தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1.25 லட்சம் கோடி கடனில் இருந்து மீளுமா? தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வுதான் தீர்வா?

தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு மிகப் பெரிய கடன் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தக் கடனில் இருந்து தமிழ்நாடு மின்வாரியம் மீள முடியுமா?

ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு (டான்ஜெட்கோ) கடந்த நிதியாண்டின் முடிவில் 1,34,119.94 கோடி ரூபாய் கடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசின் கடன் நீங்கலாக டான்ஜெட்கோவின் மொத்தக் கடன் 1,24,974.49 கோடி ரூபாய்.

இந்த வெள்ளை அறிக்கையின்படி ஒரு யூனிட் மின்சாரத்தை வழங்க டான்ஜெட்கோவிற்கு ரூ. 9.06 செலவாகும் நிலையில் சராசரியாக ஒரு யூனிட்டிற்கு 6.7 ரூபாய் மட்டுமே வசூலிக்க முடிகிறது. இதனால், ஒரு யூனிட் மின்சாரத்தின் விற்பனையில் 2.36 ரூபாய் இழப்பை சந்திக்கிறது டான்ஜெட்கோ.

2000வது ஆண்டுவரை தமிழ்நாடு மின்வாரியம் குறைந்த அளவிலாவது லாபத்தைச் சந்தித்துவந்த நிலையில், அதற்குப் பிறகு மெல்ல மெல்ல இழப்பும் கடன்களும் அதிகரிக்க ஆரம்பித்தன.

ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம், வட்டிச் செலவு ஆகியவை அதிகரித்தது இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டாலும் மின் வாரியத்தின் கொள்முதல் செலவுகள், எரிபொருள் செலவுகளும் வெகுவாக அதிகரித்திருப்பதையும் இந்த வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தமிழ்நாடு மின்வாரியம் பல்வேறு பிரிவினருக்கு பல்வேறு கட்டணங்களில் மின்சாரத்தை வழங்குகிறது. தொழில்துறை பிரிவினரைத் தவிர, மற்ற பிரிவினருக்கு குறைந்த கட்டணத்திலோ அல்லது கட்டணமின்றியோ மின்சாரத்தை வழங்குகிறது.

இதில் விவசாயத்திற்கு என அளிக்கப்படும் மின்சாரம் முழுமையாக இலவசமாக வழங்கப்படுகிறது. விவசாயத்திற்கு அளிக்கப்படும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு 3.32 ரூபாயை மானியமாகத் தருவதாக மாநில அரசு சொன்னாலும் அந்த மானியம் முழுமையாகப் பெறப்படுவதில்லை என வெள்ளை அறிக்கை தெரிவிக்கிறது.அடுத்ததாக வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரத்தைப் பொறுத்தவரை, நுகர்வோரிடமிருந்து சராசரியாக யூனிட்டிற்கு 2.23 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மின்சாரத்தின் விலை ரூ. 9.09ஆக இருக்கும் நிலையில், மாநில அரசு 1.09 ரூபாய் மானியமாகத் தருகிறது.

ஆகவே, வீடுகளுக்கு விற்கப்படும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் ரூ. 5.47 இழப்பு ஏற்படுகிறது. இந்த வகையில் 20 -21ல் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ. 18,735 இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது.

மூன்றாவதாக தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம். தமிழக மின்வாரியத்தைப் பொறுத்தவரை, உற்பத்தி விலையைவிட கூடுதல் விலைக்கு மின்சாரம் விற்பனை செய்யப்படும் ஒரே பிரிவு இது மட்டும்தான். இதிலிருந்து கிடைக்கும் லாபம், மற்ற பிரிவினருக்கு மானியமாக (Cross subsidy) தரப்படுகிறது.

ஆனால், கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு மின் வாரியத்திடமிருந்து தொழிற்சாலைகள் மின்சாரத்தைப் பெறுவதென்பது தொடர்ச்சியாகக் குறைந்து வந்திருக்கிறது. காரணம், தொழிற்சாலைகளுக்கு வேறு வழிகளில் மின்சாரம் குறைந்த விலைக்குக் கிடைப்பதால், அந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவதிலேயே தொழிற்சாலைகள் ஆர்வம் காட்டுகின்றன.

2011 – 12ல் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின்சாரத்தில் 60 சதவீதத்தை தமிழ்நாடு மின்வாரியம் கொடுத்து வந்தது. ஆனால், 2020 – 21ல் அது 31 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. ஆகவே, இந்தப் பிரிவிருந்து கிடைக்கும் லாபமும் வெகுவாகக் குறைந்துவிட்டது.

