யார் இந்த பிடிஆர் ?

தமிழகத்தின் நிதி அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நீண்ட அரசியல் பாரம்பரியமும், கல்வி அறிவும் கொண்ட அரசியல் தலைவர் !

யார் இந்த பிடிஆர் ?

தமிழகத்தின் பொருளாதாரம் மிக மோசமாக இருக்கும் நிலையில், கொரோனா கழுத்தை நெறிக்கும் இக்கட்டான சூழ்நிலையில்.. தமிழகத்தின் நிதித்துறையை கவனிக்க பன்முகத் தன்மை கொண்ட ஒருவரை களமிறக்கி உள்ளார் முக ஸ்டாலின்!

மத்திய மதுரை சட்டமன்ற உறுப்பினர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். நீதிக்கட்சி சார்பில் தமிழகத்தின் முதல்வராக இருந்த பி.டி. ராஜனின் பேரனான இவர் 2016 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக  மத்திய மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காலத்திலும் மக்கள் மத்தியிலும், கட்சியிலும் நற்பெயரைச் சம்பாதித்திருந்த இவருக்கு, இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.இந்தத்தேர்தலிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அவர், தற்போது தமிழகத்தின் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

1966 ஆம் ஆண்டு பிறந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வேதிப் பொறியியலில் தன் பட்டப்படிப்பைத் திருச்சி என்.ஐ.டி -யிலும் அதன்பின்னர் முதுநிலைப் பட்டப்படிப்பை அமெரிக்காவிலும் முடித்தார். பின்னர், நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தில் பொறியியல் உளவியலில் முனைவர் பட்டமும், எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்டில் நிதி நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.

படிப்பை முடித்த பிறகு, 1990 -ல் செயல்பாடுகள் மற்றும் அமைப்பு மேம்பாடு தொடர்பான தொழிலில் ஈடுபட்ட அவர், 2001 -ல், அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கித்துறை நிறுவனங்களில் ஒன்றான லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் வர்த்தகம் மற்றும் கூட்டுச் சேவை மேலாளராக பணிபுரிந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதிலிருந்து விலகிய அவர், 2008 ஆம் ஆண்டு ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் தலைவராக ஆனார். பின்னர் சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் பணிக்குச் சேர்ந்து, அந்த வங்கியின் நிர்வாக இயக்குநராகவும் உயர்ந்தார். 2014 ஆம் ஆண்டு தனது பணியிலிருந்து விலகி, அரசியலில் ஈடுபடத் துவங்கிய இவர், நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறையில் சுமார் 20 ஆண்டுகள் சர்வதேச அளவிலான அனுபவத்தைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி ரீதியாக இவர் கெமிக்கல் எஞ்சினியரிங், ஆபரேஷன் ரிசர்ச்சில் முதுகலை படிப்பு, Human Factors Engineering / Engineering Psychology துறையில் முனைவர் பட்டம், பின்னர் எம்பிஏ என்று இவர் அதிகம் படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிடெக் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம் – திருச்சி என்ஐடி பிஎச்டி, எம்எஸ் – அமெரிக்காவின் Buffalo பல்கலைக்கழகம். இங்கு அவ்வளவு எளிதாக இடம் கிடைக்காது. எம்பிஏ பட்டம் – அமெரிக்காவில் உள்ள MIT Sloan School of Management பல்கலைக்கழகம். இங்கு இடம் கிடைப்பது கடினம். இதோடு 1990 களில் லேமன் பிரதர்ஸ் நிறுவனம், ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட்ஸ், சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி போன்ற வங்கி, பொருளாதாரம் உள்ளிட்ட நிதி தொடர்பான துறைகளிலும் வேலைகளை பார்த்து இருக்கிறார்.

இப்போ இவரோட அரசியல் பின்புலம் குறித்து பார்ப்போம். இவரின் குடும்பமே அரசியல் ரீதியான மிகப்பெரிய பாரம்பரியம் கொண்ட குடும்பம். இவரின் தாத்தா பி.டி ராஜன்தான் நீதிக்கட்சி சார்பாக தமிழகத்தின் முதல்வராக இருந்தார். இவரின் அப்பா பழனிவேல் ராஜன் தமிழக சட்டசபையையில் அமைச்சராகவும் சபாநாயகராகவும் இருந்துள்ளார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட பிடிஆர் திமுகவில் மிக முக்கியமான தலைவராக தற்போது உருவெடுத்து இருக்கிறார். முக்கியமாக இவரின் ஆங்கில புலமை தேசிய அளவில் திமுகவிற்கு முக்கியமான பலமாக மாறியுள்ளது. அதோடு தமிழக சட்டசபை தேர்தலில் மதுரை மற்றும் மதுரைக்கு கீழே தென் மாவட்டங்களில் திமுகவின் வெற்றிக்கு பிடிஆர் முக்கிய பங்கு வகித்தார்னு சொல்றாங்க. பிடிஆர் திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளரான பிறகுதான் கடந்த லோக்சபா தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் திமுகவிற்காக  சமூக வலைத்தளங்களில் தீவிர பிரச்சார திட்டங்களை வகுத்த தலைவர்களில் இவரும் ஒருவர். திமுக டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடந்த 3 வருடங்களில் மாபெரும் வளர்ச்சி அடைய பிடிஆரின் செயல் திட்டமும் காரணமாக இருந்தது. கோ பேக் மோடி தொடங்கி ஒன்றிணைவோம் வா என்று இணையத்தில் ஹிட் அடித்த எல்லா டிரெண்ட்கள், பிரச்சாரங்களுக்கும் பிடிஆர் மிக முக்கியமான ஒரு காரணமாக இருந்தார். அரசியல் தாண்டி நிர்வாக ரீதியாகவும் பிடிஆர் அனுபவம் மிக்க நபர் ஆவார்.  2016ல் மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வென்ற இவர், மீண்டும் 2021ல் அதே தொகுதியில் வென்று தற்போது தமிழக சட்டசபையில் நிதி அமைச்சராகி உள்ளார்.பிடிஆர் மீது நம்பிக்கை வைத்து முதல்வர் முக ஸ்டாலின் இந்த மிகப்பெரிய துறையை அவரிடம் கொடுத்துள்ளார். நிதித்துறையை, இவ்வளவு இக்கட்டான சூழலில் கவனிக்கும் திறன் படைத்த ஒரு சில தலைவர்களில் பிடிஆர் முக்கியமானவர்… இவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், பிடிஆரின் முதல் பட்ஜெட் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புஎழுந்துள்ளது.பொறுத்திருந்து பார்ப்போம்.

.