மீண்டும் திறக்கப்படுமா தியேட்டர்கள் ?

திரைப்பட தயாரிப்பு அதிகம் ரிஸ்க் உள்ள ஒரு துறை. அதில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள்.அவர்களில் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அவர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்தாலும் அப்படத்தை வெளியிட யாரும் முன்வருவதில்லை. அப்படியே வெளியிட்டாலும் அப்படங்களுக்கு திரையரங்கு மற்றும் ஷோ கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்கள்.

இத்தகைய பிரச்சனைகள் பெரிய நடிகர்கள்-இயக்குனர்கள் படங்களுக்கு அதிகம் இல்லை.இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். ஹிந்தி, தெலுங்கு மற்றும் பல மொழி திரைப்படங்களை இந்த கொரோனா லாக் டவுன் சூழ்நிலையில் அங்குள்ள தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீட்டை எப்படியாவது எடுத்துவிட OTT நிறுவனங்கள் மூலம் முயற்சி செய்து வருகிறார்கள்.

கொரானா வைரஸ் வருவதற்கு முன்னரே திரை உலகம் பலவீனமாகத்தான் இருந்தது. வைரஸ் வந்தது சுத்தமாக இழுத்து மூடி விட்டார்கள்.இனி மீண்டும் திறக்கப்படுமா என்கிற சந்தேகம் ஆந்திரா தெலங்கானா தியேட்டர் அதிபர்களுக்கு வந்து விட்டது.அவர்கள் தான் தமிழகத்திலும் மால் தியேட்டர்களை நடத்தி வருகிறார்கள்.தனியாக குத்தகைக்கு எடுத்தும் நடத்துகிறார்கள்.மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு இருந்தாலும் சில தொழில்களுக்கு விதி விலக்கு அளித்திருக்கிறார்கள்.ஆனால் திரைத்துறை தொடர்பான எந்த அறிவிப்பும் காணப்படவில்லை. இந்தியாவில் மொத்தம் 10 ஆயிரம் தியேட்டர்கள் வரை இருக்கின்றன. 6 லட்சம் தொழிலாளர்கள் நம்பி வாழ்கிறார்கள்.

இருந்தாலும் தற்போதைய டெக்கனிகல் வளர்ச்சியில் தியேட்டர்களுக்கு நிகராக OTT எனப்படும் துறை வளர்ந்திருக்கிறது.நெட்பிளிக்ஸ் உள்பட இந்தியாவில் 10 பெரிய நிறுவனங்கள் தங்களின் இணையதளங்களில் திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றன. வாங்குகிற படங்களுக்கு கை நிறைய காசுகளை உடனடியாக கொடுத்து விடுகிறார்கள்.

இந்தியாவிலுள்ள பல மொழிப்படங்களை இந்த ஓடிடி பிளாட்பார்மில்தான் அதிக அளவில் மக்களும் பார்த்து வருகிறார்கள். இந்த ஓடிடி யை நடிகர்கள் விரும்பவில்லை.தங்களது பிம்பம் மக்களிடம் பெரிதாக சென்றடையாது என்பதால் வெறுக்கிறார்கள். ஆனால் எதிர்வரும் காலங்களில் அந்த பிளாட்பாரம்தான் மக்களின் தேவைக்குரியதாக மாறப்போகிறது என்கிற கருத்தும் இருக்கிறது.

இது தவிர தனியார் டி.வி.சேனல்கள் படங்களை வாங்குகிற முயற்சியில் இருக்கின்றன. சிறிய பட முதலாளிகளுக்கு அந்த சேனல்கள் தற்போது கடவுள் மாதிரி தெரிகின்றன. ஓ டி டி இணையதளங்கள் வழியாக படங்களை பார்ப்பதை மக்கள் விரும்பத் தொடங்கிவிட்டால் தியேட்டர்களின் நிலை என்னவாகும் என்பது தெரியவில்லை.“எதிர்வரும் மாதங்களில் தியேட்டர்கள் திறக்கப்படுகிற சூழல் இல்லை “என்கிறார் சுரேஷ்பாபு .தியேட்டர்களை அதிக அளவில் ஆந்திரா-தெலுங்கானாவில் வைத்திருக்கிறவர்.படப்பிடிப்புகள் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு பிறகு தியேட்டர்களை திறந்தால் நல்லது.தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது “என்கிறார் அவர்.