யாத்திசை – விமர்சனம்!

கோடிகளைக் கொட்டி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க வைப்பதற்காக, அந்த படக்குழு ஊர் ஊராய் போய் புரொமோஷன் செய்து கொண்டிருக்க, எங்களாலும் அரசர் கால படத்தை மினிமம் பட்ஜெட்டில் எடுக்க முடியும் என்று சொல்லி கவனம் ஈர்த்து இருக்கிறது யாத்திசை என்கிற இந்தப்படம்.முதலில் இப்படியான ஒரு முயற்சியை குறைந்த பட்ஜெட்டில் எடுத்ததற்கு இயக்குநர் தயாரிப்பாளர் இரண்டு பேரின் தைரியத்தை பாராட்டித் தான் ஆகவேண்டும்.

யாத்திசை திரைப்படம் மக்கள் மத்தியில் ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கான சான்றுதான் படத்தின் ட்ரெய்லர் யூடியூப்பில் 5 மில்லியனுக்கும் மேலான வியூவ்சைப் பெற்றிருப்பது.நாடே அஞ்சி நடுங்கக் கூடிய பாண்டிய மன்னன் ரணதீரனை கருவறுத்து கோட்டையை கைப்பற்ற வேண்டும் என்று ஒரே குறிக்கோளுடன் பயணப்படுகிறான் எயினர் குலத்தைச் சேர்ந்த கொதி.

அவனின் உறுதியை நம்பும் அவனது இனமும் ஒரு கட்டத்தில் அவனுக்கு துணையாக நிற்க, தன் படையுடன் நேரடியாகவே மன்னனுடன் மோதுகிறான் கொதி. இரு பக்கமும் உயிர் பலிகள் ஏற்பட, எயினர் எண்ணிக்கை கண்டு ஓட்டம் பிடிக்கிறான் பாண்டிய மன்னன்.

கொதியின் கைக்கு கோட்டை சென்றுவிட, பெரும் பள்ளிகள் என்ற இனத்தை தன்னுடன் சேர்த்துக் கொண்டு, தன் படையுடன் கோட்டையைக் கைப்பற்ற பாண்டிய மன்னன் முனைகிறான். அவன் கைக்கு கோட்டை வந்து சேர்ந்ததா?.. எயினர்கள் எதிர்ப்பையும் மீறி கோட்டையை அவர்களுக்கு சாதகமாக்கியதா உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே படத்தின் கதை.முதலில் இப்படியான ஒரு முயற்சியை இப்படியான ஒரு பட்ஜெட்டில் எடுத்தற்கு இயக்குநர் தயாரிப்பாளர் உட்பட அனைவருக்கும் முதலில் பாராட்டுகள்

இயக்குநர் தரணி தான் நினைத்த உலகத்தை திரையில் யதார்த்தமாக கொண்டு வர தேர்ந்தெடுத்த இடங்கள் படத்தின் பெரும் பலமாய் அமைந்து இருக்கிறது. அந்த தேடலுக்கு பெரும் உழைப்பு போடப்பட்டிருக்கிறது என்பதும் திரையில் தெளிவாகத் தெரிகிறது.

இரண்டாவது,புது முகங்கள் எப்படியாயினும் நடிகர்களை கதா பாத்திரங்களோடு ஒன்ற வைத்திருப்பது. படத்தின் ஆரம்பத்தில் இந்த முகங்கள் எல்லாம் முன்னணி கதாபாத்திரங்களா என்ற நினைப்பு நமக்கு வந்தாலும், படம் முடியும் போது அந்த கதாபாத்திரங்கள் நம்மை அறியாமலே அதன் உண்மை தன்மையோடு ஒன்றி இருப்பதை உணர முடிகிறது.

அரசனாக நடித்த சக்தி மித்ரன், எயினர் குலத் தலைவனாக நடித்த செயோன் ஆகிய இருவரும் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். இதர கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு குறைவில்லாமல் செய்து இருக்கிறார்கள்.

காட்சிகள் ஓரளவு உண்மைத்தன்மையை பிரதிபலித்தாலும், படத்தின் ஆகப்பெரும் எமோஷன் ஆக்ரோஷமும் கொப்பளிக்கும் கோபமும் தான். படம் அந்த எமோஷனிலேயே ட்ராவல் செய்வது நமக்கு ஒரு கட்டதில் சலிப்பை ஏற்படுத்துகிறது.

கொடுக்கப்பட்ட மினிமம் பட்ஜெட்டில் தான் கிராபிஃக்ஸ் காட்சிகள் அமைத்து இருக்கிறார்கள் என்பது படத்தின் காட்சிகளில் நமக்கு புலப்படுகிறது. படத்தில் வரும் தேவரடியார்கள் கதாபாத்திரத்திரம் அழகாக எழுதப்பட்டிருந்தாலும் அதனை இன்னும் ஆழகமாக பதியவைக்க முயற்சி செய்யவில்லை இயக்குநர்.

பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. பின்னணி இசை, கதைக்கு தேவையான பிரமாண்டத்தை இன்னும் அழுத்தமாக கொடுத்திருக்க தவறியிருக்கிறது. இதுதான் படத்திற்கு ஆகப்பெரும் பலவீனமாக அமைந்து விட்டது. ஒளிப்பதிவு பரவாயில்லை.. இவையெல்லாம் படத்தின் குறைகளாக தென்பட்டாலும் கூட இப்படிப்பட்ட ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்திருப்பதற்காகவே இந்த குறைகளை கொஞ்சம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு யாத்திசையை நம்பி திரையரங்கிற்கு வரலாம்.. காரணம் அவனின் உலகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்லும் வேலையை யாத்திசை கனகச்சிதமாக செய்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Related posts:

இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
இ லவுன்ஜ் மற்றும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் இணைந்து வழங்கும் பிரபல பாடகி சித்ரா பங்குபெறும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட்'!
நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைகிறது!
யோகி பாபு நடிக்கும் 'போட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !
நடிகர் சூர்யா நடிப்பில் 'கங்குவா' படத்தின் புரோமோ டீசர் தற்போது வெளியாகியுள்ளது!*
'இன்று நேற்று நாளை' மற்றும் 'அயலான்' இயக்குநர் ரவிக்குமார் எழுத்தில் உருவாகும் புத்தம் புதிய, சுவாரசிய காலப்பயணக் கதை
ரஜினி சாரை வைத்து படமெடுக்க எனக்கும் ஆசை இருக்கிறது.