ரூ.1.54 லட்சம் கோடிக்கு வீடுகள் விற்பனை!

ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் மொத்தம் 2.02 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.சென்னையில் ரூ.5,580 கோடி மதிப்புக்கு வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பெங்களூருவில் வீடு விற்பனை 7 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மொத்தம் ரூ.1.54 லட்சம் கோடிக்கு புதிய வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.சொத்து ஆலோசனை நிறுவனமான அனராக் பிராப்பர்ட்டி, இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீடு விற்பனை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் மொத்தம் 2.02 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.2018ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் மொத்தம் 1.78 லட்சம் வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. மதிப்பு அடிப்படையில் இந்த ஆண்டில் ரூ.1.54 லட்சம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 16 சதவீத வளர்ச்சியாகும்.

இந்திய நகரங்களிலேயே அதிகபட்சமாக மும்பையில் ரூ.62,970 கோடி மதிப்புக்கு வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டின் ஜனவரி – செப்டம்பரில் விற்பனையான வீடுகளின் மதிப்பை (ரூ.47,240 கோடி) விட இது 33 சதவீதம் அதிகமாகும்.பெங்களூருவில் வீடு விற்பனை 7 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 2018ஆம் ஆண்டில் ரூ.30,310 கோடிக்கு அங்கு வீடுகள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்த ஆண்டில் ரூ.28,160 கோடியாக விற்பனை குறைந்துள்ளது.புனேவில் ரூ.17,530 கோடிக்கும், டெல்லியில் ரூ.24,860 கோடிக்கும், ஹைதராபாத்தில் ரூ.9,400 கோடிக்கும், சென்னையில் ரூ.5,580 கோடிக்கும், கொல்கத்தாவில் ரூ.5,850 கோடிக்கும் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அனராக் பிராப்பர்ட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.