இணையதள மோசடிகள் !

மூடநம்பிக்கைகளுக்கும், மோசடிகளுக்கும் அறிவியல் வளர்ச்சியைப் பயன்படுத்துவது முன்னெப்போதும்விட மிக பிரம்மாண்டமாக விரிவடைந்தே வருகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் அண்மைக்காலமாக வெளிநாட்டுப் பெண்களின் பெயரில் முகநூல் வழியாக நட்பினை உருவாக்கி பணம் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. முகநூலில் அதிக நேரம் செலவிடுவோர் இதில் சிக்கிக் கொள்கிறார்கள்.முன்பெல்லாம் ஆபாசமான படங்களும், உரையாடல்களும்தான் நம்மை மோசடிக்குள் சிக்க வைக்கும். இப்போதெல்லாம் அப்படியல்ல. நாகரிகமான பொருளாதார மோசடிகள் பெருகிவிட்டன. நடுத்தர வர்க்கத்தினரும் இதில் பரிதாபமாக வீழ்ந்துள்ளனர்.தொடக்கத்தில் முகநூலில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் நட்பு அழைப்பினை அனுப்புவார். வழக்கமாக நட்பு அழைப்பினை ஏற்கும்போது அவரது நட்பு பட்டியலில் நமக்குத் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா எனப் பார்ப்போம். அவ்வாறாக ஓரிருவர் இருப்பர். உடனே அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டால் மிகச் சில நிமிடங்களில் மெசஞ்சரில் வருவார்கள். “தங்களது புரோபைல் பார்த்தேன், மிகவும் நம்பிக்கையானவராகத் தெரிகிறீர்கள், தங்களிடம் பேச வேண்டும், வாட்ஸ்ஆப் எண் இருக்கிறதா?’ என்பார்.

வாட்ஸ்ஆப் எண் கொடுத்துவிட்டால் அடுத்து தொடர்ச்சியாக நட்பு நெருக்கமாகும். தன்னைப் பற்றி விரிவாகச் சொல்லிவிட்டு சில புகைப்படங்களையும் அனுப்புவார். கெüரவமான வேலையில் இருப்பதாகக் குறிப்பிடுவார். நமது குடும்பத்தைப் பற்றி விசாரிப்பார். தனது குடும்பம் என்ற பெயரில் சில தகவல்களைத் தெரிவிப்பார். “மிக விரைவில் உங்கள் நாட்டுக்கு வர விரும்புகிறேன், தங்கள் குடும்பத்தினரைப் பார்க்க வேண்டும் என ஆவலாக உள்ளேன்’ என்றெல்லாம் உரையாடல் விரிவடையும். நமக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அந்த உரையாடல் இருக்கும்.அதன்பிறகு, ஒரு நாள் “எனக்கு பிறந்த நாள், அதனையொட்டி எனது குடும்பத்தினருக்கு சில பரிசுப் பொருள்களை வாங்க கடைவீதிக்குச் செல்கிறேன். உங்கள் குடும்பத்தினருக்கும் சிலவற்றை வாங்கி அனுப்புகிறேன்’ எனச் சொல்லி நம்மிடம் வீட்டு முகவரியைக் கேட்பார்.ஓரிரு நாள்களில் அவர் வாங்கியதாக சில பொருள்களின் படங்கள் வரும். ஷூ, பெல்ட், ஓவர் கோட், வாசனைத் திரவியங்கள், நவீன பெட்டிகள், குழந்தைகளுக்கான உடைகள் என நம்மை வசீகரிக்கும் பொருள்கள் அவற்றில் இடம்பெறும். தங்கள் நாட்டிலிருந்து அனுப்பியதற்கான பார்சல் போன்ற (முகவரி ஒட்டிய!) ஒன்றின் படமும் இருக்கும்.

நாமும் கிளர்ச்சியடைந்து நன்றிகளையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்போம். அடுத்த நாள் தில்லி விமான நிலையத்தில் இருந்து அழைப்பதாக ஒரு பெண் நம்முடைய எண்ணில் பேசுவார். குறிப்பிட்ட அந்த நாட்டிலிருந்து பார்சல் வந்திருப்பதாகவும், வெளிநாட்டுப் பொருள்களுக்கான சுங்கக் கட்டணம் செலுத்தினால் அவற்றை தங்களுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறுவார்.
சுமார் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை (நம்முடைய உரையாடலில் நம்முடைய பொருளாதார நிலையை உணர்ந்திருப்பார்கள்!) கட்டணம் என்பார்கள். அன்போடு அனுப்பும் நட்பு என்பதாலும், வெளிநாட்டுப் பொருள் என்கிற ஆசையும் நம்மை சற்றே சரிய வைத்துவிடும்.பணத்தைச் செலுத்துவதற்கான வங்கிப் பரிமாற்ற விவரங்களைத் தெரிவிப்பார்கள். உஷாராகாமல் பணத்தை அனுப்பிவிட்டால், அதன்பிறகு அந்த எண், வங்கிக் கணக்கு விவரம் அனைத்தும் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிடும்.அல்லது கொஞ்சம் கருணை கொண்டவராக இருந்தால் ஒன்றுக்கும் ஆகாத சில குப்பைகளை வைத்து ஒரு பார்சலை நமக்கு அனுப்பிவிடுவார்கள். செல்லிடப்பேசி எண் பார்ப்பதற்கு லண்டன் எண் போன்றே இருக்கும். இணையதளம் மூலம் அப்படியான எண்ணையும் உருவாக்கலாம் என்கிறார்கள். பணம் கைமாறிய பிறகு அந்த எண் செயலிழந்துவிடும். இது ஒரு வகை.

