தொலைதூரத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்குத் தொடர்ச்சியான மருத்துவ சேவையை வழங்க ‘பியாண்ட் ஃப்ரான்டியர்ஸ் டிரஸ்ட்’ அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!

மருத்துவ சேவை எளிதில் கிடைக்காத கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிபுணத்துவ மருத்துவ உதவியை விரிவாக்கும் நோக்கில், ‘பியாண்ட் ஃப்ரான்டியர்ஸ் டிரஸ்ட்’ (Beyond Frontiers Trust – BFT) என்ற பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கற்ற, மதச்சார்பற்ற அமைப்பு இன்று சென்னையில் உள்ள எம்எம்ஏ மேலாண்மை மையத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

மூத்த மருத்துவர் முனைவர் எஸ்.சி. சண்டில்யா என்பவரால் தொடங்கப்பட்ட பிஎப்டி அமைப்பு, முதற்கட்டமாக ஜவாது மலையில் தனது பணிகளைத் தொடங்கியது. கரடுமுரடான நிலப்பரப்பு, நீண்ட தூரம் மற்றும் போதிய போக்குவரத்து வசதியின்மை ஆகியவற்றால் அங்குள்ள பல பழங்குடியின மக்களுக்கு நிபுணத்துவ மருத்துவ சேவை கிடைப்பது சவாலாக இருந்தது.

இதுவரை நடத்தப்பட்ட 18 இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம், இந்த அறக்கட்டளை சுமார் 150 கிராமங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 4,000 மக்களின் வாழ்நாளில் நல்மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பக்கட்ட நோய்க்கண்டறிதல் மற்றும் பரிசோதனைகளுடன் தொடங்கி, தேவையான மருந்துகள், மேல் சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள், மருத்துவப் பதிவுகள் பராமரித்தல், தொடர் ஆலோசனைகள் மற்றும் தொடர்ச்சியான பராமரிப்புச் சேவைகளை இந்த அமைப்பு ஒருங்கிணைத்து வழங்கி வருகிறது.

“எங்களது நோக்கம், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களிலும், போதிய வசதிகளற்ற பழங்குடியினப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு நேர்மையான, முழுமையான மருத்துவக் கண்டறிதலையும் சிறப்புச் சிகிச்சையையும் வழங்குவதாகும். கரடுமுரடான மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் தாண்டி கிராமங்களைச் சென்றடைவது மட்டுமல்லாமல், குணப்படுத்தக்கூடிய நோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து, மக்களை சுகாதார அமைப்போடு இணைத்து, அவர்கள் ஆரோக்கியமான, நீண்ட ஆயுளுடனான வாழ்க்கையை வாழ உதவுவதும்தான் எங்கள் முன்னே உள்ள முக்கிய சவால்” என்று பியாண்ட் ஃப்ரான்டியர்ஸ் டிரஸ்ட் அமைப்பின் நிறுவனர் மருத்துவர் எஸ்.சி. சண்டில்யா கூறினார்.

பியாண்ட் ஃப்ரான்டியர்ஸ் அறக்கட்டளை அமைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு குறைபாடுகள், மூட்டுவலி மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட தொற்றா நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நிர்வகிப்பதில் சிறப்பு கவனம் செலுத்துகிறது; அதோடு, கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோய்களுக்கான ஆரம்பக்கட்ட பரிசோதனைகளையும் செய்கிறது. மேலும், இரத்த சோகை, ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வை தனது மருத்துவச் சேவைகளோடு இணைத்து இது வழங்கி வருகிறது.

இந்தத் தொடக்க விழாவில், அப்பல்லோ மருத்துவமனை நிறுவனத்தின் புரமோட்டர் இயக்குநரும், அப்பல்லோ ஹெல்த் கோ. லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவருமான டாக்டர் சோபனா காமினேனி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் தலைவர் செல்வி ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப (ஓய்வு) மற்றும் டிவிஎஸ் சீமா ஸ்காலர்ஷிப் ஃபவுண்டேஷன் தலைவர் திரு. ஸ்வரன் சிங், இ.ஆ.ப (ஓய்வு) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

“புவியியல் தடைகளைக் கடந்து, தரம்மிக்க சிறப்பு மருத்துவ சேவை அனைவரையும் சென்றடையும் போது மட்டுமே மருத்துவத்தில் சமத்துவத்தை அடைய முடியும். வழக்கமான மருத்துவக் கட்டமைப்புகள் எட்ட முடியாத தூரத்தில் உள்ள மக்களுக்கு, ஆரம்பக்கட்டப் பரிசோதனை, நோய்க்கண்டறிதல், மேல் சிகிச்சைக்கான வழிகாட்டுதல் மற்றும் தொடர் பராமரிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவதன் மூலம் பியாண்ட் ஃப்ரான்டியர்ஸ் அறக்கட்டளை அமைப்பு ஒரு முக்கியமான தேவையைப் பூர்த்தி செய்கிறது. கூட்டுமுயற்சியும் தொடர்ச்சியான செயல்பாடுகளும் மருத்துவச் வசதியற்ற பகுதிகளின் சுகாதாரத்தில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதற்கு இத்தகைய மாதிரிகள் சிறந்த சான்றாகும்,” என்று டாக்டர் சோபனா காமினேனி கூறினார்.

