ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..!

ஆதார் அட்டையை வைத்து பல சர்ச்சைகளும் கிளம்பிக் கொண்டே தான் இருக்கின்றன. கடந்த செப்டம்பர் 2018-ல் உச்ச நீதிமன்றம், ஆதார் பயன்பாடு தொடர்பாக தீர்ப்பு வழங்கிய பிறகும் கூட இந்த சர்ச்சைகளும் அங்கும் இங்குமாக கிளம்பிக் கொண்டு தான் இருக்கின்றன. அரசு தன்னால் முடிந்த வரை ஆதாரை பாதுகாப்பானதாக வைத்துக் கொள்ளவும், ஆதார் தரவுகளை பயனுள்ளதாக பயன்படுத்தி பொது மக்களுக்கு சேவை செய்யவும் முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறது. அந்த முயற்சியில் ஒரு நல்ல விஷயமாக, தற்போது ஆதாரை வங்கிக் கணக்கு தொடங்க பயன்படுத்தலாம் எனச் சொல்லி இருக்கிறது

ஆதார் வங்கி கணக்கு இதெல்லாம் பழைய விஷயம் தானே. வங்கிக் கணக்கைத் தொடங்க, பல மாதங்களாக ஆதார் அட்டையை பயன்படுத்திக் கொண்டு தானே இருக்கிறோம். எனக் கேட்கிறீர்களா..? ஆதார் அட்டையில் உங்களின் தற்போதைய விலாசம் இருந்தால் பிரச்னை இல்லை. அப்படி தற்போது வசிக்கும் முகவரி, ஆதார் அட்டையில் இல்லை என்றால்..? சில வங்கிகள் ஏற்றுக் கொள்வதில்லை. முந்தைய நடைமுறை பொதுவாக வங்கிக் கணக்கைத் துவங்க கே வொய் சி டாக்குமெண்டுகளை வங்கி கேட்கும். அப்போது முகவரி சான்றுக்கு நம்மிடம் இருந்து ஏதாவது அடையாள அட்டையைக் கேட்பார்கள். இப்படி முகவரிக்கு ஒரு அடையாள அட்டை கொடுத்த பின், டிஜிட்டல் சரிபார்ப்புக்கு ஆதாரையும் சமர்பிக்கச் சொல்கிறார்கள். ஆதாரிலும் ஒரே முகவரி இருந்தால் தான் எடுத்துக் கொள்வோம் என சில வங்கிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இனி முதல் இப்படித் தான் இப்போது Prevention of Money-laundering (Maintenance of Records) Rules of 2005-ன் படி, தற்போது வசிக்கும் முகவரியும், ஆதாரில் வேறு ஒரு முகவரி இருந்தாலும், டிஜிட்டல் சரிபார்ப்புக்கு ஆதாரை எடுத்துக் கொள்ளலாம் எனச் சொல்லி இருக்கிறது அரசு. அதாவது டிஜிட்டல் சரி பார்ப்புக்கு, ஆதார் அட்டையில் தற்போது வாழும் இடத்தின் முகவரி அப்டேட் செய்யப்படவில்லை என்றாலும் எடுத்துக் கொள்ளலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். சுருக்கம் இனி வங்கிக் கணக்கு துவங்க, தற்போது வசித்துக் கொண்டிருக்கும் இடத்தின் விலாசமும், ஆதார் அட்டையில் இருக்கும் விலாசமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தன் தற்போதைய விலாசத்துக்கு, இது தான் என்னுடைய தற்போதைய விலாசம் என ஒரு Self Declaration கொடுத்து, டிஜிட்டல் சரி பார்ப்புக்கு ஆதாரைக் கொடுத்து வங்கிக் கணக்கைத் தொடங்கலாம். நடைமுறை இந்த புதிய விதிமுறைகள், நேற்று (நவம்பர் 13, 2019, புதன்கிழமை) முதல் அமலுக்கு வந்துவிட்டது. இனி தைரியமாக மாறுபட்ட விலாசங்களை வைத்துக் கொண்டும், வங்கிக் கணக்கைத் திறக்கலாம். ஆதாரில் இருக்கும் நம் கைரேகை போன்ற தரவுகளை உடனடியாக சரி பார்த்து விடுவதால், அடுத்த சில நாட்களிலேயே வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துவிடுகிறது. ஏற்றுக் கொள்ளும் வங்கிகள் எஸ் பி ஐ, ஹெச் டி எஃப் சி போன்ற பெரிய பெரிய வங்கிகள் எல்லாம் ஆதாரிலோ அல்லது மற்ற அடையாள அட்டைகளிலோ எதாவது ஒரு முகவரியை (நிரந்தர முகவரி அல்லது தற்போதைய முகவரி) குறிப்பிட்டு இருந்தாலே போதும். ஆதார் அட்டையை மட்டுமே வைத்துக் கொண்டு கூட தனி நபர்களுக்கு சேமிப்பு வங்கிக் கணக்கைத் திறந்து கொடுக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுக்க இனி, இந்தியாவில் எந்த மாநிலத்துக்குச் சென்று, நம் முகவரிக்கு ஒரு Self declaration கொடுத்து, ஆதார் கார்டை சமர்ப்பித்து, வங்கிக் கணக்கைத் தொடங்கி பயன்படுத்த முடியும். இந்த வசதியால் வேறு மாநிலங்களுக்குச் சென்று வேலை செய்யும் சாதாரண கூலித் தொழிலாளர்கள் தொடங்கி பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் மாத சம்பளம் வாங்குபவர்கள் வரை பயன் பெறுவார்கள்.