இனி மின்சார வாகனங்களுக்குத்தான் எதிர்காலம். இதை புரிந்துகொண்ட ஜப்பானின், ‘சோனி’ அண்மையில் ஒரு மின்சார காரின் மாதிரியை அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கிறது. ‘சோனி விஷன் -எஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாதிரி காரில், 33 வகை மின்னணு உணரிகள் உள்ளன.
அது மட்டுமல்ல, காருக்குள் இசை, ரேடியோ, வீடியோ என்று பொழுதுபோக்கு கருவிகள் அனைத்தையும் பொருத்தியுள்ளது சோனி. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடக்கும் பிரமாண்டமான நுகர்வோர் மின்னணு கண்காட்சியில், யாரும் எதிர்பாராத விதத்தில் விஷன் எஸ் மின் வாகனத்தை சோனி அறிமுகப்படுத்தியது.
காரின் வடிவமைப்பு வித்தியாசமாக இருந்தாலும், விலையுயர்ந்த, ‘போர்ஸ்ச்’ கார்களின் சாயல் இருப்பதாக விமர்சகர்கள் சொல்கின்றனர். தவிர, மின் காரின் இயந்திரப் பகுதி, கார் பாகங்களைத் தயாரிக்கும்
மேக்னாவால் உருவாக்கப்பட்டது என்பதையும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் தானோ என்னவோ, சோனி தற்போதைக்கு தன் மின்சார கார் திட்டத்தைப் பற்றி விரிவாக எதையும் சொல்லாமல் மவுனம் காக்கிறது. ஆனாலும், மின் வாகனத் துறையில் நுழையப்போகிறோம் என்பதை சோனி அழுத்தமாக சொல்லவே, விஷன் எஸ் காரை அது அறிமுகப்படுத்தியுள்ளது என்பது உறுதி.