மக்களின் தேவைகளைக் கேட்டறிவதிலும், அவர்களின் நம்பிக்கையைப் பெறும் வரை அவர்களுடன் இணைந்து செயல்படுவதிலும்தான் சேவை தொடங்குகிறது. தொலையிலுள்ள குடும்பங்களின் வாழ்க்கையில் மருத்துவச் சேவை ஒரு நிலையான மாற்றத்தை உருவாக்க வேண்டுமானால், பிஎப்டி அமைப்பு தனிநபர் கவனம் மற்றும் தொடர் பராமரிப்பிற்கு அளிக்கும் முக்கியத்துவம் மிக அவசியமானது. இந்தத் தத்துவங்கள் ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் (எஸ்எஸ்டி) அமைப்பின் கொள்கைகளோடு மிகச் சரியாக ஒத்துப்போகின்றன; பிஎப்டி அமைப்புடன் எஸ்எஸ்டி கைகோர்ப்பதற்கும் இதுவே முக்கியக் காரணம்,” என்று செல்வி ஜெயஸ்ரீ முரளிதரன் கூறினார்.

“தெளிவான ஒரு நோக்கத்திற்கு, ஒழுங்குமுறையான செயல்படுத்தல், வெளிப்படையான நிர்வாக முறைமை மற்றும் அர்ப்பணிப்புள்ள கூட்டாண்மை ஆகியவை துணையாக இருக்கும்போதுதான் நிலையான சமூக மாற்றம் உருவாகிறது. மிக முக்கியமான ஒரு தேவைக்காக இத்தகையதொரு வலிமையான நிறுவனத்தைக் கட்டமைக்கும் வாய்ப்பு பிஎப்டி அமைப்பிற்கு உள்ளது,” என்று திரு. ஸ்வரன் சிங் கூறினார்.

ஜவாது மலையில் அறக்கட்டளை ஆற்றிய பணிகள் குறித்த குறும்படம், அங்குள்ள கள அனுபவத்தைப் பார்வையாளர்களின் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியது. சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அழைப்பாளர்களின் உரைகளைத் தொடர்ந்து, “எல்லைகள் கடந்த மருத்துவச் சேவை” என்ற தலைப்பில் கலந்துரையாடல்) நடைபெற்றது. இதில் நிறுவனர், மருத்துவச் சமூகம் மற்றும் அமைப்பின் ஆதரவாளர்கள் ஆகியோர் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அதன்பின்னர், அமைப்பின் ‘எதிர்காலச் செயல் திட்டங்கள்’ (Road Ahead) குறித்த விளக்கக்காட்சி இடம்பெற்றது.

“ஒரு மருத்துவ முகாம் என்பது வெறும் தொடக்கம் மட்டுமே. பரிசோதனை மற்றும் நோய்க்கண்டறிதலில் தொடங்கி, சிகிச்சை, தொடர் ஆலோசனைகள் மற்றும் முழுமையான குணமடைதல் வரை நோயாளிக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் ஒரு மருத்துவப் பாலத்தைக் கட்டுவதே எங்கள் நோக்கமாகும்,” என்று மருத்துவர் சண்டில்யா மேலும் கூறினார்.

டாக்டர் V. சுகுமாரன் – மூத்த குழந்தைகள் நல மருத்துவர்

டாக்டர் K. பாண்டியன் – மூத்த குழந்தைகள் நரம்பியல் நிபுணர்

டாக்டர் சாந்தி குணசிங் – மூத்த மகப்பேறு மருத்துவர் (ஓய்வுபெற்ற இயக்குநர், அரசு தாய்மை மற்றும் மகப்பேறு மருத்துவக் கல்லூரி)

டாக்டர் ராதா பாய் பிரபு – மூத்த மகப்பேறு மருத்துவர் (ஓய்வுபெற்ற இயக்குநர், அரசு மகப்பேறு மருத்துவமனைகள்)

டாக்டர் சாந்தி விவேகானந்தன் – மகப்பேறு மருத்துவர், அப்பல்லோ மருத்துவமனை

டாக்டர் சாத்தப்பன் – தொழிலசார் சுகாதாரத்துறை பேராசிரியர்

டாக்டர் சுகுமார் – மூத்த பொது மருத்துவர், குடியாத்தம்

டாக்டர் சாரே பால் – மூத்த பேராசிரியர் – நோயியல் துறை (Pathology)

