நவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பாதிப்பு ? விஞ்ஞானிகள் அதிர்ச்சி !

நவீனத் தொழில்நுட்ப உலகில் அனைவரும் இயற்கை, சுற்றுச் சூழலைக் காட்டிலும் செல்போனுடன் தான் அதிகம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்தையே ஸ்மார்ட் போன்கள் கைக்குள் கொண்டு வந்துள்ளன. ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகள் பல.செல்போன்களால் இளைஞர்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வறிக்கைகள் கூறும் நிலையில், வெளியுலகு தொடர்பு இல்லாமல் கணினி, செல்போன் உள்ளிட்ட தொழில் நுட்பங்களை அதிகளவு பயன்படுத்துவதன் மூலம் உலகில் 220 கோடி பேருக்குப் பார்வை திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் மருத்துவரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அல்காஸ் சீசா, உலகெங்கிலும் உள்ள 220 கோடி மக்கள் ஒருவித கண் பிரச்சனையால் அவதிப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.பல நாடுகளில் வயதான மக்கள்தொகை மற்றும் கண் மருத்துவத்திற்கான போதிய அணுகல், குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், இந்த எண்ணிக்கை அதிகளவு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உட்கார்ந்த தன்மை போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களால் இந்நிலை ஏற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

“குழந்தைகளை வெளியில் அதிக நேரம் செலவிட நாம் ஊக்குவிக்க வேண்டும், ஏனென்றால் இது உடல் பருமனைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், மயோபியா போன்ற பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும். கணினிகள், தொலைக்காட்சிகள், மொபைல்கள் அல்லது பிற சாதனங்களிலிருந்து விலகி அதிக உடற்பயிற்சி மற்றும் வெளிப்புற நடவடிக்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.220 கோடி பேரில் 90 கோடி பேருக்குப் பகுதியளவு பார்வைக் குறைபாடும், 6.5 கோடி பேருக்கு முழுமையான பார்வைக் குறைபாடும் உள்ளதாகக் கூறுகிறது.

முறையான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப் பேருக்கான பார்வை குறைபாடுகளை தவிர்க்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.