நாட்டிலேயே அதிகமாகப் பார்க்கப்பட்ட சேனலாக மாறிய தூர்தர்ஷன் !

கடந்த வாரத்தில் நாட்டிலேயே அதிகமாகப் பார்க்கப்பட்ட சேனலாக தூர்தர்ஷன் சேனல் மாறியுள்ளதாக தொலைக்காட்சி பார்வையாளர் ஆய்வு அமைப்பு (பிஏஆர்சி) தெரிவித்துள்ளது.கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி 21 நாட்கள் லாக் டவுனை பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது மக்கள் வீட்டுக்குள்ளே இருக்கும் விதத்தில் மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் ராமாயணம் தொடர் ஒளிபரப்பப்பட்டது. ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தத் தொடரால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

காலையும் மாலையும் ஒளிபரப்பான ராமாயணத் தொடரை மக்கள் ஆர்வத்துடன் பார்த்ததால், பார்வையாளர்கள் சதவீத்தில் 40 சதவீத வளர்ச்சியை தூர்தர்ஷன் சேனல் பெற்றுள்ளது. தூர்தர்ஷன் சேனல் மட்டுமல்லாமல் தனியார் சேனல்களுக்கும் பார்வையாளர்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர் என தொலைக்காட்சி பார்வையாளர் ஆய்வு அமைப்பு (பிஏஆர்சி) தெரிவித்துள்ளது.ராமாயணம் மட்டுமல்லாமல் மகாபாரதம், சக்திமான், புனியாத் ஆகிய தொடர்களையும் மக்கள் விரும்பிப் பார்த்துள்ளனர். இதில் தூர்தர்ஷன் சேனலுக்கு ராமாயணம், மகாபாரதவ்ம் தொடர்கள்தான் பெரும் பார்வையாளர்களைப் பெற்றுக் கொடுத்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அனைத்து மக்களும் இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்கள் விளக்கை அணைத்து தீபம் ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி மக்களிடம் கேட்டுக்கொண்டார். அந்த 9 நிமிடங்கள்தான் நாட்டிலேயே மிகக்குறைவான பார்வையாளர்கள் தொலைக்காட்சியைப் பார்த்துள்ளனர். 2015-ம் ஆண்டுக்குப் பின் பார்வையாளர்கள் குறைந்தது இந்த நிமிடங்களில்தான்.ஒட்டுமொத்தமாகக் கணக்கிடும் போது, கடந்த இருவாரங்களுக்கு முன் இருந்த பார்வையாளர்களைவிட கடந்த வாரம் 4 சதவீதம் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று ஏற்படும் காலத்துக்கு முன் ஒப்பிடும்போது இது 43 சதவீதம் அதிகமாகும்.சேனல்களில் திரைப்படங்கள், செய்திகள் கடந்த வாரத்தில் அதிகமாகப் பார்க்கப்பட்டுள்ளன. இதில் அதிக அளவு இந்தி திரைப்படங்கள் பார்க்கப்பட்டுள்ளன.மேலும், கடந்த காலங்களில் நடந்த விளையாட்டுப் போட்டிகள், கிரிக்கெட் போட்டிகள், டபிள்யு.டபிள்யு.எப் மல்யுத்தம் போன்றவையும் மக்களால் பார்க்கப்பட்டு விளையாட்டு சேனல்களும் 21 சதவீதம் உயர்வைப் பெற்றுள்ளன.