2014-ம் வருஷம் ரிலீஸான படம் ஜிகர்தண்டா. சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் வெளிவந்த அப்படம் வெற்றி பெற்றதோடு, நேஷனல் அவார்டும் வாங்கியது. இந்த நிலையில், தற்போது 9 ஆண்டுகளுக்கு பின்னர் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்கிற பெயரில் எடுத்து ரசிகர்களைக் கவர முயன்றிருக்கிறார் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். முந்தைய பாகத்தை விட இதில் கூடுதல் கற்பனை திறனை பயன்படுத்தியிருக்கிறார்.வழக்கமா பார்ட் 2 எடுக்கும் போது வேறு கதைக்களத்தைத் தான் தேர்ந்தெடுப்பார்கள் இயக்குனர்கள்.ஆனால் முதல் ஜிகர்தண்டா போலவே இதிலும் ஒரு ரவுடி & சினிமா டைரக்டர் என்ற கான்செப்ட்தான் என்றாலும் இந்த டபுள் எக்ஸ்-சில் மலை வாழ் மக்களைப் பாடாய்படுத்தி, அங்குள்ள வளங்களை சுரண்ட முயலும் அரசாங்கத்தின் போக்கைச் சுட்டிக் காட்டி இருப்பதாலேயே கொஞ்சம் பார்க்கும் படியாக இருக்கிறது.
ஜிகர்தண்டாவை போலவே ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் இரண்டு கதாநாயகர்களைச் சுற்றியே கதை நகர்கிறது. ஒருவர் இயக்குநர், மற்றொருவர் மோசமான கேங்ஸ்டர். 1970களில் நடப்பது போன்று காட்டியிருக்கிறார் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்.முதலில் மதுரையில் துவங்கும் கதை பின்னர் காட்டுப் பகுதி நோக்கி நகர்கிறது.மதுரையில் இருக்கும் பயங்கரமான கேங்ஸ்டர் சீசரை(ராகவா லாரன்ஸ்) அறிமுகம் செய்து வைக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். மதுரையில் ஃபேமஸான ஜிகர்தண்டா க்ளப்பின் தலைவன் மற்றும் தென் மாவட்டங்களை தன் விரல் அசைவில் வைத்திருக்கும் தாதா ‘அல்லியன் சீசர்’ ரோலில் ராகவா லாரன்ஸ். இன்னொரு பக்கம் போலீஸ் ஆபிசராக ஆசைப்பட்ட எஸ்.ஜே. சூர்யா சந்தர்ப்ப வசத்தால் கொலையாளி முத்திரைக் குத்தப்பட்டு ஜெயிலுக்கு போனவரிடம் மேற்படி தாதா அலியன் சீசரை கொன்றால் சிறையிலிருந்து விடுதலையாவதுடன், அவர் ஆசைப்பட்ட போலீஸ் வேலையும் தரப்படும் என ஆஃபர் கொடுக்கப்படுகிறது. ஏகப்பட்ட யோசனைக்கு பின்னர் ஆஃபரை ஒப்புக் கொண்டவர் ராகவா லாரன்ஸை நெருங்கும் வழியை அலசும் போது பெரும் செல்வந்தரான அவர் சொந்த காசில் தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்றும் இதற்காக நல்ல இயக்குநரைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிய வர அசால்டாக டைரக்டர் அவதாரம் எடுத்து ‘உங்க லைஃப்ஹிஸ்டரியையே காட்ஃபாதர் ஸ்டைலில் உலக சினிமா ஆக்கிபுடலாம்’ என்று பேசி கமிட் ஆகிறார்.ஆனால் நெருங்கி பழகும் போதுதான் ராகவா லாரன்ஸ் சினிமா ஆசைக்கான காரணமும் அவரின் நிஜ பின்னணியும் தெரிந்த நிலையில் நெகிழ்ந்து விடுகிறார் சூர்யா
சத்யஜித் ரேயின் உதவியாளர் என்று சொல்லும் ரே தாசனுக்கு(எஸ்.ஜே. சூர்யா) சீசரின் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் ரே தாசனின் நோக்கம் படம் இயக்குவது மட்டும் அல்ல என்பது சீசருக்கு தெரியாது.கதை நகர நகர, சீசரின் வாழ்க்கையை ரே தாசன் படமாக்க எதிர்பாராத விஷயங்களை எல்லாம் இருவரும் கண்டுபிடிக்கிறார்கள்.
சினிமாவின் பவரை மீண்டும் பயன்படுத்த முயற்சி செய்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால் திரைக்கதையில் வலுவில்லாததால் இடைவேளைக்கு பிறகு சுவாரஸ்யம் குறைகிறது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை, அரசியல் அதிகார போராட்டங்கள், கேங்ஸ்டர்களின் உலகம் என பல்வேறு விஷயங்களை சுவாரஸ்யமாக எடுத்துச் சொன்னாலும் அந்த உலகிற்குள் ரசிகர்களை முழுவதுமாக ஈர்க்க போராடுகிறது படம்.
ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா வரும் காட்சிகள் நன்றாக இருக்கிறது. இடைவேளை காட்சியில் கார்த்திக் சுப்புராஜ் தன் ஸ்டைலில் நம்மை கவர்ந்துவிட்டார். படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். தியேட்டரில் இருப்பவர்களின் பொறுமையை சோதிக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் இரண்டு பாடல்கள் கை கொடுக்கவில்லை. திரைக்கதை வலுவில்லாவிட்டாலும் விஷுவல் ட்ரீட்மென்ட்டும், கார்த்திக் சுப்புராஜின் கலை ஆர்வமும் படத்தை காப்பாற்றுகிறது.இரண்டாம் பாதி பெரிதாக கவரவில்லை. ஆனால் அதை எல்லாம் சரிகட்டுவது போன்று அமைந்திருக்கிறது கிளைமாக்ஸ் காட்சி.
கேங்ஸ்டராக இருந்து ஹீரோவாக மாறும் ராகவா லாரன்ஸின் நடிப்பு பாராட்டும்படியாக இருக்கிறது..முரட்டு போலீஸ் கேரக்டரில் வரும் நவீன் சந்திரா ஈவு இரக்கம் பார்க்காத கொடூர வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகிறார். இவர்கள் தவிர நாயகி நிமிஷா சஜயன், சத்யன், ஷைனி சாக்கோ, இளவரசு என தங்களது பாத்திரங்களை அனைவரும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். எஸ். ஜே. சூர்யா வழக்கம் போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.ஜிகர்தண்டாவை போன்றே வர முயன்று பலமாக சறுக்கியிருக்கிறது ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்.