உத்தர பிரதேச காவல்துறை வன்முறை ! அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பொது நல மனு தாக்கல்!

உத்தர பிரதேச காவல்துறை வன்முறை குறித்து நீதிமன்ற விசாரணை கோரி அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பொது நல மனு தாக்கல்!

உத்தர பிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் தொடர்புடைய காவல்துறை வன்முறை குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது. இயக்கத்தின் உத்தர பிரதேச மாநில தற்காலிக கமிட்டி உறுப்பினர் முகம்மது ஷெஹ்ஷாத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

CAA-NRC-NPRக்கு எதிரான போராட்டங்கள் மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் அமைதியாக இருந்த போதும் சட்டவிரோத கைதுகள், கஸ்டடி சித்திரவதைகள் என அனைத்து விதமான அடக்குமுறைகளை உத்தர பிரதேச காவல்துறை மேற்கொண்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளும் கூட குறிவைக்கப்பட்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட காவல்துறை துப்பாக்கி சூட்டில் பல அப்பாவி உயிர்கள் இழக்கப்பட்டன. காணொளி காட்சிகள் மற்றும் உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட போதும், புதிய பொய் வழக்குகளை பதிவு செய்தும் ஊடகத்தின் ஒரு பிரிவினரை கொண்டு பொய் செய்திகளை பரப்பியும் யோகி அரசாங்கம் செயல்பாட்டாளர்களை தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்தது. இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்ற மனுக்களுடன் சேர்த்து இந்த வழக்கை நாளைய தினத்திற்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.