சட்டமன்ற தேர்தல் முடிவுகளை வெளியிடும் நாள் நெருங்க நெருங்க அதிமுகவினரின் கவலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி ஒரேகட்டமாக நடந்து முடிந்தது. இதற்கான முடிவுகள் வரும் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்படவுள்ளன. மற்ற கட்சிகளை விட அதிமுகவினருக்கு கூடுதலான எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதாவது 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த நிலையில் வெற்றி கைநழுவி சென்றுவிடுமோ என்றும், அப்படிச் சென்றால் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கிடைக்குமா என்றும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இன்று எக்ஸிட் போல் முடிவுகள்
ஏனெனில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் இத்தகைய பயத்தை அதிமுகவினர் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. பெரும்பாலான முடிவுகளில் திமுகவே ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று இரவு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. இந்த முடிவுகள் எப்படியிருக்கும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
கவுரவமான வெற்றி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சில அமைச்சர்கள் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் பெரும்பாலான அதிமுகவினர் அப்படியொரு மனநிலையில் இல்லை என்றே சொல்லப்படுகிறது. ஒருவேளை ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டால் 60 முதல் 80 தொகுதிகளில் வென்றாலே போதும். அதுதான் கவுரவமாக இருக்கும்.
அப்படி நடந்தால் கிட்டதட்ட வெற்றி மாதிரி தான் என்று அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, டெல்டா மாவட்டங்களில் அதிமுக பின்னடைவைச் சந்திக்கும். வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு, அமமுக உடன் சமரசம் செய்யத் தவறியது ஆகியவை டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் பல தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என்று அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் அதிமுக படுதோல்வியை சந்தித்தால் கட்சிக்குள் பூகம்பம் வெடிக்கும் என்று பலரும் கூறுகின்றனர். தேர்தல் தோல்விக்கு முதல்வர் பழனிசாமி தான் காரணம் என்று ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தக்கூடும். இதனால் கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு சரிய வாய்ப்புள்ளது.தென் மாவட்ட அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகளுடன் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். வெளிப்படையான சந்திப்புகளை தவிர்த்துவிட்டு ரகசியமான சில சந்திப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தென்மாவட்ட மூத்த நிர்வாகிகளும், ஓ.பி.எஸ்.ஸுடன்தான் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
விசுவாசமான அதிமுக நிர்வாகி ஒரு சிலரிடம் மனம் விட்டு பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ். அப்போதுதான் தனது ஆழ்மனதில் உள்ள ஆதங்கங்களை அவர் கொட்டியிருக்கிறார்.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று எல்லோரும் வற்புறுத்தினார்கள். அதில் எனக்கு மனதளவில் உடன்பாடில்லை. இருந்தாலும் தலைமையில் உள்ள இருவரிடையே கருத்து வேறுபாடு என்றால் அது தேர்தலில் எதிரொலிக்கும் என்பதாலும், கட்சியின் நலன் கருதியும், அதிமுக.வின் வெற்றியைக் கருத்தில் கொண்டும் மனதை தேற்றிக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தேன்.
இதுபோல, முக்கியமான பல விவகாரங்களில் நான் இறங்கி வந்த போதும் எடப்பாடி பழனிசாமி பல்வேறு இக்கட்டான சூழல்களில்கூட சமரசத்திற்கே வரவில்லை. சசிகலாவை சேர்த்துக் கொள்ளலாம். கட்சியில் பதவி கொடுக்க வேண்டாம் என்று ஆலோசனை கூறினேன். அதற்கு மதிப்பில்லை. அமமுக.வை அதிமுகவோடு கூட்டணி அமைக்காமல், பாஜக.வோடு கூட்டணி அமைக்க அனுமதித்து, பாஜக.வுக்கு கூடுதலாக தொகுதிகளை ஒதுக்கி, பாஜக.வுடன் அமமுக கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு உடன்படலாம் என்று தெரிவித்தேன். அதையும் ஏற்க மறுத்தார் எடப்பாடி பழனிசாமி.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக.வோடு கூட்டணியில் இருந்த தேமுதிக.வுக்கு, 15 தொகுதிகள் ஒதுக்கியிருந்தால், அவர்கள் கூட்டணியிலேயே நீடித்திருப்பார்கள். அதையும் உதாசீனப்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி..