பழங்குடியின மக்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கான எங்களது அறப்போராட்டத்தில் இணைந்த எங்களது இளம்தலைமுறை சிறப்பு மருத்துவர்கள் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் அங்கச்சாரத்தையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்:

டாக்டர் பிரபு – பொது மருத்துவர், திருப்பத்தூர்

டாக்டர் காயத்ரி – குழந்தைகள் நல மருத்துவர், திருப்பத்தூர்

டாக்டர் சிதம்பரம் – குழந்தைகள் நல மருத்துவர், திருப்பத்தூர்

டாக்டர் ஜெயசீலா – மகப்பேறு மருத்துவர், வேலூர்

டாக்டர் சரவணன் – பொது மருத்துவர், வேலூர்

டாக்டர் நாகராஜன் – மூத்த பொது மருத்துவர், சேலம்

பிஎப்டி-யின் அடுத்த கட்டப் பணிகளில், தனது இரண்டாம் கட்ட சிறப்பு மருத்துவர்கள் குழுவைப் பலப்படுத்துதல்; டிஜிட்டல் முறை மருத்துவப் பதிவுகள் மற்றும் ஆலோசனைகளை விரிவாக்குதல்; கிராமங்களுக்குத் தேவையான மருந்துகளைத் தொடர்ச்சியாக வழங்குதல்; நடமாடும் மருத்துவ ஊர்திகளுக்காகக் காட்சி-கேள்வி வடிவிலான சுகாதார விழிப்புணர்வுப் பொருட்களைத் தயாரித்தல்; ஜமுனாமரத்தூரில் ஓர் அடிப்படை மருத்துவப் பரிசோதனைக்கூடத்தை அமைத்தல்; மற்றும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்காக ஒரு முன்னோடிச் சமுதாய ஊட்டச்சத்து உணவகத்தை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.

எளிதில் மருத்துவ சேவை சென்றடைய முடியாத தொலைதூரப் பகுதிகளுக்கு, அளவிடக்கூடிய மற்றும் பொறுப்புமிக்க ஒரு சிறப்பு மருத்துவப் பராமரிப்பு அமைப்பைக் கட்டமைக்கும் இந்தப் பணியில் இணைந்து செயல்பட மருத்துவ நிபுணர்கள், மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், தொழில்நுட்ப அமைப்புகள், சி.எஸ்.ஆர் பங்காளிகள், நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இந்த அறக்கட்டளை இப்போது அழைப்பு விடுக்கிறது.

பியாண்ட் ஃப்ரான்டியர்ஸ் டிரஸ்ட் – அறிமுகம்

பியாண்ட் ஃப்ரான்டியர்ஸ் டிரஸ்ட் என்பது மருத்துவர் எஸ்.சி. சண்டில்யா என்பவரால் தொடங்கப்பட்ட ஒரு பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கற்ற, மதச்சார்பற்ற அமைப்பாகும். முதற்கட்டமாகத் தமிழ்நாட்டின் ஜவாது மலைப் பகுதிகளில் தனது பணிகளை மேற்கொண்டு வரும் BFT அமைப்பு, போதிய வசதிகளற்ற ஆதிவாசி மக்களுக்கும், கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கும் நேர்மையான மருத்துவ நோய்க்கண்டறிதல், சிறப்புச் சிகிச்சை மற்றும் தொடர்ச்சியான மருத்துவப் பராமரிப்பை வழங்குவதை நோக்கக் கொண்டுள்ளது. ஒரு மனிதர் வாழும் இடம், அவருக்குக் கிடைக்கும் மருத்துவச் சேவையின் தரத்தை தீர்மானித்துவிடக் கூடாது என்பதற்காக, உள்ளூர் மக்கள், மருத்துவர்கள், மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், தொழில்நுட்பம், தொழில் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களை இந்த அமைப்பு ஒன்று திரட்டிச் செயல்படுகிறது.

Related posts:

மருந்து விற்பனையில் முறைகேடு...? அமெரிக்காவில் 40 மில்லியன் டாலர் அபராதம் பெற்ற ரான்பாக்ஸி!!

பிளாஸ்மா தெரபி சிகிச்சை என்றால் என்ன ?

நீரிழிவு ஒரு நோயே கிடையாது. செரிமானக் கோளாறால் ஏற்படும் சிறு உபாதை தான்..

கொரோனா வைரஸ்: பிரதமர் மோடி வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ..!

பாலில் ஒரு பூகம்பம் ! பூச்சிக்கொல்லி தீவனத்தால் புற்றுநோய் வரும் !!

முகக்கவசத்தில் கொரோனா 7 நாட்கள் வரை உயிழ் வாழும் ? ஆய்வில் வெளியான தகவல்கள் ?

சென்னை வாசிகள் சராசரி இந்தியர்களை விட அதிக அளவில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் !!

முழுவதும் தானியங்கி முறையில் சமையல் செய்யும் ' ரோபோசெஃப் ' ( ROBOCHEF ) !