மிஸ் டிபேட்டர் எனப் பெயரிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டர் !

எந்திரங்கள் ஒரு நாள் உலகை ஆளப் போகின்றன. மனிதர்களை எல்லாம் அழிக்கப் போகின்றன. பல அறிவியல் கட்டுரைகளிலும், சினிமாக்களிலும் இவை அடிக்கடி சொல்லப்பட்டு வருகின்றன.

எந்திரங்களை மனிதனைப் போல் உருவாக்கும் முயற்சிகளும் மிகத் தீவிரமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. தற்போதைய கணினிமய உலகில் எந்திரங்களால் மனிதனுக்கு வேலைவாய்ப்புகளும் கூட பறிபோகப் போகின்றன என்ற அச்சம் நிலவிக் கொண்டிருக்கிறது.

ஐபிஎம் நிறுவனம் ஆறு ஆண்டுகால கடும் உழைப்பில், பல கோடி முதலீட்டில் ஒரு செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டரை உருவாக்கியது. விவாதம் செய்வதில் மனிதனை இந்த எந்திரம் வெல்லும் என்பதை நிரூபிக்கும் வகையில் உருவாக்கியது. ஆனால், 25 நிமிடம்தான். மனித மூளையிடம் தோற்றுப்போய்விட்டது. அதைத் தோற்கடித்தவர் ஒரு இந்தியர்.

மிஸ் டிபேட்டர் எனப் பெயரிடப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டர் என்ன அற்புதத்தை நிகழ்த்தப் போகிறது என்பதைக் காண, நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள், தொழில்நுட்ப துறை அதிபர்கள், மென்பொருள் வல்லுநர்கள் சான் பிரான்சிஸ்கோவில் கூடியிருந்தனர்.

மேடையில் ஆறடி உயரத்தில் ஒரு பிளாக் ஸ்கிரீன் கொண்டுவந்து வைக்கப்பட்டது. அதுதான் மிஸ் டிபேட்டர். அது பேச ஆரம்பித்தது. “நீங்கள் மனிதர்களோடு விவாதம் செய்து வென்றுள்ளீர்கள். ஆனால் இதுவரை எந்திரத்துடன் நீங்கள் போட்டியிட்டதில்லை என்று நினைக்கிறேன். வாருங்கள் மோதலாம். எதிர்காலத்துக்கு உங்களை வரவேற்கிறேன்” என அந்தக் கம்ப்யூட்டர் சவால் விட்டது.

அதனுடன் மோதக் காத்திருந்த இந்தியர் ஹரிஷ் நடராஜன் மெல்லிய புன்னகையுடன் போட்டிக்குக் காத்திருந்தார்.

‘பாலர் பள்ளிக்கு மானியம் தேவையா?’ இதுதான் விவாதத் தலைப்பு.

போட்டிக்கான நேரம் தொடங்கியது தான் தாமதம், மிஸ் டிபேட்டர் சில விநாடிகள் அமைதியாக இருந்தது. உடனே அதன் ஸ்கிரீனில் மூன்று நீல நிற வட்டவடிவங்கள் தோன்றின. அடுத்த சில நிமிடங்களில் செய்திக் கட்டுரைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் என 10 பில்லியன் வரிகளை ஓட்டிப் பார்த்துவிட்டது. விவாதத்துக்கும் தயாரானது.

ஆனால், நம்ம ஆள் ஹரிஷ் நடராஜனோ, கூலாக பேப்பரில்குறிப்புகளைக் கிறுக்கிக்கொண்டிருந்தார். விவாதம் தொடங்கியது. 25 நிமிடங்கள் இருவரும் விவாதம் செய்தனர். முடிவில் பார்வையாளர்கள் வெற்றி கிரீடத்தை ஹரிஷிடம் கொடுத்தனர்.

பார்வையாளர்கள் வாக்கு முழுவதையும் நடராஜனே வென்றார். எங்களுடைய அறிவை வளர்க்க ஐபிஎம் எந்திரம் உதவியாக இருந்தது என்று பார்வையாளர்கள் கூறினார்கள். அவ்வளவுதான். மிஸ் டிபேட்டர் தகவல்களில் மாஸ்டராக இருக்கிறது. ஆனால், உணர்வுகளில் தோற்றுவிட்டது என்றனர். ஆனால் கிட்டத்தட்ட மனிதனின் வெற்றியை அபகரிக்கும் திறனை இந்த மிஸ் டிபேட்டர் கொண்டுள்ளது என்றும் ஒப்புக்கொண்டனர்.

1996-ல் இதே ஐபிஎம் நிறுவனம் உருவாக்கிய கம்ப்யூட்டர், செஸ் கிராண்ட்மாஸ்டர் சாம்பியன் ஆனந்தைத் தோற்கடித்தது. 2011-ல் ஐபிஎம்மின் வாட்சன் சூப்பர் கம்ப்யூட்டர் இரண்டு சாதனையாளர்களை வீழ்த்தியது. ஆனால் விவாதம் என்று வரும்போது மனிதனிடம் எந்த கம்ப்யூட்டராலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. காரணம் விவாதத்தைப் பொறுத்தவரை அது உணர்வுகளோடு தொடர்புடையது. அதற்கு கிரியேட்டிவிட்டி அவசியம். அதையும் குறித்த நேரத்துக்குள் செயல்படுத்த வேண்டும்.

மனித மூளைக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு இந்தச் செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டரை தயார் செய்ய வேண்டும் என்று கருத்துச் சொல்லிவிட்டு கிளம்பினார்களாம் அதை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்.

மனிதனுக்கு இயற்கையாகவே இருக்கும் மூளையின் செயல் திறன், எந்திரத்துக்கு வாய்ப்பது சாத்தியமா என்ற கேள்வி இன்னும் கேள்விக்குறிதான்.