மனிதர்கள் உண்ணும் உணவில் பிளாஸ்டிக் துகள்கள் ?

மனிதர்கள் உண்ணும் உணவில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுகின்றன என்ற அதிர்ச்சித் தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கின்றனர். தங்களால் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட ஒவ்வொரு மாதிரியிலும், ஒன்பது வெவ்வேறு வகை பிளாஸ்டிக் பொருட்களின் சிறிய துகள்கள் காணப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். உணவின் மூலம் குடலுக்குள் செல்லும் பிளாஸ்டிக் துகள்கள், உடலின் நோய் எதிர்ப்புக் கட்டமைப்பைப் பாதிப்பதோடு, தீங்கு விளைவிக்கக்கூடிய வைரஸ்களை விருத்தி செய்வதற்கும் வழிவகுக்கின்றன.

டுனா எனப்படும் சூறை மீன், லாப்ஸ்டர் மற்றும் இறால் உணவுகளில் அதிக அளவிலான பிளாஸ்டிக் காணப்பட்டதை முந்தைய ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன. உலகில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் 5 சதவீதம் கடலில் போய்ச் சேருகிறது என்றும், அங்கு அது படிப்படியாக உடைந்து கடல்வாழ் உயிரினங்களின் உணவுடன் கலக்கிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
உணவுகள் அடைக்கப்பட்டுவரும் பாக்கெட்டுகளின் மூலமாகவோ உணவை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் நுட்பங்கள் மூலமாகவோ உணவில் பிளாஸ்டிக் சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கடிவாளம் போடப்பட்டு வருகிறது. அந்த நடவடிக்கைகள் இன்னும் வேகம் பிடிக்க வேண்டும்!