ரூ.80,000 கோடி வராக் கடன் வசூல் ! நிறுவன திவால் சட்டத்தால் மீட்பு !!

இந்தாண்டு, பல்வேறு நிறுவனங்களின், 80 ஆயிரம் கோடி ரூபாய் வராக் கடன், என்.சி.எல்.டி., எனப்படும் தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் மூலம் மீட்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, 2016ல் அமல்படுத்திய திவால் சட்டம் மூலம், இது சாத்தியமாகியுள்ளது.

இது குறித்து, மத்தியநிறுவன விவகாரங்கள் துறை செயலர், இன்ஜெட்டி ஸ்ரீனிவாஸ் கூறியதாவது: திவால் சட்டம் அறிமுகமான பின், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான, வாராக் கடன் வசூலாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், கடன் மறுசீரமைப்பு திட்டம் மூலமாகவும், என்.சி.எல்.டி.,யில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பாக வசூலிக்கப்பட்ட தொகையும் அடங்கும்.

என்.சி.எல்.டி., மற்றும் என்.சி.எல்.ஏ.டி., முன், 10 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையான புதிய வழக்குகள், திவால் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளை விசாரிக்க, 11, என்.சி.எல்.டி., மன்றங்கள் தான் உள்ளன. எனவே, நாடு முழுவதும், மேலும் பல விசாரணை மன்றங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த மன்றங்களுக்கு உதவ, பயிற்சி பெற்ற ஊழியர்களை நியமிக்க உள்ளோம். குறிப்பாக, இளம் வல்லுனர்கள் மற்றும் உதவியாளர்கள் அதிக அளவில் நியமிக்கப்படுவர்.அடுத்த ஆண்டு, என்.சி.எல்.டி., மூலம் வசூலிக்கப்படும் வாராக் கடன், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.