மீண்டும் நடிக்க வந்தது பற்றி நடிகை சீதா: சென்னை தான் சொந்த ஊர். அப்பா, மோகன் பாபு, குணச்சித்திர நடிகர். புதிய பாதை படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே, அதன் இயக்குனர், பார்த்திபன் சாருடன் காதல் ஏற்பட்டு விட்டது. ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறி, கல்யாணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பின் நடிப்பதில், பார்த்திபன் சாருக்கு பிடித்தம் இல்லை. அதனால், படங்களில் நடிக்க வாங்கிய, ‘அட்வான்ஸ்’ தொகையை திருப்பிக் கொடுத்தேன்.நான்கரை ஆண்டு களில், மூன்று மொழிகளில்,60 படங்களுக்கு மேல், கதாநாயகியாக நடித்திருந்தேன். ஏராளமான வாய்ப்புகள் வந்த நேரத்தில், அவற்றை வேண்டாம் என உதறி, திருமண வாழ்வில் புகுந்தேன். பெற்றோரை எதிர்த்து, நான் சென்ற இல்லற வாழ்க்கையில் நிறைய மனக் கசப்புகளையும், கஷ்டங்களையும் சந்தித்தேன். அப்போது தான், கல்யாண விஷயத்தில், நான் எடுத்த முடிவு தவறு என உணர்ந்தேன்.
திருமண பந்தத்திலிருந்து இருவரும் விலகி, சுமுகமாக விவாகரத்து பெற்றோம். அது போன்ற ஒரு நாளை, யாருமே எதிர்கொள்ளக் கூடாது. அவ்வளவு அழுகை; அவ்வளவு தவிப்பு… அதன் பிறகு தான், பெற்றோர் வீட்டுக்கு போனேன். என் வாழ்க்கையை மீண்டும் பூஜ்யத்திலிருந்து துவங்கினேன். பொருளாதார ரீதியில் ரொம்ப சிரமப்பட்டேன். அதனால் மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கினேன். நீண்ட இடைவெளிக்கு பின் நடிக்க வந்தது, சிரமமாக இருந்தது. முதலில், ‘டிவி’ சீரியல்களில் தான் நடித்தேன். அதன் பிறகு தான், கொஞ்சம் கொஞ்சமாக சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. அந்த நேரத்தில், கணவர் இன்றி, குழந்தைகளை தனியாக வளர்க்கும் பெண்கள் படும் அவஸ்தைகளை அனுபவித்தேன். தாய்ப் பாசத்தால், ஒவ்வொரு நாளும், மிகப் பெரிய போராட்டங்களை எதிர்கொண்டேன்; அந்த வலியை, பிறரால் உணர்ந்து கொள்ள முடியாது. எனினும், மகள் அபிநயாவை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கினேன். மற்ற என் இரண்டு குழந்தைகளுக்கும், முழுமையான அன்பை கொடுக்க முடியவில்லை. அது, வாழ் நாள் துயரம். அழுது, என் கவலைகளை எல்லாம் தீர்த்துக் கொள்வேன்.என் குடும்ப வாழ்க்கை பற்றி, இணையதளத்தில், பல தவறான தகவல்கள் பரவியபடி இருக்கின்றன. அவை, எனக்கு வருத்தத்தை அளிக்கின்றன.பிரிந்த திருமண பந்தத்தில், இனி, இணைந்து வாழும் எண்ணமே எனக்கில்லை. இவ்வளவு நாள் வாழ்ந்தது போல, இனியும் தனியாகவே வாழ விரும்புகிறேன். இரண்டு மகள்களின் திருமணத்தையும், நன்றாக நடத்தி விட்டேன். பையனுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்ற ஆசை மட்டுமே பாக்கி!