தேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் வாகன துறையினர் இறங்க வேண்டும் !

இனி சொந்த காலிலேயே நின்று, தேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் வாகன துறையினர் இறங்க வேண்டும் என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கமான, ’சியாம்’ கூறியுள்ளது.

இது குறித்து, இந்த அமைப்பின் தலைவர், ராஜன் வதேரா கூறியுள்ளதாவது:வாகன துறையினர், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், வரி குறைக்கப்படும் என, மிகவும் நம்பிக்கையோடு இருந்தனர். வாகனங்கள் மீதான, 28 சதவீத வரி, 18 சதவீதமாக குறைக்கப்படும் என, மிகவும் எதிர்பார்க்கப் பட்டது.ஆனால், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், வாகனங்கள் மீதான வரியை குறைக்காத காரணத்தால், இனி சொந்தக் காலிலேயே நின்று, தேவையை அதிகரிக்கும் முயற்சியில் இறங்க வேண்டியது தான்.

வாகனத் தயாரிப்பாளர்கள் சங்கமானது, ஜி.எஸ்.டி.,யை, 28 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாக குறைக்க கோரியதோடு மட்டுமின்றி, 10 முதல், 13 இருக்கைகள் கொண்ட வாகன பிரிவுக்கு, இழப்பீட்டு கூடுதல் வரியை நீக்குமாறும் கேட்டுக்கொண்டது. ஆனால், அரசு, 10 முதல், 13 இருக்கைகள் கொண்ட, 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட வாகன பிரிவுக்கு மட்டும் இழப்பீட்டு கூடுதல் வரியை குறைத்து உள்ளது.எதிர்பார்த்தது போல அறிவிக்காவிடினும், 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட வாகனப் பிரிவுக்கு மட்டும் வரியை குறைத்துள்ளது, ஒருபகுதி சாதகமான விஷயமே.

நம்பிக்கை நிதியமைச்சரின் சமீபத்திய தொடர்ச்சியான அறிவிப்புகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் உள்ளது. இதன் காரணமாக, சந்தை வலுப்பெற்று, வருவாய் உயரும். இதன் பிறகு, வாகனங்கள் மீதான வரியை, அரசால் குறைக்க முடியும் என, நம்புகிறோம்.இதற்கிடையே வரும் பண்டிகை காலம், நுகர்வோரிடம், வாங்கும் எண்ணத்தை துாண்டுவதாக அமையும் என, நாங்கள் கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

அண்மைக் காலமாக, வாகன விற்பனை, தொடர்ந்து சரிந்து வந்த காரணத்தினால், வாகன தயாரிப்பாளர்கள், ஜி.எஸ்.டி.,யை, 28 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என, அரசை வலியுறுத்தி வந்தனர்.வாகன தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும், வரி குறைப்பினை கோரி வந்தன.கூடவே, அனைத்து வாகன உதிரிபாகங்களுக்கும், ஒரே சீராக, 18 சதவீத வரி விதிக்கப்பட வேண்டும் எனவும் கோரி வந்தனர்.தற்போது, 60 சதவீத வாகன உதிரிபாகங்களுக்கு, 18 சதவீத வரியும், மீதி, 40 சதவீத பாகங்களுக்கு, 28 சதவீத வரியும் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய நிறுவனங்களுக்கு, கார்ப்பரேட் வரியை, 15 சதவீதமாக குறைத்திருப்பது, வாகன துறையில், அந்நிய நேரடி முதலீடு உள்ளிட்ட முதலீடுகளுக்கு துணைபுரியும்.மேலும், வாகன துறையில், ‘மேக் இன் இந்தியா’வுக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.

Related posts:

நடிகர் துல்கர் சல்மானின் 'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!

ஆர் ஹேமநாதன் இயக்கத்தில் மிர்ச்சி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'Wife' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

’என்.டி.ஆர்.நீல்’ படத்தின் படப்பிடிப்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி இணைகிறார் என்.டி.ஆர்.!*

இயக்குனர் சச்சின் இயக்கத்தில்,ஐந்து மொழிகளில் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ !

90 வயது தாத்தாவுக்கு சண்டை காட்சிகள் அமைப்பது மிகவும் சவாலாக உள்ளது ! பீட்டர் ஹெயின் சொன்ன ரகசியம்!!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'சக்தி திருமகன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் திருப்தி ரவிந்தரா...