மாரடைப்பு ஏற்பட்டால், செய்ய வேண்டியது என்ன ?

உடனிருப்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், செய்ய வேண்டியது பற்றி, டாக்டர் ஜோஸ்: மாரடைப்பு என்பது, இதயத்திற்கு வரும் ரத்தக் குழாயில், ரத்த ஓட்டம் தடைபடுவதால் ஏற்படுகிறது. ஒரு மனிதனுக்கு, 15 ஆயிரம் லிட்டர் காற்று தேவை. தினமும், 15 ஆயிரம் முதல், 30 ஆயிரம் லிட்டர் வரை காற்றை சுவாசித்தால், ரத்தக் குழாய்கள் உள்ளிட்ட உடலின் எந்த உறுப்பும் பழுதாகாது; மாரடைப்பும் வராது.மாரடைப்பு ஏற்பட்ட நபர், நினைவோடு இருந்தால், அவருக்கு சில முதலுதவி சிகிச்சை அளித்தபடியே, ஆம்புலன்ஸ் வரவழைத்து, மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும். மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அந்த நபர் அறிந்ததும், பயத்தால் பாதிப்பு அதிகமாகும். அச்ச உணர்வு அதிகரிக்கும் போது, உடலில் ரத்தக் குழாய்கள் சுருங்க ஆரம்பிக்கும். இதனால் தான், பயம் ஏற்படும் போது, சிலருக்கு மயக்கம் வருகிறது. எனவே, மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதலில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.ஒரு டம்ளர் சுடுநீரை குடிக்க கொடுக்கலாம். அந்த நேரத்தில், ‘ஆஸ்பிரின் அல்லது நைட்ரோகிளிசரின்’ மாத்திரைகள் இருந்தால், அவற்றில் ஒன்றையோ அல்லது இரண்டையுமே கொடுக்க வேண்டும்.

மாரடைப்பு ஏற்பட்டு, இதயம் திடீரென நின்று போய், நாடித்துடிப்பு இல்லாத நிலைக்கு ஒருவர் போய் விட்டால், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு முன், சி.பி.ஆர்., எனப்படும், ‘கார்டியோ பல்மொனரி ரிசஸ்சிட்டேஷன்’ கொடுக்க வேண்டும்.இதை எவ்வாறு செய்வது என்பதை, டாக்டர்களிடம் கேட்டு, மருத்துவக் குறிப்புகளைப் பார்த்து, அனைவரும் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு நிமிடத்திற்கு, 100 முறை என்ற அளவில், மார்பில் கை வைத்து, தொடர்ந்து அழுத்தி, 1 அங்குலம் அளவுக்கு மார்புக் கூடு கீழிறங்குமாறு செய்ய வேண்டும். இதன் மூலம், அந்த நபரை சாவிலிருந்து, 50 சதவீதம் காப்பாற்றி விடலாம். உயர் ரத்த அழுத்தம், அதிக உடல் எடை பிரச்னை போன்றவற்றாலும், புகை பிடித்தல் போன்ற தவறான பழக்கங்களாலும், மாரடைப்பு ஏற்படலாம். மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க, தினமும் குறைந்தபட்சம், 45 நிமிடங்கள் முதல், ஒரு மணி நேரம் வரை நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

நன்கு சுவாசிக்க வேண்டும்; சுவாசத்தை வேகமாக எடுக்காமல், நீண்ட சுவாசம் எடுக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் போன்ற சத்தான, நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்காமல், ஆறு முதல், எட்டு மணி நேரம் துாங்குவது அவசியம்!