கட்சி நலன் பற்றி யார் எந்த ஆலோசனை சொன்னாலும் அதில் உள்ள பாதகம், சாதகம் போன்றவற்றை நான் மட்டுமே பரிசீலத்து, முடிவை எடுத்து சொல்கிறேன். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள மிகப்பெரிய பலவீனம், அவரால் தனித்து முடிவு எடுக்க முடியவில்லை. அவரை நிறைய பேர் இயக்குகிறார்கள். அதனால், இப்போது நான் ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கிறேன்.
ஆட்சியில் நீண்ட காலமாக பணியில் நீடித்து வரும் அனுபவமிக்க ஐஏஎஸ்., ஐபிஎஸ் அதிகாரிகளிடம் இருந்து எனக்கு நிறைய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பெரும்பான்மையானோர் திமுக.தான் ஆட்சி அமைக்கும் என்கிறார்கள். அதிமுக 50 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெறுவது கடினம் என்கிறார்கள்.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தோம். ஆனால், நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா என்பது இந்த நிமிடம் வரை சந்தேகமாக இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு வெளியான கருத்துக் கணிப்புகள் எல்லாம் திமுக.வுக்கு சாதமாகவே வந்தன. ஆனால், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு தேர்தல்களுக்கு முன்பாக பல நூறு கோடி ருபாய் பணத்தை அரசு கஜானாவில் இருந்து வாரி இறைத்தார் இ.பி.எஸ். அப்போதும் கூட, ஊடகங்கள் அதிமுக.வுக்கு சாதமாக கருத்துக் கணிப்புகளை வெளியிடவில்லை. அரசு கொடுத்த விளம்பரங்கள் மக்களிடம் சென்று சேர்த்ததைவிட, ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள்தான் அதிமாக மக்களின் மனதை மாற்றியுள்ளது என்று எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
நம்முடைய எதிர்பார்ப்புக்கு மாறாக தேர்தல் முடிவுகள் வந்தால், எதிர்க்கட்சி வரிசையில்தான் அதிமுக அமரும் சூழ்நிலை உருவாகும். அப்படி ஒரு நிலை உருவானால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி எனக்குதான் வழங்க வேண்டும். அதிலும், எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டால், நான் என்ன முடிவு எடுப்பேன் என்று எனக்கே தெரியாது.
மே 2 க்குப் பிறகு அதிமுக பிளவு படாமல் இருக்க வேண்டும் என்றால் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எனக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். இந்த விஷயத்திலும் கொங்கு மண்டல பிரமுகர்கள் ஏதாவது குழப்பம் விளைவித்தால், மீண்டும் ஒரு தர்மயுத்த போராட்டம்தான் வெடிக்கும். அதற்கு தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும் என மனதில் உள்ளதை எல்லாம் அப்படியே கொட்டியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமு தோற்பதற்கு 3 காரணங்களைச் சொல்றாங்க.1 பாஜகவுடன் கூட்டணி.கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோற்றதற்குப் பிறகும் அதிமுக திருதந்தலைன்னு சொல்றாங்க. 2 அமமுகவை அதிமுகவில் இணைக்காதது. 3 பழைய ஓட்டு வங்கி இல்லண்ணாலும் தேமுதிகவைக் கூட்டணியில் சேர்க்காதது. 4 சசிகலாவை சேர்க்காதது.
சசிகலா கலகக்குரல்
உடனே அதிமுகவிற்கு சசிகலா தான் தலைமை வகிக்க வேண்டும். டிடிவி தினகரன் உடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் குரல்கள் ஒலிக்கத் தொடங்கும் என்கின்றனர் அரசியல் விவரம் தெரிந்தவர்கள். தற்போதைய சூழலில் அதிமுகவினரின் எதிர்பார்ப்பு என்பது தமிழக சட்டமன்ற தேர்தலில் கவுரமான வெற்றி ஆகும். ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் 60 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி விட வேண்டும்.
அதிமுகவின் எதிர்காலம்
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கைகோர்த்து செயல்பட வேண்டும். அதிமுகவில் இருந்து தலைவர்கள் மாற்றுக் கட்சிகளுக்கு தாவாமல் கட்டுக்கோப்புடன் பார்த்து கொள்ள வேண்டும். தொண்டர்களே கட்சியின் ஆணிவேர் என்பதை மறவாமல் முழு நம்பிக்கையை அனைவர் மனதிலும் விதைக்க வேண்டும். இதன்மூலம் அதிமுகவின் எதிர்காலம் மட்டுமின்றி தமிழக அரசியலும் நல்வழியில் நடைபோடும் என்று பலரும் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.