மொபைல்போன் தொழிலுக்கு ரூ.48,000 கோடி! 2 லட்சம் பேருக்கு வேலை !!

இந்தியாவை,மொபைல்போன் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு மையமாக மாற்றும் நோக்கில், 48ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டத்தை, மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது.உலகளவில், மொபைல் போன் தயாரிப்பில்,சீனா முதலிடத்திலும்,இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. அதேசமயம் , மொபைல் போன் ஏற்றுமதியில், இந்தியா, ‘டாப் 10’ பட்டியலில் கூட இடம் பெறாத அளவிற்கு மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ், உள்நாட்டில் மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, விற்பனை அடிப்படையில், ஐந்து ஆண்டுகளுக்கு, 48ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

மத்திய நிதி மற்றும் வர்த்தக அமைச்சகம், ‘நிடி ஆயோக்’ ஆகியவை இணைந்து தயாரித்து உள்ள இந்த திட்டத்தை, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை செயல்படுத்த உள்ளது. இத்திட்டம் குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மொபைல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், உதிரிபாகங்கள் தயாரிப்பில், சீனா, வியட்னாம் போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. அடிப்படை கட்டமைப்பு வசதி குறைபாடு, சரக்கு போக்குவரத்து பிரச்னைகள், வட்டிச் சுமை, திறமையான வல்லுனர்களின் பற்றாக்குறை போன்றவற்றால், இந்தியா பின்தங்கியுள்ளது.அதனால், மொபைல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், உதிரிபாகங்கள் துறையில், இந்தியாவை, சர்வதேச மையமாக உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அவற்றில் ஒன்றாக, உள்நாட்டில் மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, அவற்றின் விற்பனை வளர்ச்சிக்கு ஏற்ப, ஐந்து ஆண்டுகளுக்கு 4 – -6 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், ஆக.,1ல் அமலுக்கு வர உள்ளது. மொத்தம், 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டிலான இத்திட்டம் மூலம், 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன், நிறுவனங்களின் மொபைல்போன் விற்பனை, மதிப்பின் அடிப்படையில், 8.20 லட்சம் கோடியாகவும், ஏற்றுமதி 5.80 லட்சம் கோடி ரூபாயாகவும் உயரும். இதன் மூலம், மத்திய அரசுக்கு, 4,782 கோடி ரூபாய், நேரடி வரி வருவாய் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.

இதனால்,‘ஐபோன்,கேலக்ஸி எஸ்’போன்ற,14ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்பிலான ஸ்மார்ட் போன்களை, தயாரிக்கும், ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள், மறைமுகமாக பயன்பெறும். இந்நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில், ஸ்மார்ட் போன்களை, இந்தியாவில் தயாரித்து தரும், பாக்ஸ்கான், பிளக்ஸ், விஸ்ட்ரான் போன்ற நிறுவனங்கள் நேரடியாக பயனடையும்.
உள்நாட்டைச் சேர்ந்த, லாவா, கார்பன், இன்டெக்ஸ்,மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனை அதிகரிக்கவும், ஊக்கச் சலுகை திட்டம் உதவும்.இவ்வாறு, அவர் கூறினார்.

விஸ்வரூப வளர்ச்சி
* இந்தியாவில், மொபைல்போன் தயாரிப்பு, 2014ல், 6 கோடியாக இருந்தது. இது, தற்போது, 22 கோடிக்கும் மேலாக உயர்ந்துள்ளது.* இதே காலத்தில், உள்நாட்டில் மொபைல்போன் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நிறுவனங்கள் எண்ணிக்கை, மூன்றில் இருந்து, 268 ஆக அதிகரித்துள்ளது.* கடந்த, 2016ல், ஸ்மார்ட்போன் பயன்பாடு, 36 கோடியாக இருந்தது. இது, 2021ல், இரு மடங்கு உயர்ந்து, 78 கோடியாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.* பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய மொபைல்போன் மற்றும் உதிரிபாகங்கள் துறையில், 3.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.

சந்தை பங்களிப்பு

நிறுவனம் சதவீதம் சாம்சங் 31.38 ஆப்பிள் 22.40 ஹூவே 8.57 ஜியோமி 7.52 ஒப்போ 4.41 எல்.ஜி., 2.89
மோட்டோரோலா 2.72 மொபிசெல் 2.65 லெனோவா 1.51 நோக்கியா 1.19 2019 நிலவரம் – சதவீதத்தில்