‘உயிருடன் இருப்பவர்களுக்கு, பேனர்கள் வைக்க தடை விதிக்கலாமா, இல்லையா என்பதையும், ‘டிவிஷன் பெஞ்ச்’ பரிசீலிக்கலாம்’ என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்தவர் ரவி; இவரது மகள் சுபஸ்ரீ. இரு சக்கர வாகனத்தில், வீட்டுக்கு சென்றபோது, பள்ளிக்கரணையில் சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர் சரிந்ததில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியதில், மரணம் அடைந்தார். இது, செப்., 12ல் நடந்தது. இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ முன், விசாரணையில் உள்ளது. பேனர் வைத்த, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சுபஸ்ரீயின் தந்தை ரவி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சி.சரவணன் அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, கூடுதல் அட்வகேட் ஜெனரல் எமிலியாஸ், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தெரிவித்தனர். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பேனர் தொடர்பான வழக்குகள், வேறு நீதிபதிகள் அமர்வு முன், நிலுவையில் உள்ளன. மகளை இழந்த தந்தையின் துயரம் வருந்தத்தக்கது. பேனர் வைத்ததற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே, பேனர் தொடர்பான வழக்குகள், வேறு அமர்வில் இருப்பதால், வழக்கின் தகுதி பற்றி, நாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நிலுவையில் உள்ள வழக்குகளோடு, இந்த வழக்கையும் சேர்த்து, விசாரணைக்கு பட்டியலிட, பதிவுத்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. அப்போது, மனுதாரர் தரப்பையும் கேட்க, சந்தர்ப்பம் அளிக்கப்படும்.
சட்டம் மற்றும் விதிகளில் திருத்தம் வரும் வரை, உயிருடன் இருப்பவர்களுக்கு, பேனர் வைக்க தடை விதிக்கலாமா; இல்லையா என்பதை, டிவிஷன் பெஞ்ச் பரிசீலிக்கலாம். பேனர் வைக்க அனுமதி கோருபவரின், ஆதார் அட்டை விபரங்களை வழங்கும்படி, அனுமதி அளிக்கும் அதிகாரி கேட்பது குறித்தும் பரிசீலிக்கலாம். அப்போது, விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, புகைப்பட அடையாளம் மற்றும் விபரங்கள் உதவியாக இருக்கும். இந்த வழக்கையும், வரும், 23ம் தேதி விசாரணைக்கு வர உள்ள, பேனர் தொடர்பான வழக்குகளுடன் சேர்த்து, பட்டியலிட வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.