ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வரம்பு தளர்வு !

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை வரம்பை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. அத்துடன் முதலீட்டு வரம்பை ரூ. 25 கோடியாக நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது அதிகரிக்கும்.

இது தொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மிகப் பெரும் சலுகையாக அமைந்துள்ளது.இதற்கு முன்பு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை ரூ. 10 கோடியாக இருந்தது.ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரும் முதலீடுகளுக்கு 1961-ம் ஆண்டைய வருமான வரிசட்டம் 56 (2) பிரிவின் கீழ் வரி விலக்கு அளிப்பதற்கான அறிவிக்கை விரைவில் வெளியாகும் என்று அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த நாளிலிருந்து 7 ஆண்டுகள் வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இத்தகைய வரிச் சலுகை கிடைக்கும் என முன்னர் இருந்த விதிமுறை தற்போது 10 ஆண்டுகள் வரை என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.அதேபோல ஸ்டார்ட் அப் நிறுவனமாக பதிவு செய்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் எந்த ஒரு நிதி ஆண்டிலும் ரூ. 100 கோடியைத் தாண்டியிருக்கக் கூடாது என தற்போது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் இது ரூ. 25 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இது தவிர ரூ. 100 கோடி மதிப்பு அல்லது ஆண்டு வருமானம் ரூ.250 கோடியாக உள்ள நிறுவனங்கள் வருமான வரி விதி 56 (2) பிரிவின் கீழ் ரூ. 25 கோடி வரை விலக்கு பெறலாம்.அதேபோல ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட பங்கு மதிப்பு ரூ. 25 கோடி வரை விலக்கு பெறவும் புதிய விதிமுறை வழிவகை செய்துள்ளது. வெளிநாட்டில் வாழ்பவர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மேற்கொள்ளும் முதலீடு பிரிவு -1ன் கீழ் ரூ. 25 கோடி வரை விலக்கு பெறலாம்.

நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடு மூலம் அசையா சொத்துகளை வாங்கக்கூடாது. அதேசமயம், ரூ. 10 லட்சம் வரை கடன் வாங்குவது மற்றும் மூலதன பங்களிப்பு மற்றும் வர்த்தக நடவடிக்கை அல்லாத பிற நடவடிக்கைகள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது.தொழில்துறை அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள், அவை தனியார் நிறுவனங்களாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் அத்தகைய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் விலக்கு பெற முடியும்.தகுதிபடைத்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுய விண்ணப்பத்தில் தொழில்துறை அங்கீகாரம் பெற்று விலக்கு பெறலாம். இவ்விதம் தாக்கல் செய்யும் நிறுவனங்கள் பற்றிய தகவலை தொழில்துறை மத்திய வருமான வரித்துறை ஆணையத்துக்கு தெரிவிக்கும்.இத்தகைய விலக்கு பெறுவதற்கு ஒவ்வொரு படிவமாக தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. அதேபோல நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பைப் பொறுத்து விலக்கு அளிப்பது என்பதும் கிடையாது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அதிக அளவில் வரி செலுத்துவது தொடர்பான நோட்டீஸ் வந்துள்ளது. இது ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் செயல்பாடுகளை பாதிப்பதாக அமைந்துள்ளது. இதையடுத்தே வரிச் சலுகை, முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.