வாராக் கடன் சிக்கலில் வங்கிகள்..? கடனை கட்ட முடியாமல் தவிக்கும் மின்சார நிறுவனங்கள்?

இந்தியாவில் ஆற்றல் சாரா மின்சார நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய கடன் தொகையினை ஒழுங்காக கொடுக்காததால், மீண்டும் இந்திய வங்கிகளில், வாராக் கடன் பிரச்னை தலை எடுக்கத் தொடங்கி இருக்கிறது.கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த ஆற்றல் சாரா மின்சார தயாரிப்பு நிறுவனத் துறைக்கு 3.22 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீடுகளாக வந்திருக்கிறது. அதோடு வங்கிக் கடன்கள் மூலம், உள்நாட்டு முதலீடுகளும் செய்யப்பட்டிருக்கிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமாராக 40 ஜிகா வாட் மின்சாரத்தை தயாரிக்கக் கூடிய ஆற்றல் சாரா மின்சார தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் 70% கடன் மூலமே தொடங்கப்பட்டு இருக்கின்றன. அதாவது 100 கோடி ரூபாய் முதல் போட்டு தொடங்க வேண்டிய தொழிலில் 70 கோடி ரூபாயை கடன் வாங்கி முதலீடு செய்து இருக்கிறார்கள். சரி இவ்வளவு கடன் வாங்கி தொடங்கிய கம்பெனி நன்றாக இயங்குகிறதா..? என்றால் பதில் நோ என்று தான் வருகிறது.

இப்போது மாநில மின் பகிர்மான நிறுவனங்கள் தான், இந்த ஆற்றால் சாரா மின்சார தயாரிப்பு நிறுவனங்களுக்கு பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால் மாநில மின்சார பகிர்மான நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய பணத்தை ஒழுங்காகக் கொடுப்பது இல்லை. சில மின் பகிர்மான நிறுவனங்கள் 12 மாதமாக பணம் கொடுக்காமல் பேமெண்டை நிலுவையில் வைத்து இருக்கிறார்களாம்.
இப்படி, ஆற்றல் சாரா மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு, மாநில மின்சார பகிர்மான நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய பாக்கி தொகை மட்டும் எவ்வளவு தெரியுமா..? சுமாராக 10,000 கோடி ரூபாய் பாக்கி இருக்கிறதாம். இதுவும் கடந்த ஜூலை 31, 2019 வரையான கணக்கு தானாம்.

தென் இந்தியாவின் பல மாநில மின்சார பகிர்மான நிறுவனங்கள் இந்த பட்டியலில் இருப்பதாக மத்திய மின்சார ஆணையமே சொல்லி இருக்கிறது. இப்படியாக மொத்தம் 15 மின்சார பகிர்மான நிறுவனங்கள், வாங்கிய மின்சாரத்துக்கு பணத்தைச் செலுத்தாமல் இழுத்து அடித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
இதனால் ஆற்றல் சாரா மின்சார நிறுவனங்கள் தங்கள் அன்றாட வியாபார செலவுகளைக் கூட செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அன்றாட வியாபார செலவுகளைக் கூட செய்ய முடியாத நிறுவனங்களால் எப்படி வங்கிக் கடன்களை முழுமையாகச் செலுத்த முடியும்..? இதனால் தான் ஆற்றல் சாரா மின்சார நிறுவனங்களைப் பார்த்து கடன் கொடுத்த வங்கிகள் பயத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள்.