லாபம் குறைந்ததால், இதிலிருந்து கிடைக்கும் மானியமும் குறைந்துவிட்டது. இதுவே மின்வாரியத்தின் இழப்பீடு அதிகரிக்க மிக முக்கியக் காரணமாக இருக்கிறது.

தமிழக மின்வாரியத்தின் மற்றொரு அங்கமான தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் (டான்ட்ரான்ஸ்கோ) நஷ்டத்தைத்தான் சந்தித்து வருகிறது.

2011 – 12ல் நிகர இழப்பு எதையும் சந்திக்காத மின் தொடரமைப்புக் கழகம், 2020-21ல் 1,299.99 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்திருக்கிறது. பணியாளர்களுக்கான ஊதியம், வட்டிச் செலவு அதிகரித்திருப்பது ஆகியவை முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

இந்த இழப்புகளுக்கு எல்லாம் முக்கியக் காரணமாக, கடந்த பத்தாண்டுகளில் செலவினத்திற்கு ஏற்ப மின் கட்டணம் திருத்தி அமைக்கப்படாததே காரணம் என்கிறது வெள்ளை அறிக்கை. கடந்த பத்தாண்டுகளில் 2012, 2013, 2014, 2017 ஆகிய நான்கு முறை மட்டுமே கட்டணம் திருத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

இவ்வளவு பெரிய நெருக்கடியில் உள்ள தமிழ்நாடு மின்வாரியத்தை மீட்பதற்கு, மின் கட்டண உயர்வு, மின்வாரியத்தை தனியார் மயமாக்குவது ஆகியவற்றைத் தீர்வாக சிலர் முன்வைக்கின்றனர். ஆனால், மின்வாரியம் தனியார்மயமாகும்போது இலவச மின்சாரம் போன்ற சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடியாது என்ற அச்சமும் இருக்கிறது. இதற்கு என்னதான் தீர்வு?

“தொழிற்சாலைகள் மின்சாரத்தைப் பெறுவதில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும். பிரச்சனையைத் தீர்ப்பதில் அது முக்கியப் பங்கு வகிக்கும்” என்கிறார் தமிழ்நாடு மின் பொறியாளர்கள் சங்கத்தின் தலைவரான எஸ். காந்தி.

அதாவது, தொழிற்சாலைகள் தமிழ்நாடு மின் வாரியத்திடமிருந்து மின்சாரத்தைப் பெற்றால் அதிலிருந்து கிடைக்கும் லாபத்திலிருந்து பிற பிரிவினருக்கு மானியம் அளிக்கப்படுகிறது. தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து மின்சாரம் பெற்றாலும், மின்வாரியத்தின் கட்டமைப்பைப் பயன்படுத்தியே அந்த மின்சாரம் கடத்தப்படுவதால், மின்வாரியத்திற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், பல தொழிற்சாலைகள் தங்களுக்குச் சொந்தமாக மின் உற்பத்தி நிலையங்கள் இருப்பதாகக் கூறி, மின் வாரியத்திடமிருந்து மின்சாரம் பெறுவதில்லை.

“ஆனால்,பல தொழிற்சாலைகளுக்கு சொந்தமாக மின் உற்பத்தி ஆலைகள் இருப்பதில்லை. தனியார் ஆலைகளின் பங்குகளை வாங்கிக்கொண்டு அந்த ஆலைகளைத் தமது ஆலைகளாகக் காட்டி, மின்வாரியத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்துவதிலிருந்து தப்புகின்றன” என்கிறார் காந்தி.

ஆகவே, சொந்த மின் உற்பத்தி நிலையங்கள் (Captive plants) எவை என்பது குறித்து மின்வாரியம் தெளிவான விதிகளை வகுக்க வேண்டும்.

அடுத்ததாக, மின்வாரியத்திற்குப் பெரும் சுமையாக இருப்பது விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரம் சுட்டிக்காட்டப்படுகிறது. கிட்டத்தட்ட 13,000 மில்லியன் யூனிட் மின்சாரம் விவசாய இணைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மின்சாரத்திற்கான மானியம் அரசால் முழுமையாக அளிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்குத் தீர்வாக, விவசாயத்திற்கான மின் மோட்டர்களை சூரிய சக்தியில் இயங்கும் மோட்டர்களாக மாற்றலாம். ஒட்டுமொத்தமாக இதற்கென 36,000 கோடி ரூபாய் செலவாகும். இதில் 30 சதவீதத்தை மத்திய அரசு மானியமாகத் தரும். “ஆனால், இதன் மூலம் வருடத்திற்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டைத் தவிர்க்க முடியும்” என்கிறார் காந்தி.

