ரூ.84 கோடியில், 240 புதிய பஸ்கள் ! முதல்வர் துவக்கி வைத்தார்.!

சென்னை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்காக, 83.83 கோடி ரூபாயில் வாங்கப்பட்ட, 240 புதிய பஸ்களின் சேவையை, முதல்வர் இ.பி.எஸ்., கொடியசைத்து துவக்கி வைத்தார்.சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு, 37 பஸ்கள்; அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு, 103; விழுப்புரத்திற்கு, 25; சேலத்திற்கு, 10; கோவைக்கு, 20, கும்பகோணத்திற்கு, 35; மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு, தலா, ஐந்து பஸ்கள் என, மொத்தம், 240 புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன.

மோட்டார் வாகன பராமரிப்பு துறை சார்பில், முதல் கட்டமாக, திருச்சி மற்றும் தஞ்சாவூருக்கு, இரண்டு, ‘அம்மா அரசு நடமாடும் பணிமனை வாகனங்கள்’ வாங்கப்பட்டுள்ளன.இவற்றை, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று, தலைமைச் செயலகத்தில், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அத்துடன்,கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில்,திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுாரில், 1.55 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, பஸ் பணிமனை; கோவை போக்குவரத்துக் கழகம் சார்பில், ஊட்டியில், 2 கோடி ரூபாயில் நவீனமயமாக்கப்பட்ட, பஸ் நிலையம் ஆகியவற்றை, முதல்வர், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியே, நேற்று திறந்து வைத்தார்.இதேபோல, பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள பாலங்கள், 92 துணை மின் நிலையங் களையும், முதல்வர் நேற்று திறந்து வைத்தார். துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

* அரசு போக்குவரத்துக் கழகங்களில், பணியின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசு தாரர்களில், 38 பேருக்கு டிரைவர் பணி, 188 பேருக்கு கண்டக்டர் பணி, கருணை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக, ஏழு பேருக்கு, பணி நியமன ஆணைகளை, முதல்வர் நேற்று வழங்கினார் போக்குவரத்துக் கழகங்களில், 2014 – 2016 வரை, 1,828 டிரைவர்கள், 537 கண்டக்டர்கள், தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்டனர். அவர்களில், தகுதி பெற்ற, 1,112 டிரைவர்கள், 162 கண்டக்டர்களை, தினக்கூலி அடிப்படையில், பதவி மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அதற்கான ஆணைகளையும்,முதல்வர் வழங்கினார்.