கொரோனாவால் ஏற்படும் மன அழுத்தத்தை எப்படிசரிசெய்வது?

1. கொரோனா தொற்று தடுப்பு எவ்வளவு முக்கியமானதோ அதேபோன்று தொற்று தாக்கிய காலங்களில் மனநலம் பேணுவதும் மிக முக்கியமானதாகும். ஏனெனில் நோய் தொற்று தாக்குதலில் இருந்து விடுபடுவதற்கு தனிமைப்படுத்துதல் அவசியமாகி விடுகிறது.
2. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பிறரிடம் தொடர்பு இல்லாமல் இருப்பதால் மனசோர்வு நோய்க்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. எதிர்கொள்ள இருக்கும் நிச்சயமற்ற காலத்தை நினைக்கும்போது மனஅழுத்தம் ஏற்படும். வீட்டில் அவர்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்துவிடும் நிலையில் உதவி செய்ய ஆள் இல்லாதபோது மனம் பதற்றமடையும்.
3. இயல்பாக தும்மலோ, இருமலோ, மூக்கில் பசபசப்போ வெளிப்பட்டால் இது கொரோனாவின் அறிகுறி என்று அச்சப்படும் நிலை ஏற்படும். விடுமுறை காலங்களில் இணையதள பயன்பாட்டையே நம்பி இருப்பதால் அதிலிருந்து விடுபட முடியாமலும், அதற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையும் ஏற்படும். பேரிடர் நீங்கி, சமூக அமைதி திரும்பிய பின்னரும், பேரிடர் காலத்தில் கடந்து வந்த எதிர்மறை சம்பவங்களின் பிரதிபலிப்பாக மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் உருவாகும்.
4. தியானம், வழிபாடு, கூட்டுப்பிரார்த்தனை செய்து குடும்பத்தினருடன் இணைந்து இருக்கவேண்டும். குடும்பத்தோடு செலவிடக்கூடிய காலத்தை பொன்னான காலம் என்று கருதுங்கள். மன உளைச்சல் மிகுந்த காலங்களில் இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தை மேலோங்க செய்ய வேண்டும். மெல்லிய இசை, ஊக்கம் தரும் பாடல்கள், நல்ல புத்தகங்கள் ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
5. எந்த செயலை செய்ய முற்படும்போதும் என்னால் முடியும் என்ற உணர்வோடு செய்ய தொடங்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் கொரோனா தரும் மனஅழுத்தத்தில் இருந்து மீளலாம்.