ஐரோப்பாவிலுள்ள லாட்வியா நாட்டு ரிகா தொழில்நுட்பப் பல்கலைக்கழக தகவல் மற்றும் கல்வி மையம் ! சென்னையில் தொடக்கம் !

ஐரோப்பாவில் உள்ள லாட்வியா ( Latvia ) நாட்டில் இயங்கி வரும்,மிக மூத்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான ரிகா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ( Riga Technical University – RTU ) தகவல் மற்றும் கல்வி மையம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் லாட்வியன் நாட்டு அரசால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள இந்தத் தகவல் மற்றும் கல்வி மையம் இந்திய மாணவர்கள், ரிகா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்குவதுடன் , இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயலாற்ற விரும்பும் மற்ற நிறுவனங்களுக்கும் உதவ வழிவகை செய்யப்பட்டுள்ளது .

இது மட்டுமின்றி இந்த மையத்தில் கீழ்க்கண்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.ரிகா பல்கலைக்கழகத்தின் பல்வேறு பட்ட மற்றும் பட்டமேற்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு , அது தொடர்பான விண்ணப்பங்கள் கிடைக்கச் செய்யவும் , விண்ணப்பித்த மாணவர்களை விரைவில் மதிப்பீடு செய்து , மாணவர் சேர்க்கை குறித்த இறுதி முடிவு எடுக்கவும் உதவும் . ரிகா பல்கலைக்கழகத்தில் நடைமுறையில் உள்ள இரட்டை பட்டப்படிப்பு பாடத்திட்டத்திற்கு தேவையான அனைத்து நிர்வாக ஆலோசனைப் பணிகளையும் இந்த மையம் செய்ய உள்ளது . இதில் அந்தப் பல்கலைக்கழகம் வழங்கும் குறுகிய காலப் படிப்புகளுக்கான பாடத்திட்டங்களும் அடங்கும்.

ஆரம்ப கால வடிப்படை பாடத்திட்டங்களின்போது , அவற்றின் அமலாக்கம் மற்றும் மேம்பாடு போன்றவற்றில் தேவையான உதவிகள் செய்யப்படும் .மொத்தத்தில் சென்னையில் ரிகா பல்கலைக்கழகத்தின் முழுமையான அலுவலகமாக இந்த மையம் செயல்படும் . இந்த நிகழ்ச்சியில் , இந்தியாவுக்கான லாட்வியா நாட்டின் தூதர் ஆர்டிஸ் பெர்டுலிஸ் ( Mr.Artis Bertulis ) மற்றும் சென்னையில் உள்ள அதன் துணைத் தூதரக அலுவலகத்தின் கவுரவ துணைத் தூதர் நாராயணசாமி ரவிசந்திரன், ரிகா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் , சர்வதேச கூட்டுறவு மற்றும் ஆய்வு தொடர்பான துறையின் தலைவரும் , பேராசிரியருமான இகோர்ஸ் திபன்ஸ் ( Prof.Igors Tipans ), மற்றும் அத்துறையின் துணை இயக்குனர் ஸேன் புரியயூரா ( Mrs.Zane Purlaura ) உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, இந்திய மாணவர்களுக்கு உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து விரிவான தகவல்களை வழங்கினர்.