சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ? இது மனிதர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட வறட்சி ?

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எளிய மனிதர்கள் இரவு முழுக்க வெற்றுக் குடங்களோடு தெருவில் காத்துக் கிடக்கின்றனர்.நாளுக்கு நாள் தனியார் தண்ணீர் டேங்குகளில் விற்கப்படும் தண்ணீரின் விலை கூடிக் கொண்டே போகிறது. வியாழக்கிழமை மாலை பெய்த மழை தொடரும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் , நேற்று சுத்தமாக மழை பெய்யவில்லை. இருக்கின்ற தண்ணீர் எத்தனை நாட்களுக்கு வரும் என்று தெரியாத நிலையில் இந்த சிக்கல்களில் இருந்து சென்னை எப்படி மீண்டெழும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்த சிக்கல்களுக்கான நிரந்தரத் தீர்வுகள் என்ன, இந்த நிலை எதிர்காலத்தில் ஏற்படாமல் காத்துக்கொள்ள அரசும் , மக்களும் செய்ய வேண்டிய முதன்மையான செயல்கள் என்னென்னெ போன்ற கேள்விகளோடு, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசியரும் நீரியல் நிபுணருமான ஜனகராஜன் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல் பின்வருமாறு.

கடுமையான வறட்சியினை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். இது மழைப்பொழிவு இல்லாமல் ஏற்பட்ட வறட்சி அல்ல, மனிதர்களின் பொறுப்பின்மையாலும் அலட்சியத்தாலும் ஏற்பட்ட வறட்சி. சென்னை கடந்த நாற்பது ஐம்பது வருடங்களில் காணாத அளவு கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டினை சந்தித்துக் கொண்டு வருகிறது.

‘பெண்களை மாதவிடாய் நாட்களில் குறைவாக தண்ணீர் பயன்படுத்த எப்படி சொல்வது?’
வறட்சியின் பிடியில் சென்னை – என்ன சொல்கிறார் ‘மழை மனிதன்’?
இதற்கு முதன்மையான காரணம், அரசின் கவனமின்மைதான். கடந்த இருபது வருடங்களாக சென்னைக்கான குடிநீர் திட்டங்களுக்காக ஏராளமான பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாக அரசு குறிப்பிடுகிறது. குறிப்பாக கடந்த எட்டு வருடங்களில் பார்க்கும்போது அமைச்சரின் அறிக்கை படி குடிதண்ணீருக்காக கிட்டத்தட்ட 38,000 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதில் சாமானிய மனிதர்களுக்கு இருக்கும் சந்தேகம் என்னவென்றால், இந்த பணமெல்லாம் எங்கு போனது, இவ்வளவு கோடிகள் செலவு செய்த பின்னரும் குடிப்பதற்கு நீர் இல்லையே என்பதுதான். இதனால் ஏதேனும் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டனவா, அதனால் அடைந்துள்ள பயன்கள் என்ன என்று பல கேள்விகள் நம் முன்னே இருக்கிறது.

மக்களுக்கான குடிநீர் வாரியத்தினை நிலையாக கட்டமைக்க வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையான சில ஆய்வுகளை அரசு முன்னெடுக்க வேண்டும். எந்த மாதிரி சிக்கல்கள் நம்மிடம் உள்ளன, நம்முடைய பூகோள அமைப்பு என்ன, மழையின் அளவு என்ன இப்படி பல விஷயங்களை அரசு கவனிக்க வேண்டும். ஆனால், அரசு தரப்பில் இப்படியான ஆய்வுகள் நடத்தப்பட்டதாக தெரியவில்லை. ஏரிகள் தானாக நிரம்பினால், ஏரிகள் நிரம்பி விட்டது என்பர். இதற்காக எந்த சிரத்தயினையும் எடுப்பதில்லை.உதாரணத்திற்கு 6 வருடங்களுக்கு முன்பு , தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் சுமார் 400 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு, அதில் 1 டி எம் சி தண்ணீர் தேக்கலாம் என்று கூறப்பட்டது. அதன் நிலை என்ன என்று தற்போது தெரியவில்லை.தேர்வாய் கண்டிகை திட்டம் என்பது சென்னையில் அதிகரிக்கும் குடிநீர் தேவையினை எதிர்கொள்ள, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கான திட்டம் என்றும், ரூ 330 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள நீர்த்தேக்கத்திற்கு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியுள்ளதாகவும் 2013 ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

மேலும், 1000 கோடிக்கு மேல் செலவு செய்து கொண்டு வந்த தெலுங்கு கங்கை திட்டமும் என்னவாயிற்று என்று தெரியவில்லை. அதில் வருடத்திற்கு 12 டி எம் சி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் எந்த வருடத்திலும் 1 டிஎம்சிக்கு மேல் நமக்கு வந்ததில்லை.
சென்னையின் குடிநீர் தேவைக்கு ஆந்திர பிரதேசத்தில் உள்ள கண்டலேறு நீர்த் தேக்கத்தில் இருந்து தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நதி நீர் ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி பெறப்பட வேண்டும். ஆனால், 2018-19ம் ஆண்டில் 1.98 டிஎம்சி தண்ணீர் மட்டுமே பெறப்பட்டுள்ளது என்று அரசும் குறிப்பிட்டு உள்ளது.

இது போக வீராணத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக கடல் நீரினை குடிநீராக்கும் திட்டத்திற்காக இரண்டு ஆலைகள் நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் உள்ளன. இவைதான் சென்னைக்கான நீராதாரங்கள். இதை நம்பி நாம் வாழ முடியுமா, இவை நிரந்தரமாக நம்முடைய சிக்கல்களை தீர்த்து விடுமா என்றால் நிச்சயமாக இல்லை. ஏனெனில் மக்கள் தொகை பெருகிக் கொண்டே உள்ளது. சென்னையில் மட்டுமே எட்டு கோடி மக்கள் வாழ்கின்றனர். சென்னை மெட்ரோபாலிட்டன் பகுதிகளையும் சேர்த்தால் ஒரு கோடிக்கும் மேல். ஒரு கோடிக்கும் மேல் உள்ள இந்த மக்களுக்கு நிரந்தரமாக குடிநீர் வழங்க வேண்டும் எனில் நிலையான, வற்றாத நீராதாரங்கள் தேவை.