”செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை,மாநில அரசிடம் அதை ஒப்படைக்க வேண்டும்.!

செங்கல்பட்டில் உள்ள 909 கோடியில் உருவாக்கப்பட்ட இந்துஸ்தான் பயோடெக் எனப்படும் தடுப்பூசி தயாரிப்பு வளாகத்தை கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக சும்மா போட்டு வைத்திருந்தது மத்திய அரசு. தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்ட 100 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள அந்த தடுப்பூசி மையத்தில் மக்களின் அவசர தேவைக்காக உற்பத்தியை தொடங்கும் அனுமதி வேண்டும் என கேட்டால் பத்து நாட்களாக மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை. ஆனால், இது நாள் வரை டெண்டர் போட்டு அழைத்த போதும் வராமல் சும்மா இருந்த தனியார் நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்தை தூண்டிவிட்டு அவர்களை அனுப்பி வாய்ப்பிருக்கிறதா பாருங்கள் என தமிழகம் அனுப்பி பார்வையிடச் செய்கிறது பாஜக அரசு!

யார் அந்த பாரத் பயோடெக்..? ஐம்பது ரூபாய் கூட பெறுமானமில்லாத கோவேக்சின் தடுப்பூசியை மத்திய அரசுக்கு 150 ரூபாய் விலையிலும், மாநில அரசுக்கு டூ6,00 விலையிலும், தனியாருக்கு டூ1,200 விலையிலும் வழங்கி வரும் நிறுவனம் தானே..? இப்படி கொள்ளை நோய் காலத்தில் தனியார் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து சொந்த நாட்டு மக்களையே கொள்ளையடிப்பது தான் தேசபக்தியா…?

”செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை, ஒன்று மத்திய அரசு ஏற்று நடத்த வேண்டும், அல்லது மாநில அரசிடம் அதை ஒப்படைக்க வேண்டும். மூன்றாவது அலை, நான்காவது அலை என்று பல்வேறு தரப்பினர் சொல்கின்றனர். அதனால் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதால் இந்த முயற்சியை தமிழக அரசு எடுத்திருக்கின்றது” எனக் கூறி, பிரதமருக்கு கடிதம் எழுதியதோடு நேரடியாக டெல்லிக்கே அமைச்சர் தங்கம் தென்னரசுவையும், டி.ஆர்.பாலு எம்.பியையும் அனுப்பி மத்திய அமைச்சரை சந்தித்து பேச வைத்தார் முதலமைச்சர்  ஸ்டாலின்!

முதலமைச்சர் ஸ்டாலின் அத்தொழிற்சாலையை நேரடியாக சென்று பார்த்து விபரங்களைக் கேட்டறிந்தார். அடுத்த நாள் அமைச்சர்கள்,அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார். தனியாரிடம் பணம் கொடுத்து தடுபூசிகள் வாங்கிக் கொண்டிருந்தால் அரசாங்க கஜானாவே காலியாகிவிடும். அதுவும் இவ்வளவு காத்திருந்து பெறுவதென்றால், மொத்த தமிழக மக்களுக்குக்ம் போட்டு முடிக்க இரண்டு வருடம் ஆகிவிடும். ஆகவே, நாமே பொறுப்பெடுத்து உரிய விஞ்ஞானிகளை வைத்து உற்பத்தி செய்தால், விலை மலிவாக தயாரிக்கலாம். இன்னும் தரத்துடன் விரைவாகவும் தயாரிக்கலாம் எனச் சொல்லித் தான் அன்றைய தினமே டெல்லிக்கு முக்கியஸ்தர்களை அனுப்பிப் பேச வைத்தார்.

