பம்பர்–விமர்சனம் !

பிரமாண்டமான பொருட்செலவு பெரிய நடிகர், நடிகைகள் எதுவும் இல்லாமல் கதையை நம்பி உருவாகும் படங்களின் வரிசையில் ‘பம்பர்.’

நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து திருடுவது, டாஸ்மாக் ‘லாக்’கான நாட்களில் ‘கள்’ளத்தனமாக கல்லா கட்டுவது என்றெல்லாம் குற்றங்களோடு குதூகலமாய் குடும்பம் நடத்துகிற இளைஞன் புலிப்பாண்டி. லோக்கல் போலீஸ் ஏட்டு அவனுக்கு ரொம்பவே சப்போட்டு.அப்புறமென்ன… பணத்துக்காக அதுவரை செய்யாத பெரிய குற்றத்தை செய்யத் தயாராகிறான். அந்த நேரமாகப் பார்த்து புதிதாக வருகிற போலீஸ் எஸ்பி புலிப்பாண்டியையும் அவனுடன் திரியும் கூட்டாளிகளையும் சுற்றி வளைத்து சுளுக்கெடுக்க முயற்சிக்கிறார்.

புலிப்பாண்டியும் அவனுடைய நண்பர்களும சபரிமலைக்கு மாலை போட்டு, தற்காலிக நல்லவனாகி சபரிமலை ஏறுகிறான். அங்கு தென்பட்ட லாட்டரி வியாபாரியிடம் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்குகிறான். வாங்கியவன் தூக்கக் கலக்கத்தில் அந்த சீட்டை அங்கேயே விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்து விடுகிறான்.மாலை போட்ட புண்ணியமோ என்னவோ அவன் வாங்கிய லாட்டரிக்கு 10 கோடி பம்பர் பரிசு விழுகிறது.

அந்த கோடிகளை வைத்து மாமன் மகளை தனக்கு ஜோடியாக்கிக் கொள்ளலாம், வறுமையிலிருந்து விடுபட்டு நல்லவழியில் நடை போடலாம் என்றெல்லாம் யோசிக்கிறான். ஆனால், நினைப்பதெல்லாம் சுலபமாக நடந்துவிடுமா என்ன?கேரளாவில் விட்டு வந்த லாட்டரி சீட்டு ஹீரோவை தேடி வருவது கதையின் உயிரோட்டமான அத்தியாயங்கள்…

படத்தின் ஹீரோ வெற்றி என்றாலும் கதையின் ஹீரோ ஹரீஷ் பெராடி. இஸ்லாமியர், வயது முதிர்ந்து நடை தளர்ந்தவர், கோடீஸ்வரனாக இருந்து லாட்டரி சீட்டு விற்று பிழைப்பு நடத்துகிற அளவுக்கு ஆளானபிறகும் அல்லாவை நம்புபவர், சொல்லிலும் செயலிலும் நேர்மை நியாயம் ஊறிப் போனவர் என மிக மிக கனமான பாத்திரம். அரசாங்க அதிகாரியாக, கொடூர வில்லனாக பார்த்துப் பழகிய அவரிடமிருந்து அப்படியொரு நடிப்பை பார்ப்பது புது அனுபவம். ‘இந்தளவுக்கு நேர்மையான மனுசனுக்கு நல்லதா ஏதாச்சும் செய்யக்கூடாதா?’ என நாமே அல்லாவிடம் கோரிக்கையாக வைக்கும் அளவுக்கு பரிதாபத்தை தேடிக்கொள்கிற நடிப்பு. அதற்காக நிச்சயமாக பாராட்டலாம்!

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிற வெற்றிக்கு இந்த கதையும் அப்படியே அமைந்திருக்கிறது. ‘பிக்பாஸ்’ ஷிவானிக்கு வழக்கமான ஹீரோயின் வேடம். இன்ஸ்டாவில் கவர்ச்சியில் கிறங்கடிப்பவருக்கு ‘பம்பர்’ பாவாடை தாவணி போட்டு அழகு பார்த்திருக்கிறது. அம்மணியின், காட்சிகளுக்கேற்ற சின்னச் சின்ன முகபாவங்கள் கச்சிதமாக இருக்கிறது!

