சந்தானம் நடித்து ஏற்கனவே திரைக்கு வந்த டிடி ஒன், டிடி ரிட்டர்ன்ஸ் படங்களைத் தொடர்ந்து அதே பாணியில் வந்திருக்கிறது டிடி நெக்ஸ்ட் லெவல்.
கிஸ்ஸா (சந்தானம்) திரைப்படங்களை பார்த்து விமர்சனம் செய்பவர். பல படங்களை அவர் நெகட்டிவ் விமர்சனம் செய்த நிலையில் உங்கள் குடும்பத்துக்காக ஸ்பெஷல் ஷோ போடுகிறோம் தியேட்டருக்கு வாருங்கள் என்று அழைப்பு வருகிறது. அதை ஏற்று படம் பார்க்க செல்கிறார். அந்த தியேட்டர் பேய் ஆளும் தியேட்டர் என்பதால். உள்ளே வந்தவர்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு தடைகள் ஏற்படுகிறது. குறிப்பாக கிஸ்ஸா திரையில் படம் ஓடும்போது அந்த திரைக்குள்ளேயே சென்று படத்திற்குள் சிக்கிக் கொள்கிறார். அது ஒரு பேய் கதை. அந்த பேய்களிடமிருந்து கிஸ்ஸா தப்பித்து வந்தால்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற ஒரு கண்டிஷனை தியேட்டரில் இருக்கும் பேய் கூறுகிறது. திரையில் ஓடிய சினிமாக்குள் பேய்களிடம் சிக்கிய கிஸ்ஸா, அவரது குடும்பம் மற்றும் காதலியின் கதி என்ன ஆனது என்பதுதான் கிளைமாக்ஸ்.
சினிமாவுக்குள் ஒரு சினிமாவை வைத்து ஒரு வித்தியாசமான திரை கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் எஸ் பிரேம் ஆனந்த். இந்த கதையை கேட்டாலோ, படித்தாலோ புரிவது கடினம் படமாக பார்த்தால்தான் ஓரளவுக்காவது புரியும் என்பதுதான் நிஜம்.
இந்த கதையை சந்தானம் நன்கு புரிந்து நடித்திருக்கிறார். உடன் நடித்திருக்கும் எல்லோருமே இயக்குனர் என்ன சொன்னாரோ அதை மட்டும் நடித்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.
வழக்கமான சந்தானமாக இல்லாமல் கிஸ்ஸா பாத்திரத்தில் ஹேர் ஸ்டைல், பாடி லேங்குவேஜ், வசன உச்சரிப்பு போன்றவற்றில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். அதேசமயம் வழக்கமான தனது நக்கல் நய்யாண்டியையும் கைவிடாதது பெரிய பிளஸ்.
படத்தில் திரைப் படங்களை விமர்சிப்பவராக சந்தானம் நடித்திருந்தாலும் அவர் எந்த படத்தையும் விமர்சனம் செய்வது போல் காட்டாதது அவரது கதாபாத்திரத்தின் இமைஜை பாதி குறைத்து விடுகிறது. ஒரு சூப்பர் ஸ்டார் படத்தையோ, உலக நாயகன் படத்தையோ வேறு ஹீரோ யாராவது படத்தையோ கலாய்ப்பது போல் அவர் விமர்சனம் செய்திருந்தால் கூட ஓஹோ இதற்காகத்தான் இவரை பேய் துரத்துகிறது என்று நம்பி இருக்கலாம்…ஒட்டுமொத்தமாக யூடியூப் விமர்சனங்களை காலி செய்து விடுவார் என்று பார்த்தால் படம் நன்றாக இருந்தால் தான் ஓடும் இல்லாவிட்டால் ஓடாது என்ற ஒரு தத்துவத்தையும் அவரே கூறி விடுவது எதுக்கு நமக்கு வம்பு என்று கடைசியில் ஒதுங்கி செல்வது போல் தெரிகிறது.