அடுத்ததாக புதுப்பிக்கத்த எரிசக்தி ஆதாரங்களான காற்றாலை, சூரிய மின்சக்தி ஆலைகள் போன்றவை நிலையற்ற மின்சாரத்தை தருகின்றன. திடீரென காற்றாலைகள் நிற்க நேரிட்டால், உடனடியாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்க முடியாது. ஆகவே, குறுகிய காலத்திற்கு வெளிச் சந்தையில்தான் மின்சாரத்தை வாங்க வேண்டும். இதன் விலை பல சமயங்களில் மிக மிக அதிகமாக இருக்கும். “தமிழ்நாடு மின் வாரியம் மிக நெருக்கடியான காலங்களில் யூனிட் 26 ரூபாய்க்கெல்லாம் வாங்கியிருக்கிறது. ஆகவே, இதனை ஒழுங்குபடுத்த வேண்டும்” என்கிறார் காந்தி.

மின்வாரியத்தைப் பொறுத்தவரை, ஒரு நாள் என்பது 96 ஸ்லாட்களாகப் பிரிக்கப்படுகிறது. எந்தப் பிரிவில் எவ்வளவு மின்சாரம், எந்தத் தொடரமைப்பின் வழியாகச் செல்லும் என்பது முன்கூட்டியே திட்டமிடப்படுகிறது. இதிலிருந்து மாறினால், தொடரமைப்பில் பாதிப்பு ஏற்படும். ஆகவே, Southern Load Dispatch Centre ஒவ்வொரு தென் மாநிலத்திடமிருந்தும் முன்கூட்டியே தகவல்களைப் பெற்றுக்கொள்ளும். அளித்த தகவல்களுக்கு மாறுபட்டு மின்சாரத்தை அனுப்பினாலோ, பெற்றாலோ, விதியை மீறிய மாநிலம் SLDCக்கு அபராதம் செலுத்த வேண்டும். “அப்படி நாம் அபராதம் செலுத்திவரும் நிலையில், மின்வாரியத்திற்கு மின்சாரத்தை அளிக்கும் தனியார் புதுப்பிக்கத்தக்க உற்பத்தி நிலையங்களும் அதுபோன்ற கட்டுப்பாட்டிற்குள் வரச் செய்ய வேண்டும். காற்றாலை மின்சாரத்தை அதுபோலச் செய்ய முடியாது என்றாலும், சூரிய சக்தி மின் ஆலைகளை இந்தக் கட்டுப்பாட்டிற்குள் வரச்செய்யலாம்” என்கிறார் காந்தி.

தமிழ்நாடு மின்வாரியம் இயக்கிவரும் மிகப் பழைய அனல் மின் நிலையங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்ய கூடுதல் செலவுவைக்கின்றன. ஆகவே, பழைய அனல் மின் நிலையங்களை மூடிவிட்டு வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கிக்கொள்ளலாம். இதன் மூலம் செலவைக் கட்டுப்படுத்தலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இது சாத்தியமில்லாதது என்கிறார் காந்தி.

“வெளிச் சந்தையில் எல்லா நேரமும் ஒரே விலைக்குக் கிடைக்காது. தேவையைப் பொறுத்து மின்சாரத்தின் விலை மாறிக்கொண்டேயிருக்கும். பல சமயங்களில் யூனிட் 11 ரூபாய், 12 ரூபாய் என்று விற்பனையாகும். ஆகவே வெளிச் சந்தையை மட்டும் நம்பி நம்முடைய அனல் மின் நிலையங்களை மூடக்கூடாது” என்கிறார் அவர்.

இதுதவிர, தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2 கோடியே 21 லட்சம் வீட்டு மின் இணைப்புகளில் சுமார் 17 லட்சம் மின் இணைப்புகள் 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துபவை. இவர்கள் உயர் வர்க்கத்தினராகக் கருதப்படுகிறார்கள். அப்படியிருக்கும்போது இவர்களுக்கும் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகக் கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியும் இருக்கிறது.

“ஆனால், மின்வாரியத்தைத் தனியார் மயமாக்குவது என்பது சரியான முடிவாக இருக்காது. காரணம், மானியமாக தற்போது மக்களுக்கு கொடுப்பதை தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டியிருக்கும். மானியங்கள் சரியான பிரிவினரையும் சென்றடையாது. ஆகவே, நிர்வாகத்தைச் சீர் செய்வதே சரியான காரியமாக இருக்கும். அதைச் செய்யவும் முடியும்” என்கிறார் காந்தி.