூறியதாவது: கடந்த சில ஆண்டு களாக, நில உச்சவரம்பு சட்டப்படியான, ‘படிவம் – 15’ பெறுவதில் கட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை. ஆனால், தற்போது மாவட்ட கலெக்டர்கள், வட்டாட்சியர்கள் வாயிலாக, இந்த படிவத்தை கட்டாயமாக பெற வேண்டும் என, உத்தரவிட்டுள்ளனர். சமீப காலத்தில் பரிமாற்றங்கள் இல்லாத, 2 ஏக்கருக்கு மேற்பட்ட சொத்துகளின் பத்திரங்கள் வரும்போது, இதை கேட்கிறோம்,இருப்பினும், பதிவுத்துறை தலைவரிடம் இருந்து, முறையான உத்தரவு எதுவும் எங்களுக்கு வரவில்லை. எனவே, நில உச்ச வரம்பு சட்டப்படி, கூடுதல் விபரங்கள் பெறுவது தொடர்பாக குழப்பம் நிலவுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.