டிஜிட்டலுக்கு தனிநிறுவனம்! ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ திட்டம் !!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், டிஜிட்டல் பிரிவில் எடுக்கப்படும் முன் முயற்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில், அதற்கென தனியாக ஒரு துணை நிறுவனத்தை அமைக்க இருக்கிறது.

செயலிகள் உட்பட அனைத்து விதமான டிஜிட்டல் முன் முயற்சிகளுக்கான, தனியான ஒரு துணை நிறுவனமாக இது செயல்படும்.இந்நிறுவனம், 1.08 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை கொண்ட நிறுவனமாக இருக்கும் வகையில், இதில் ரிலையன்ஸ் முதலீட்டை மேற்கொள்கிறது.இது குறித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:இந்த புதிய நிறுவனத்தின் கட்டமைப்பு, உலகளவில் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களால் ஒப்புக் கொள்ளப்பட்டதை போன்றதாக இருக்கும்.

இது, இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் சேவைகளுக்கான இயங்குதள நிறுவனத்தை உருவாக்கும்.இந்த புதிய நிறுவனம், உடல்நலம் மற்றும் கல்வி போன்ற துறைகளுக்கான தொழில்நுட்பம் குறித்த பணிகளை மேற்கொள்ள உள்ளது. அத்துடன் செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் மெய்நிகர் தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப பிரிவுகளிலும் ஈடுபடும்.மேலும், ‘மை ஜியோ, ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செய்தி, ஜியோ சாவன்’ உள்ளிட்ட ஜியோவின் பல அம்சங்களும் இந்த துணை நிறுவனத்தின் கீழ் வரும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது