2020ம் ஆண்டில் ஜீ தமிழ் சினி விருதுகள் !

தமிழில் உள்ள தனியார் சாட்டிலைட் டிவிக்களில் 2008ல் துவங்கப்பட்ட ஜீ தமிழ் டிவிக்கும் தனி இடம் உண்டு.பல வித்தியாசமான நிகழ்ச்சிகளால் அவர்களும் முன்னணி இடத்திற்கு தங்களை முன்னேற்றிக் கொண்டார்கள்.தங்கள் டிவியில் ஒளிபரப்பாகும் டிவி தொடர்களையும், அதன் நட்சத்திரங்களையும் ஊக்கப்படுத்துவதற்காக ஜீ தமிழ் குடும்ப விருதுகள் என்ற நிகழ்ச்சியை நடத்தி ரசிகர்களிடமும் பாராட்டைப் பெற்றார்கள்.தற்போது தமிழ் சினிமா உலகில் உள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஜீ தமிழ் சினி விருதுகள் நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள்.

2020ம் ஆண்டில் இந்த விருது விழா நடைபெற உள்ளது.இந்த விருதுகளுக்கான தேர்வுக் குழுவில் சுகாசினி மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், பரத்பாலா, கரு பழனியப்பன், பரத்வாஜ் ரங்கன் ஆகியோர் உள்ளனர். தமிழ் சினிமா விருதுகள் பற்றிய பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடுவர் குழுவினருடன் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். ஜீ தமிழ் டிவியின் சுஜு பிரபாகரன், தமிழ்தாசன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் சுஜு பிரபாகரன் பேசுகையில்,
“ஜீ தமிழ் துவங்கி 11 வருடங்களுக்கு மேல் ஆகிறது. பல புது முயற்சிகளை செய்துள்ளோம். தற்போது உங்கள் அனைவரின் ஆதரவோடு ஜீ தமிழ் சினி விருதுகள் நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறோம். இதற்கு உறுதுணையாக இருக்கும் தேர்வுக் குழு நபர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

தமிழ் தாசன் பேசும்போது,
“இந்தநாள் ஜீ தமிழின் முக்கியமான நாள். இந்த விழாவை நடத்த சென்ற வருடம் முயற்சித்தோம். தற்போது தான் இதை நடத்த முடிந்துள்ளது. திரைப்படத்திற்கும் , தொலைக்காட்சிக்கும் இடையே ஒரு பெரிய உறவை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த விருது விழா இருக்கிறது.கடந்த நான்கு வருடத்தில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 700 படங்கள் வெளியாகியதில் ஜீ தமிழ் 120 முதல் 130 படம் வரை திரைப்பட உரிமையைக் கைப்பற்றியது. அதில் 70 க்கும் மேற்பட்ட படங்கள் 1 கோடிக்கும் குறைவான பட்ஜட்டில் எடுக்கப்பட்ட சிறிய படங்கள். அந்த படங்கள் அனைத்திற்கும் எங்களது ஆதரவை நாங்கள் அளித்துள்ளோம். மேலும் இன்னும் அதிக திரைப்படங்களை நாங்கள் ஊக்குவிக்க இருக்கிறோம். அதன் தொடக்கமாக இந்த ஜீ தமிழ் சினி விருதுகள் நிகழ்ச்சியை துவங்குகிறோம். இந்த விருதுகளுக்கான தேர்வுகள் மிகவும் நேர்மையாக நடைபெறும்,” என்றார்.

சுகாசினி மணிரத்னம் பேசுகையில்,
“இந்த விருதுக்கான தரம் முதன்மையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவு தேர்வுக்குழு அமைந்துள்ளது. என் அம்மா ஜீ தமிழ் தொலைக்காட்சியை விரும்பிப் பார்த்து வருபவர். இந்த விருது விழாவில் இணைந்ததை அறிந்த என் அம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தார்,” என்றார்.

கரு பழனியப்பன் பேசும் போது,
“பல விருது விழாக்களில் கலந்துகொண்டுள்ளேன். இந்த ஜீ தமிழ் சினி விருதுகள் 2020ல் கலந்துகொள்ள முக்கிய காரணம் நிர்வாகம் தலையிடாமல் நாங்கள் 5 பேர் மட்டும் சிறந்த படங்களைத் தேர்வு செய்வதற்கான உரிமையை வழங்கியதுதான். தமிழ் சினிமாவின் பெருமை மற்ற மாநிலங்களிலும் இன்னும் அதிகம் தெரிய வைக்க எளிதாக அமைகிறது. பிற மாநில மக்களும் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்யலாம்,” என்றார்.

பரத் பாலா பேசுகையில்,
“இந்த விழாவிற்கும், தேர்வு குழுவிற்கும் என்னை இணைத்ததிற்கு நன்றி. இந்த விழாவை விருது வழங்கும் விழாவாக எண்ணாமல் திறமைக்குத் தரும் அங்கீகாரம் என அனைவரும் எண்ண வேண்டும். எதிர்காலத்தில் திரைப்பட கலைஞர்கள் ஜீ தமிழ் விருதுகளை எப்படியாவது பெற வேண்டும் என்ற எண்ணம் வரவைக்கும் அளவுக்கு இந்த விருது வழங்கும் விழா இருக்கப் போகிறது.

கெளதம் வாசுதேவ் மேனன் பேசும் போது,
“இந்தத் தேர்வு குழுவில் இணைந்ததற்க்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது . இதன் மூலம் பார்க்காத திரைப்படங்களை பார்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கிறது. நேரம் இல்லாவிட்டாலும் அதற்கான நேரத்தை செலவிட்டு காண இருக்கிறேன்,” என்றார்.

பரத்வாஜ் ரங்கன் பேசுகையில்,
“ஜீ தமிழ் சினிமா விருதுகள் தேர்வு குழுவில் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சிறந்தமுறையில் தேர்வுகள் நடைபெறும் .

நடிகர் கார்த்தி பேசும் போது,
“ஜீ தமிழுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். தேர்வுக்குழுவினர் மிகப் பெரிய பொறுப்பை எடுத்துள்ளனர். கடினமான வேலைதான். நிறைய படங்கள் பார்க்க வேண்டியிருக்கும் .திரைத்துறையில் எல்லாருக்குமே விருது வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பத்திரிகையில் வரும் சிறிய வார்த்தை கூட கலைஞர்களை உற்சாகப்படுத்தும். அதற்கு தகுந்தாற் போல் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது சிறப்பு,” என்றார்.