திரையரங்கில் ஓடும்போதே ஹாட்ஸ்டாரில் ‘கைதி’ ? காரணம் என்ன?

கைதி திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியாகியுள்ளது தமிழ்த் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், மூன்றாவது வாரத்திற்கு மேல் தங்களுக்கு பெரிதாக வருவாய் வருவதில்லை என்பதில்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.கார்த்தி நடித்து தீபாவளி தினத்தன்று வெளியான ‘கைதி’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதால் ஒரு மாதம் கழிந்த நிலையிலும், தற்போதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தப் படம் சில நாட்களுக்கு முன்பாக ஹாட் ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியானது.படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே, ஹாட் ஸ்டாரில் வெளியானதற்கு பல திரையரங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன. சென்னையில் உள்ள ரோஹினி திரையரங்கின் நிர்வாகியான நிகிலேஷ், “கைதி திரைப்படம் வெளியாகி 30வது நாளன்றுகூட இரண்டு காட்சிகள் முழுமையாக நிரம்பின. ஆனால், தற்போது படம் ஆன்லைனில் வெளியாகியிருக்கிறது. இதனால், உடனடி பாதிப்பு இருக்காது என்றாலும்கூட, மிக அபாயகரமான முன்னுதாரணம்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இந்தியில் பேச வற்புறுத்திய நபர், ‘தமிழில் பேசலாமா’ என்று பதிலடி கொடுத்த டாப்சி
3-4 வாரங்களிலேயே படத்தை ஆன்லைனில் பார்த்துவிடலாம் என்றால், யாரும் திரையரங்கிற்கு வரமாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் நிகிலேஷ்.இந்த நிலையில், கைதி திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியானதற்குப் பிறகு எஸ்பிஐ சினிமாஸ், பிவிஆர் ஆகிய தொடர் திரையரங்குகளில் கைதி திரைப்படம் நிறுத்தப்பட்டது.இது போலச் செய்யக்கூடாது. இப்படி ஒரு மாதத்திலேயே படத்தை ஆன்லைனில் வெளியிட்டால் யார் திரையரங்கிற்கு வருவார்கள்? இந்த ஆன்லைன் தளங்களைப் பொறுத்தவரை திரையரங்கில் வெளியானால்தான் வாங்குவார்கள். ஆக, தயாரிப்பாளர்கள் எங்களை விளம்பரம் செய்யும் ஊடகமாகப் பயன்படுத்துகிறார்களா? 4 வாரங்களில் படத்தை ஆன்லைன் ஊடகங்களுக்குக் கொடுத்துவிடுவார்கள் என்றால், படத்தை இரண்டு வாரங்களுக்கு மட்டும் ஓட்ட வேண்டும் என ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டியதுதானே? எதற்காக ‘ஃப்ரீ ரன்’ என ஒப்பந்தம் செய்கிறார்கள்?” என்கிறார் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம்.

ஆனால், தயாரிப்பாளர் தரப்பு இதில் தவறில்லை என்கிறார்கள். “திரையரங்கத்தினருடன் ஒப்பந்தம் செய்யும்போது இத்தனை நாட்கள் ஓட்ட வேண்டுமென நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. எல்லா புதிய படங்களுக்கும் முதல் நாளே திருட்டு வீடியோ வெளிவந்துவிடுகிறது. அந்த திருட்டு வீடியோவை பெரும் எண்ணிக்கையில் மக்கள் பார்க்கிறார்கள். தவிர, 3வது வாரத்திற்குப் பிறகு, திரையரங்குகளில் இருந்து தயாரிப்பாளருக்கு வரும் வருவாய் மிகக் குறைவு. ஆகவேதான் 4வது வார இறுதியில் ஆன்லன் தளங்களுக்கு கொடுத்துவிடுகிறோம்” என கூறினார் ‘கைதி’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர். பிரபு.

ஆனால், தமிழ்த் திரையுலகைவிட பெரிய திரைத்துறையான இந்திப் பட உலகில்கூட இப்படிச் செய்வதில்லை என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம். இனியும் இப்படித் தொடர்ந்தால் படம் ரிலீஸாகும்போது 60-70 சதவீத பங்கு அளிப்பதற்குப் பதிலாக, 50 சதவீத பங்குதான் அளிப்போம் என ஒப்பந்தம் செய்ய வேண்டியிருக்கும் என்கிறார் அவர்.

ஆனால், மூன்றாவது, நான்காவது வாரங்களில் திரையரங்குகளுக்குப் பெரிதாக கூட்டம் வருவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் எஸ்.ஆர். பிரபு, “மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஒரு டிக்கெட் 100 ரூபாய்க்கு விற்றால், அதில் ரூ. 13.50 மட்டுமே தயாரிப்பாளருக்குக் கிடைக்கிறது. மல்டிப்ளக்ஸ்களில் உள்ள திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் குறைவான ஆட்களே வருகிறார்கள். நிலைமை இப்படி இருக்கும்போது, தயாரிப்பாளருக்குக் கணிசமான தொகையை அளிக்கும் ஆன்லைன் தளங்களை எதற்கு விட வேண்டும்?” என்கிறார்.

படங்கள் திரையரங்கில் வெளியாகி 60 நாட்களுக்குப் பிறகுதான் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு படத்தைத் தர வேண்டும் என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். ஆனால், பல தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரை, தற்போது பெரும்பாலான படங்கள் 2 வாரங்களுக்கு மேல் ஓடுவதில்லை என்பதால், 30 நாள் இடைவெளிதான் சரி என்கிறார்கள். இந்த கால இடைவெளி இன்னும் குறையக்கூடும் என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

Related posts:

இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மானின்  அறிமுகப்படமான 'மின்மினி'யில் தனது மாயாஜால இசை மூலம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்!
சென்னையில் நடிகர் மோகன்–ரசிகர்கள் சந்திப்பு!
தீம் பார்க்கில் தடம் பதித்த தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ்!
மின்மினி’ படத்தின் டிரெய்லர் ம்ற்றும் இசை வெளியீட்டு விழா!
தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நடிகர் ராஜ்குமாரின் திருமணம்!
நடிகர்/இயக்குனர் பார்த்திபன் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் பார்த்து நெகிழ்ச்சி வாழ்த்து !
'டான்' படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி - ஸ்ரீ வர்ஷினி சிபி திருமணத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்!