செங்கல்பட்டு தடுப்பூசி மையம் மஞ்சள் காமாலை, அம்மை, வெறிநாய்க்கடி தடுப்பூசி,பி.சி.ஜி,தட்டம்மை தடுப்பூசி உள்ளிட்ட  12 தடுப்பூசிகள் தயாரிக்க  சகல வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆலையின் கட்டுமானம்  2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு  2017 ல் அனைத்து வேலைகளும் நிறைவு பெற்றது! இதை தனியார் நிறுவனங்கள் எடுதுச் செய்ய விருப்பமிருந்தால் செய்யலாம் என இவ்வளவு நாளாக அழைத்த போதும் இது வரை யாரும் முன்வரவில்லை! ஆனால், ஆலையை இயக்குவதற்கான  ரூ 209 கோடிதொகையை விடுவிப்பதற்கான ஒப்புதல் கிடைத்தால் உற்பத்தியை தொடங்க தயாராக இருப்பதாக அந்த மையத்தின் விஞ்ஞானிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை கிடப்பில் போட்டுவிட்டது பாஜக அரசு.. அதே சமயம் இந்த கொரோனா காலகட்டத்தில் தனியார் நிறுவனங்களிடமிருந்து பாஜக அரசு 35,000 கோடிகள் பணம் கொடுத்து தடுப்பூசிகளை பெற்றுள்ளது!இந்த ஆலையில் உற்பத்தியை விரைவில் தொடங்க வேண்டும் என்று பலமுறை மத்திய அரசுக்கு  கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளார் மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி டி.கே.ரங்கராஜன். தமிழகத்தின் முக்கிய மருத்துவர்கள் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு நலவாழ்வு இயக்கமும் இது தொடர்பாக பலமுறை மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து அலுத்துவிட்டது!

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தி உற்பத்தைய தொடங்க, தமிழகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க குத்தகைக்கு வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், “செங்கல்பட்டு இந்த்ஸ்தான பயோடெக் தடுப்பூசி மையத்தைத் தமிழகத்துக்கு குத்தகைக்கு விட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பிற மாநிலங்களிலும் இதேபோன்று இருக்கக்கூடிய ஆலைகளை போர்க்கால அடிப்படையில் உற்பத்தி தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். என கேட்கப்பட்டுள்ளது. மக்களுக்கான அடிப்படை உரிமைகள் பிரிவு ஆர்ட்டிகிள் 32-ன் கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

எனவே, உடனடியாக மத்திய அரசு தடுப்பூசிக்கான தேவையை உணர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைத் தமிழக அரசிடம் குத்தகைக்கு வழங்க வேண்டும் என்பதான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

பெருந்தொற்று காலத்தை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் பணம் சம்பாதித்துக் கொழுக்க உதவுவதில் தான் மத்திய அரசு குறியாக உள்ளது! தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ’’செங்கல்பட்டு தடுப்பூசி மையம் ஒன்றும் மெக்கானிக் செட் அல்ல, நினைத்தவுடன் திறந்து செயல்படுத்துவதற்கு. அதை எப்போது திறக்க வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் தான் சொல்வார்கள்.’’ என எகத்தாளமாக பேசுகிறார். கே.டி.ராகவனும் இதே போல கிண்டலாக பேசுகிறார். தமிழக மக்கள் நலனுக்காக ஒரு மாநில அரசு எடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பு தராமல் வில்லத்தனமாக இவர்களால் எப்படி இவ்வாறு பேச முடிகிறது. மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயம் கூட வராதா..?

இந்த ஆலையை உரிய காலத்தில் இயங்க அனுமதித்து இருந்தால், இந்திய முழுமைக்குமே இங்கிருந்து தரமான தடுப்பூசிகளை தயாரித்து தந்திருக்கலாம்! ஆனால், இப்போது கூட அனுமதி தருவதற்கு பாஜக அரசு இவ்வளவு தயக்கம் காட்டுகிறது என்றால்,என்ன அர்த்தம்? தனியாரிடம் ஒப்படைத்தால் லம்பாக கமிஷன் பார்க்கலாம் என்ற எண்ணமா..? அல்லது தடுப்பூசி தயாரிப்புக்கான உண்மையான செலவை தமிழக அரசு கண்டுபிடித்து விட்டதென்றால், தான் அம்பலப்பட்டு விடுவோம் என்ற பயமா..? தெரியவில்லை.

100 ஏக்கர் நிலம் தமிழக அரசு தந்தது. அது கட்டப்பட்டுள்ளது மக்கள் வரிப்பணத்தில்! தமிழகம் தான் அதிக ஜி.எஸ்.டி வரி தரும் மாநிலம்! மக்கள் நலனுக்காக கேட்பது நம் அரசின் உரிமை. அதை தர வேண்டியது ஒன்றிய அரசின் கடமை! தரமறுப்பது கடைந்தெடுத்த கயமை. இந்த விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் பொது நலன் சார்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.