கேரிபேக் வழக்கில் 15,000 ரூபாய் கட்டிய ரிலையன்ஸ்!

சட்டத்தை மீறி நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பார்த்து முணுமுணுத்தபடியே கடந்துவிடுகிறோம். ஆரம்பத்தில் நமக்குள் கேள்விகளைக் கேட்டுவிட்டு, பின்னர் அதையே காலப்போக்கில் வேறு வழியின்றி பழக்கப்படுத்திக் கொள்கிறோம். அதில் ஒன்றுதான், கேரிபேக்குகளுக்கு கொடுக்கப்படும் காசும்.

பெரிய நிறுவனங்களில், துணிகளையோ பொருள்களையோ வாங்கிக்கொண்டு வெளியே வரும்போது, துணிப் பைகளை விலைக்கு வாங்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம். இதை எதிர்த்துக் கேள்விகேட்டதன் பயனாகத்தான், திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மானுக்கு 15 ஆயிரம் ரூபாயை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “ எல்லோருக்கும் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றுதான் நீதிமன்றத்தை நாடினேன்” என்கிறார் அவர். அவரிடம் இதுதொடர்பாகப் பேசினோம்.

“கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் பண்டிகைக்காக திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள ரிலையன்ஸ் டிரெண்ட் கடையில் துணி வாங்கச் சென்றோம். அந்த நிறுவனத்தில் துணி வாங்கி முடித்த பின், கேரிபேக்குக்கு தனியாக 7 ரூபாய் தரவேண்டும் என்று அந்தக் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். `இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி தவறு’ என்று நான் அவரிடம் கூறினேன். உடனே அவர்கள், `எங்கள் குழும விதிமுறைகளின்படி பணம் வாங்க வேண்டும்’ என்று பதில் கூறினர்.

அப்போது, ஆதாரத்துக்காக ஒரு காணொளி க்ளிப்பிங் எடுத்துக்கொண்டேன். பிறகு, பணம் கட்டி பில்லை வாங்கிக்கொண்டேன். எனக்கு, 7 ரூபாய் கொடுத்து கேரிபேக் வாங்கியது பெரிய விஷயமில்லை. இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் விவரம் தெரியாமல் காசு கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். நிறுவனங்களும் சட்டத்தை மதிப்பதில்லை. எனவே, எல்லோருக்கும் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். இது தொடர்பான விசாரணை நடந்தது” என்றவர்,
“ வழக்கை விசாரித்த நீதிமன்றம், `நிறுவனம் செய்தது தவறுதான். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விளம்பரம் அச்சடிக்கப்பட்ட பையைக் கொடுத்தால், இலவசமாகக் கொடுக்க வேண்டும். விளம்பரம் இல்லாமல் ப்ளைன் கவர் கொடுத்தால் அதை நாம் காசு கொடுத்து வாங்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களின் விளம்பரம் அச்சடித்த கவரை நாம் வாங்கும்போது, அவங்க கம்பெனிக்குதானே விளம்பரம் செய்றோம். சொல்லப்போனால், நிறுவனம்தான் நமக்குப் பணம் தரவேண்டும். `சார் நீங்க நம்ம விளம்பர பையைக் கொண்டுபோங்க’ என்று அவர்கள்தான் நமக்குக் காசு கொடுக்க வேண்டும். ஆனால், அவர்கள் இதற்கு எதிர்மாறாகச் செயல்படுகின்றனர்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், விற்பனைப் பொருளாகத்தான் இதை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அப்படியென்றால், தயாரிப்பு தேதி, விலை, தயாரித்தவர்கள் பெயர் இதெல்லாம் குறிப்பிட்டிருக்க வேண்டும். இது எதையுமே அவர்கள் பின்பற்றவில்லை. இதைக் கண்காணிக்கவேண்டிய அதிகாரி யார் என்றால், மாநகர நல அலுவலர்தான் கண்காணிக்க வேண்டும். ஆனால், அவரும் தன் பணியைச் செய்யத் தவறிவிட்டார். அவரையும், வழக்கில் சேர்த்துள்ளோம்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவதாஸ், கடந்த 16-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதில், `நுகர்வோருக்குச் சேவைக் குறைபாடு செய்துள்ளீர்கள். முறையற்ற வாணிபம் காரணமாக அபராதம் விதிக்கப்படுகிறது. ரூ 5 ஆயிரம் வழக்குத் தொகையாகக் கொடுக்க வேண்டும். மேலும், கேரிபேக்கை விற்பனைப் பொருளாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், உற்பத்தியாளர் பெயர், காலாவதி தேதியில்லை, மைக்ரான் அளவு எதுவுமே அதில் இல்லை. இதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்காத மாநகர நல அலுவலர், நிறுவனத்துடன் சேர்ந்து 15 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, கூடுதலாக வாங்கிய 7 ரூபாயையும் சேர்த்துக்கொடுக்க வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இனி கடைகளில் கேரிபேக் வாங்கும் பொதுமக்கள் கூடுதல் விழிப்புடன் இருப்பதற்கு இந்த வழக்கு துணைபுரியும் என நம்புகிறேன்” என்றார் உறுதியாக