யுபிஎஸ்சி-ன் கீழ் நடக்கும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு பயிற்சிபெறும் மாணவர்கள் முதன்மைத் தேர்விற்கு பயிற்சிப்பெற அரசு சார்பில் தங்குமிடத்துடன் கூடிய இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது, இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு வருமாறு:
சென்னையில் பசுமைவழிச் சாலையில் (கிரீன்வேஸ் சாலை) இயங்கி வரும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் ஒவ்வோர் ஆண்டும் இளைஞர்களுக்கு குடிமைப் பணித் தேர்வுகளை எழுத பயிற்சி அளித்து வருகிறது.
இப்பயிற்சி மையம் வகுப்பறைகள், தங்கும் வசதி, உணவு விடுதி, நூலகம் போன்ற அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளது. மாணவர்கள் கட்டணம் ஏதுமின்றி உணவருந்தவும், தங்கிப் படிக்கவும் இங்கு வசதிகள் இருப்பதோடு தரமான பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.