பொறியியல் கல்லூரிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி உள்ளது. அதாவது 103 பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீதம் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. தமிழகத்தில், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 836 இடங்களுக்கான பொதுப்பிரிவுக்கான பொறியியல் கலந்தாய்வு கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதியோடு நிறைவடைந்தது. இதில், 56. 1 சதவீத இடங்கள் நிரப்பப்பட வில்லை என்ற தகவல் கல்வியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தமிழக அரசு பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொண்ட 461 பொறியியல் கல்லூரிகளில், 33 சதவீத கல்லுரிகள் 20 சதவீதத்திற்கும் குறைவான இடங்களை மட்டுமே நிரப்பியுள்ளன. 103 கல்லூரிகள் வெறும் 10 சதவீதத்திற்கும் குறைவான இடங்களை மட்டுமே நிரப்பியுள்ளன. 20 பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை பூஜ்யமாக உள்ளது.என்னதான் பொறியியல் படிப்பை படித்தாலும் வேலை கிடைப்பதில்லை.தகுதியும் திறமையும் உள்ள ஆசிரியர்களைக் கொண்டு பாடம் கற்பிப்பதில்லை.இது போன்ற காரணங்களினால் மாணவர்களின் பொறியியல் படிப்புக்கான ஆர்வம் குறைந்து வருகிறது.
இதனால், அநேக பொறியியல் கல்லூரிகள் மோசமான நிதி நெருக்கடி காரணமாக கல்லூரியை இழுத்து மூடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. ஒரு கல்வியாண்டில். 50- 60 சதவீத மாணவர்கள் சேர்க்கை இருந்தால் மட்டுமே நிர்வாக செலவுகள், ஆசிரியர்களுக்கு சம்பளம் , தரமான ஆய்வகம் போன்றவைகளை கல்லூரியால் செயல்படுத்த முடியும்.
உடனடியாக, அண்ணா பலகலைக்கழகமும், தமிழக அரசும் இதற்கு தீர்வு காணவில்லை என்றால், மாணவர்களின் கல்வியின் தரம் கேள்விக்குறியாவதோடு, கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பல பொறியியல் கல்லூரிகள் இழுத்து மூட வேண்டிய சூழல் உருவாகும் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கிடையே, ஆண்டின் தொடக்கத்தில் பல பொறியியல் கல்லூரிகள் தங்களை கலைக் கல்லூரியாக மாற்ற அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
எவ்வாறாயினும், பொறியியல் கல்லூரியை கலைக் கல்லூரியாக மாற்றுவதில் பல தொழில்நுட்ப சவால்கள் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், மாணவர்களை உடனடியாக மற்றொரு கல்லூரிக்கு மாற்றுவதால், படிப்பின் மீதுள்ள நம்பகத்தன்மை குறையும் என்றும், பலவித எதிர்மறை மனநிலையும் உருவாகக் கூடும்.
பொதுவாக, கலைக் கல்லூரிகளில் நடைமுறையில் இருக்கும் நிர்வாக அம்சங்கள் வளைந்து கொடுக்கும் தன்மை உடையவை. பொறியியல் சேர்க்கையில் மையப்படுத்தப்பட்ட கவுன்சிலிங் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால், கலைக் கல்லூரி சேர்க்கையில் இதுபோன்ற பொதுவான கட்டுப்பாடுகள் இல்லை. கலைக் கல்லூரிகளில் நன்கொடைகள் மற்றும் சேர்க்கை செயல்முறைகளிலிருந்து அதிகம் சம்பாதிக்கக் கூடியவை. இதனால், கலைக் கல்லூரிகளின் வருவாய் எப்படியும் உறுதிப்படுத்தப்படும் என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, தமிழகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது குறித்து அமைக்கப்பட்ட ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரையில், ” பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பு வாய்ப்பு உள்ளதாகவும், வரி முறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தது. நகர்புற மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்தக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் சார்பில் 5,423 கோடி ரூபாய் முதலீட்டில் சோலார் செல் உற்பத்தி செய்யும் திட்டம், வாலாஜாபாத்தில் 250 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்பூங்கா திட்டம் உள்ளிட்ட 8 புதிய தொழில் முதலீட்டு திட்டங்களைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது வரவேற்கத்தக்கதாகும்.