தேர்ந்த நடிப்பால் தன் பாத்திரத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் ஹீரோவுக்கு அம்மாவாக வருகிற ஆதிரா பாண்டிலெஷ்மி!காவல்துறை அதிகாரியாக கவிதா பாரதி. அதிகாரம் அயோக்கியத்தனம் இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து பிரதிபலிக்கும் வேடத்தில் அவரது நடிப்பு நேர்த்தி.

சொத்து பத்துக்கு பஞ்சமில்லாதவராக ஜிபி முத்து. லட்சங்களில் புரள்பவர், வட்டித் தொழில் செய்பவர், நல்ல மனிதர் என தனித்து தெரிகிற பாத்திரம். பரிசுப் பணத்தை வாங்க புறப்படும் ஹீரோவுக்கு தன் காரை கொடுத்தனுப்பும்போது கவர்கிறார். ‘செத்தப் பயலே, பேதில போவான்’ என அவர் பிராண்டு வசனம் என்பதையும் சொல்ல வேண்டும்.

ஹீரோவின் நண்பர்கள், ஹரீஷ் பேரடியின் குடும்பத்தினர், லாட்டரி சீட்டு ஏஜெண்ட் என அத்தனை கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்திருப்பதற்காக படக்குழுவை தனியாக பாராட்டலாம்.எல்லாருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

ஜி பி முத்துவிடமிருந்து கட்டுக் கட்டாக பணத்தைக் கறக்க திட்டமிடும் கதாநாயகன், அவருக்கு துப்பாக்கி வாங்கித்தந்து ஏழரையை இழுத்துவிடுவது, திருட்டுப் பேர்வழிகளிடம் பணத்தைப் பறிகொடுத்தவனை விசாரித்தால் அவனிடமிருந்தது கள்ள நோட்டு என தெரியவருவது, ஹீரோவுக்கு லாட்டரி மூலம் கோடிக்கணக்கில் பணம் வரப்போவதை அறிந்து அக்கம் பக்கத்தினர் கூடுவது, அதுவரை அவனை இளக்காரமாகப் பார்த்த தாய்மாமனின் பொண்டாட்டி குணவதியாய் மாறுவது என ரசிக்கத்தக்க காட்சிகள் அதிகம் இருக்கிறது.
தூத்துக்குடியின் சுற்று வட்டாரம், சபரி மலை,கேரளத்து பசுமை செழுமை என பலவற்றை அதனதன் தன்மை மாறாமல் தன் கேமராவுக்குள் பதிவு செய்திருக்கிறார் ஒளிபரப்பதிவாளர்
வினோத் ரத்தினசாமி.

கோவிந்த வசந்தா இசையில் பாடல்கள் மனதுக்கு இதம் தந்து கடந்துபோக, பின்னணி இசையில் காட்சிகளுக்கேற்றபடி, காட்டுகிற மதத் தளங்களுக்கேற்றபடி பின்னணி இசையில் கவனம் ஈர்க்கிறார் ‘மசாலா கஃபே’ கிருஷ்ணா.

கிளைமாக்ஸ் வரை என் பணம் என் பணம் என சொல்லிக் கொண்டிருந்த, அதனால் நண்பர்களின் வெறுப்பை சம்பாதித்த, தனக்கு அத்தனை உதவி செய்த இஸ்லாமியப் பெரியவரை வேலை முடிந்ததும் மனிதாபமில்லாமல் கழட்டிவிட்ட ஹீரோவை திடுதிப்பென மகாத்மா காந்தி ரேஞ்சுக்கு மனம் மாற்றியிருப்பது பொருத்தமாகத் தெரியவில்லை?

சிலபல குறைகள் இருந்தாலும் எளிய பட்ஜெட்டில் தரமான கதையம்சத்துடன் வந்திருக்கும் இந்த படம், ரத்தச் சகதியில், சாதி வெறிப் படைப்புகளில் உருண்டுபுரண்டு சலிப்படைந்திருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும் பம்பர் பரிசுன்னு தான் சொல்லணும்..!