யோகாவில் உலக சாதனை படைத்த விருதுநகர் சிறுமி !

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி முஜிதா, கண்டபேருண்ட ஆசனத்தைச் செய்து யோகாவில் உலக சாதனை படைத்துள்ளார்.விருதுநகர் சூலக்கரையைச் சேர்ந்த கோவிந்தராஜ்-பார்வதி தம்பதியின் 9 வயது மகள் முஜிதா. செவல்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு பயின்று வருகிறார்.சிறு வயது முதல் யோகா கற்று வரும் மாணவி முஜிதா, அதைச் சிறப்பாகச் செய்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பாராட்டு பெற்றுள்ளார். இந்தநிலையில் ‘நோபல் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெரும் வகையில் யோகா செய்து, அசத்தியிருக்கிறார் முஜிதா.

பள்ளி வளாகத்தில் நடந்த இந்நிகழ்வில் ஒரு அடி அகலமும், 21 இன்ச் அளவுள்ள சிறிய மீன் தொட்டியில் கண்டபேருண்ட ஆசனத்தை 8 நிமிடம் செய்து உலக சாதனை படைத்தார். மிகவும் கஷ்டமான இந்த ஆசனத்தை அநாயசமாகச் செய்து சாதனை படைத்த முஜிதாவை அனைவரும் பாராட்டினார்கள்.

இதற்கு முன் 2012-ல் வெளிநாட்டில் ஒருவர் 3 நிமிடம் இதுபோன்ற யோகா செய்ததே சாதனையாகவே இருந்தது. அந்தச் சாதனையை முஜிதா இன்று முறியடித்துள்ளார். இதன் மூலம் ‘நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்ஸில் முஜிதா இடம் பெற்றார்.சாதனை படைத்த மாணவி முஜிதாவவுக்கு சான்றிதழ்களும் பதக்கத்தையும் நடுவர்கள் வழங்கினார்கள். பள்ளி ஆசிரியர்கள், ஊர்க்காரர்கள் அனைவரும் பாராட்டினார்கள்.