மொட்டை ராஜேந்திரனுக்கு எலி காமெடி, நிழல்கள் ரவிக்கு டாய்லெட் காமெடி, ரெடின் கிங்ஸ்லிக்கு சொம்பு காமெடி, மாறனுக்கு கஸ்தூரியை சைட் அடிக்கும் காமெடி, கௌதம் மேனனுக்கு யாசிகாவை காதலிக்கும் காமெடி என்று ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு காமெடி எபிசோடை இயக்குனர் உருவாக்கியிருப்பது படத்தை கலகலவென்று நகர்த்த உதவி இருக்கிறது.இவர்கள் எல்லோரையும் அரவணைத்து பேய்களுக்கு டாக்கா கொடுத்து, எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் காமெடி பஞ்ச்சடித்து படம் முழுவதையுமே கலகலப்பு மூடுக்கு மாற்றியிருக்கிறார் சந்தானம்.
படத்தில் வசன காமெடி காட்சிகளைவிட ஆக்சன் காமெடி காட்சிகள் தான் அதிகம் என்பதால் அதை விவரிப்பதும் இங்கு கடினம். .இயக்குனர் செல்வராகவன் சந்தானத்தை ஆட்டிப்படைக்கும் ஹிட்ச்காக் இருதயராஜ் என்ற பேயாக வருகிறார். உட்கார்ந்த இடத்தில் கரகரவென்று பேசுகிறார்..
யாசிகா ஆனந்தும், கஸ்தூரியும் கவர்ச்சி காட்டுவதில் போட்டி போட்டிருக்கிறார்கள். யாஷிகா ஆனந்த் என்னதான் இளமை துள்ளலாக கவர்ச்சி காட்டினாலும், கஸ்தூரியோ வயதானாலும் தனது தொடை அழகை காட்டி கிரங்க வைக்க முயற்சித்திருக்கிறார்.
ஆப்ரோ இசை அமைத்திருக்கிறார். ஸ்ரீனிவாச கோவிந்தா என்ற பக்தி பாடல் மெட்டில் கோவிந்தா கோவிந்தா என்ற ஒரு பாடலை போட்டிருந்தார். அந்த பாடல் படத்தில் கலர்ஃபுல்லாகவும் இடம் பெற்றிருந்தது. ஆனால் இது திருப்பதி வெங்கடாஜலபதியை இழிவு படுத்தும் பாடலாக இருக்கிறது என்று சர்ச்சை எழுந்த நிலையில் படத்தில் இருந்து முற்றிலுமாக அப்பாடல் நீக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் பட ஹீரோ சந்தானத்திற்கு திருப்பதி மலைக்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தீபக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தா இயக்குனர் எஸ். பிரேம்ஆனந்த் ஒரு கடினமான கதையை காமெடி காட்சிகள் வைத்து இலகுவாக்கி நகைச்சுவை படமாக தந்திருக்கிறார். காமெடி படம் சந்தானத்தின் வழக்கமான ஸ்டைலுக்கு மாறான டயலாக் டெலிவரி மற்றும் பாடி லாங்குவேஜ் கனெக்ட் ஆகவில்லை. மாறனைத் தவிர மற்ற நடிகர்கள் வரும் காட்சிகளில் சிரிப்புக்கு பதிலாக சலிப்பே ஏற்படுகிறது. இருப்பினும் ஹாரர் படத்திற்குள் ஹாரர் படம் என்ற புதிய கான்செப்ட்டை திரையில் காட்டி இருக்கிறார். இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டி இருந்தால் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். டி டி ரிட்டர்ன்ஸ் அளவுக்கு நகைச்சுவை இருக்கிறதா என்று கேட்டால் அந்தப் படத்திற்கு கொஞ்சம் பின்தங்கிதான் டிடி நெக்ஸ்ட் லெவல் காமெடி ஒர்க் அவுட் ஆகிறது.
டி டி நெக்ஸ்ட் லெவல் –சந்தானத்தை நம்பி படம் பார்க்கப் போகலாம்.