இன்னொரு வகை, ஏற்கெனவே சம்பவங்களாக வெளியானதுதான். முகநூல் மெசஞ்சரில் அன்பொழுகப் பேசும்போது மின்னஞ்சல் முகவரியைக் கேட்டுப் பெறுவார்கள். மின்னஞ்சலில் பெருங்கதை நம்மை வீழ்த்துவதற்காகக் காத்திருக்கும்.அல்லது, “எங்கள் நாட்டில் என்னை அகதியாகப் பிடித்து வைத்திருக்கிறார்கள். நெருக்கமான உறவு என யாரேனும் முன்வந்தால் எங்களோடு பறிமுதல் செய்யப்பட்ட பெருந்தொகையையும் சேர்த்துவிடுவிப்பார்கள்’ என்றும் கதை செல்லும்.எந்த வழியானாலும், நம்மிடம் அவர்கள் கேட்பது வங்கிக் கணக்கு விவரங்கள். அய்யோ பரிதாபம் என்றோ, பெருந்தொகை கிடைக்கப் போகிறது என்றோ நினைத்து வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்பிவிட்டால் அதோகதிதான். முன்தொகை (பங்குத் தொகை) அனுப்பினால் தான் பெருந்தொகை ‘ரிலீஸ்’ ஆகும் என்றும் கூறிவிடுவார்கள்.

கோடி கோடியாக வரப் போகிறது, சில லட்சங்கள் தானே என இணையதள பரிவர்த்தனைக்கான எல்லா ஒப்புதலையும் கொடுத்துவிடுவோம். வங்கிக் கணக்கில் இருந்து பணம் வெளியேறும் குறுஞ்செய்தி மட்டும் வந்து கொண்டே இருக்கும். “ஒத்த பைசா’ உள்ளே வராது! ஒரு கட்டத்துக்கும் மேல் எந்த வங்கியிலிருந்து எடுத்தார்கள் என்ற விவரங்களையும் நம் அளவில் தேடிக் கண்டுபிடிக்கவும் இயலாது.நம் நாட்டிலுள்ள சைபர் கிரைம் வசதிகளும் வெளிநாட்டு மோசடிகளைப் பிடிக்கும் அளவுக்கு இன்னும் உயரவே இல்லை. “உஷாரா இருக்கக் கூடாது? இவ்வளவு படித்திருக்கிறீர்களே?’ என நம்மைத் திருப்புவார்கள். போனது போனதுதான்.எனவே, எக்காரணம் கொண்டும் எல்லையை மீறிவிடக் கூடாது. வெளிநாட்டிலிருந்து வரும் நட்பு அழைப்புகளை ஏற்பதே முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. சரி, பொழுதுபோகட்டும் என விரும்பினால், கொஞ்சம் சுய சிந்தனையுடன் அடுத்தடுத்த உரையாடல்களைக் கொண்டு சென்றால் நலம். வெளியே சொல்ல முடியாத அளவுக்கு சங்கடமாகிவிடும்.இதிலெல்லாம் சிக்கியவர்கள் ஏதோ மேல்தட்டைச் சேர்ந்தவர்களல்ல. சாதாரண, நடுத்தர மக்களும் இந்த வலையில் சிக்கியிருக்கிறார்கள். சமூக ஊடகங்கள் இப்படியும் நம்மைச் சிதைக்கின்றன. தேவைக்கு மட்டும் பயன்படுத்துவோம். ஆசையே துன்பங்களுக்கெல்லாம் காரணம்.எச்சரிக்கையோடு இருப்போம்!

Related posts:

டெல்லி சிக்னல் ! ஓபிஎஸ் குஷி !! எடப்பாடி அப்செட் ?
வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் மெசேஞ் அனுப்ப இனி டைப் செய்யத் தேவையில்லை ! சொன்னால் அதுவே டைப் செய்து கொள்ளும் !!
காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'!
இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை?மத்திய அரசு தீவிரம் !
ஜி.எஸ்.டி.தாக்கல் செய்யாதவர்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் ?
தமிழ்நாட்டில் கருவுறாமை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது !
ஓ.பி.எஸ் ஐ கைவிட்டது பாஜக.
வெள்ளி விழா நாயகன் மோகன் நடிப்பில் உருவாகும் 'ஹரா' !